ரொட்டிக்கும், பால் மாவுக்கும் மதம் மாறியவர்கள் என கிண்டலடிக்கும் மூடர்களுக்கு இந்த கதை ஒரு பதிலாக அமையும்.
நம் கண்களுக்கு மிகவும் அழகாக தெரியும் கடல், அங்கு வாழும் மனிதர்களுக்கு கடவுளாக தெரியும், தூத்துக்குடியை சுற்றி இருக்கும் மக்கள் எப்படி கிறிஸ்த்துவை பின்பற்றினார்கள், அவர்களது பெயர் எப்படி போர்த்துக்கீசியர்களின் பெயர்போல இருக்கிறது அதற்கான வரலாறு என்ன அவர்கள் எப்படி மதம் மாறினார்கள்.? ஏன் மதம் மாறினார்கள் என்பது தான் இந்த கருமுத்து நாவல்.
கடலுக்கு சென்று மீன்களை பிடித்து கரை சேரும் மீனவர்கள் தான் அதிக கஷ்டமும், உயிரை பணயம் வைத்தும் பிழைக்கிறார்கள் என்று நினைப்பதுண்டு, முத்துக்குளிப்பவர்களின் வாழ்க்கையை வாசிக்காத வரையில். நிஜத்தில் அந்த மக்கள் தான் கடலுக்குள் சென்று முத்துக்களை எடுத்து அதை வியாபாரம் ஆக்கும் பெரிய தலைவர்களிடம் கொடுத்து அதை அவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்கு இருக்கும் ராணியின் கழுத்திற்கு போய் சேர்கிறது.
இந்த கதையும் முத்துக்குளிக்கும் “பரதவ” இன மக்களின் கதை அவர்கள் இனம் அழிந்த கதை.
இப்போது இருக்கும் கடலோர மக்களை காட்டிலும் அப்போது இருந்தவர்கள் ஒற்றுமையாகவும், சில விதிமுறைகளை பின்பற்றியும் வாழ்ந்து வந்துள்ளனர், உணர்வுகளிலும், மரியாதையை காப்பாற்றுவதிலும் அவர்கள் போர் கூட செய்திருக்கிறார்கள்.
பெண்ணிற்காக சண்டை என்பது பல கதைகளில் படித்திருப்போம் இதில் வரும்போதும் பெரிய ஆச்சரியம் இல்லை ஆனால் அதற்க்கு அடுத்து நடக்கும் காரியங்கள் ஆச்சரியமாக இருந்தது.
தகவலுக்காக சிறந்த புத்தகமாக நிச்சயம் இது இருக்கும் ஆனால் ஒரு நாவல் வடிவமாக பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல முடியும். காரணம் ஒரு பெரிய கருவை குறுகிய பக்ககங்கள் கொண்டு எழுதும் போது அது சரியாக இருக்காது. இந்த நாவல் உண்மையில் 200-லிருந்து 300 பக்கங்கள் வந்திருக்க வேண்டியது. ஒவ்வொரு இனத்தை பற்றியும் 7 துறைமுகங்களில் இருக்கும் மக்களை பற்றியும் விவரித்து கொஞ்சம் கற்பனையும் சேர்த்து எழுதியிருந்தால் அருமையாக இருந்திருக்கும், அவசரத்தில் எழுதியது போல நன்றாகவே தெரிந்தது.
ஆரம்பத்தில் கருமுத்து தான் முக்கிய கதாபாத்திரம் அவனது வாழ்வியல் போல தான் பரதவ மக்களின் வாழ்வியல், கடலுக்குள் மூச்சடக்கி முத்தெடுக்கும் அவனது வீரம் தான் அந்த நிலபரப்பில் பெரியது என்பது போல யூகிக்க வைத்துவிட்டு பின்பு அவனை ஒன்றுமே இல்லை என்பது போல கதை முடிந்துவிட்டது.
சில பக்கங்கள் வாசிக்கையில் படபடப்பை ஏற்படுத்தியது உண்மை. பரதவ மக்களின் தலைக்கு 5 ரூபாய் என்று மூர்கள் அறிவித்தபின் சொந்த இன மக்களின் தலையை அறுத்தெடுக்கும் காட்சிகள் மனதை பிழிந்தன.
பெரியதாக சொல்லவேண்டிய கதையை சிறியதாக சொல்லி தகவல்கள் அதிகம் கொடுத்திருக்கிறார் ஹியூபர்ட் ஜெரால்ட்.