"சுமைதாங்கி" - ஜெயகாந்தன்
=====================
திரு ஜெயகாந்தன் அவர்களின் ஐந்தாவது கதைத் தொகுதி. இச்சிறுகதைத் தொகுப்பு நவம்பர் 1962ல் முதல் பதிப்பு கண்டது.
பதிப்பகத்தாரின் முன்னுரையில்: "இதில் அடங்கியுள்ள கதைகள் யாவும் முன்பே பத்திரிகையில் வெளிவந்து வாசகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது . ஆசிரியர் ஜெயகாந்தனைப் பற்றி வாசகர்களுக்கு சொல்ல முயற்சிப்பது கொல்லன் தெருவில் ஊசி விற்க முயல்வது போலாகும். பூக்கடைக்கு விளம்பரம் வேண்டுமா?"
மொத்தம் 11 சிறுகதைகள் உள்ளன.
சுமைதாங்கி(ஜனவரி 1962) - விபத்தில் பிள்ளையை பறிகொடுத்த தாயின் பாசத்தை உணர்த்தும் கதை. அந்த விபத்தை விசாரிக்கும் காவலரின் பார்வையில், 'இறந்தது தன் பிள்ளை இல்லை' என்ற தாயின் பெருமூச்சை, அந்த தாயின் குறுகிய மனப்பான்மையை பார்க்கிறார். ஆனால் பிள்ளையே இல்லாத தன் மனைவி அந்த இறந்த குழந்தைகாக அரற்றுவதை பார்க்கையில் தாய்மையின் விஸ்தரிப்பை அறிகிறார். அந்த மனைவியை தாங்கும் சுமையுடன் அவள் தாங்கும் இறந்த பிள்ளைக்கான சோகத்தையும் தாங்கும் சுமைதாங்கியாகிறார், அக்காவலர்.
செர்வர் சீனு(அக்டோபர் 1959) - எழுத்தாளனுக்கு பெண் கொடுப்பதை விட ஹோட்டல் சர்வருக்கு பெண் கொடுப்பேன் எனச் சொல்லும் கதையின் முடிவு, அக்கால எழுத்தாளனின் மதிப்பை(!) விளக்கும் கதை.
கேவலம், ஒரு நாய்(நவம்பர் 1959) - தெரு நாயாக இருந்து, இணை பிரியா நண்பர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு, பின் அவர்களுக்குள் ஏற்பட்ட பகையால் துரத்தப்பட்ட நாயின் பார்வையில் சொல்லப்பட்ட பரிதாபக் கதை.
போன வருசம், பொங்கலப்போ(அக்டோபர் 1959) - நான்கு பிள்ளைகள் பெற்ற முனியம்மாள், தனது இந்த பொங்கலுக்கு அவர்கள் யாரும் தன்னுடன் இல்லையே என்ற ஏக்கத்தையும், தான் அவர்களை வளர்த்து வாழ்ந்து வந்ததையும் அசை போடும் கதை. தனது நான்கு மகன்களுடன் காய்கறி வியாபாரம் செயது, கிட்டத்தட்ட 'ராணி ' கணக்காக தான் இருந்த இருப்பை சொல்லியிருக்கும் கதை.
செக்ஷன் நம்பர் 54(ஜூலை 1959)- பட்டிக்காட்டு மைனர் வாழ்க்கை வாழ்ந்து வந்தவன், வீட்டில் கோபித்துக்கொண்டு பட்டணத்திற்குச் சென்று படும் பாட்டை சொல்லும் கதை.
மே -20(அக்டோபர் 1960) - நாற்பதுகளில் வயதுடைய விஸ்வம் என்பவர் கோமாவிலிருந்து நினைவு பெற்று, தனது வாழ்வில் நிகழ்ந்தவற்றை அசை போடுவதாக செல்லும் கதையில், தான் இறக்க போகும் தேதியை முன்பே அறிந்து தனது உற்றார்களை அழைக்கும் விதமாக சொல்லப்பட்டிருக்கிறது. தத்துவார்தங்களாலான கதை.
ரோஜா(அக்டோபர் 1959) - கிழப்பருவம் வரை, இணை சேராதவரின் காதல் கதை, ரோஜாவின் சாட்சியத்தில்.
சிலுவை(மார்ச் 1960) - கன்னியாஸ்த்திரியின் மன உளைச்சலை சொல்லும் கதை.
வெளிச்சம்(மார்ச் 1960)- வறுமையின் கோரப் பிடியில் உள்ள எழுத்தாளனுக்கும், மற்றொரு இளம் பத்திரிகையாள-எழுத்தாளனுக்கும் நடக்கும் சம்பாஷணைகளே இக்கதை. எழுத்தால் எந்த பயனும் இல்லை அதை இயற்றியவனுக்கு என்பதை தர்க்கரீதியில் சொல்லபட்ட கதை.
பௌருஷம்(மே 1957)- தன்னை விரும்பியவனை விடுத்து, பட்டணத்து சொந்தத்தை கரம் பிடித்த கிராமத்து பெண், பட்டணத்திற்கு சென்று அதன் வறுமையில் உழன்று அலங்கோலமாய் திரும்பி தன்னை விரும்பியவனை சேரும் கதை.
துர்க்கை(மார்ச் 1960) - பலகாலம் கழித்து ஊர் திரும்பும் 100வயது பழுத்த கிழம். தனது இளம் வயதில், மனைவியை பழித்த காரணத்தால், வம்சமிழந்து போகட்டும் என சாபம் பெறுகிறான்.
சக்தியின் சொருபமாய் அவள் அளித்த சாபம் வெற்றி பெற்றதா? அக்கிழக் கணவனின் வம்சம், ஒற்றைக் கொடிக் கொழுந்தாகவாவது நிலைத்ததா? என்பதுதான் கதை.
அனைத்து வர்க்க மனித மனங்களின் உள்சென்று தாம் அறிந்த விசயங்களை கதைகளாக எழுதமுடியுமென்றால், நாம் கைகாட்ட கூடியவர்களில் முதன்மையானவர், திரு ஜெயகாந்தன் அவர்கள்!
புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து
//
பிரச்சினைக்குரிய கதைகளை விமர்சனங்களுக்கு ஆளாகும் முறையில் எழுதுகிறவன் என்று பேரெடுத்து விட்டவன். இதனாலேயே என்னை அதாவது என் கதைகளை ரொம்ப பேருக்குப் பிடிக்கும், ரொம்பப் பேருக்கு பிடிக்காது. ஆனால் இருசாராரும் என் கதைகள் படிப்பார்கள். பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதைவிட எல்லோருமே படிக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.
வாழ்கையின் உண்மைகள் செய்திகளாக வருகிறபோது நமது சிறுமைகளின் விஸ்வரூபமாக தோற்றமளிக்கின்றன. வேடிக்கைக்குரிய மாறி வக்கரித்த ரசனைக்கு இலக்காகின்றன. அதுவே ஒரு கதை எழுதுகிறவன் கைவண்ணத்தில் மனித பெருமையின் மகா சமுத்திரமாய் விரிகிறது.
ஊர் என்பது மரமும் குளம் குட்டைகளும் அல்ல... ஊர் என்றால் மனிதர்கள் என்று அர்த்தம். அதனால்தான் என் கதைகளை மண்வாடை அடிக்கிறது இல்லை மனித நெடியே வீசுகிறது.
//