சின்ன விஷயங்களின் மனிதன் - வண்ணதாசன்
கடைசியா எப்போ ஒரு மரத்தையோ இல்ல அதில் இருந்து விழுகிற இலையையோ, வானத்தையே வளைத்து கட்டுகிற வானவில்லையோ, இல்ல கொட்டித் தீர்க்கிற மழையையோ எந்தவித புலம்பலும் இல்லாம மெய் மறந்து ரசிச்சு பார்த்தீங்க.
நம்ம வாழ்க்கையில ஏதோ ஒரு தருணத்தில் இது எல்லாத்தையுமே வியப்பாகவும், ஆச்சரியமாகவும், அடக்க முடியாத எவ்வளவோ கேள்விகளுடனும் கடந்து வந்து இருப்போம், அப்போ நாம எதை தொலைச்சுட்டோம் இவைகளின் மீது நமக்கு இருந்த ஆச்சரியங்களையா இல்ல இந்த பரந்துபட்ட உலகத்தையும் அதன் அழகியலையும் ரசிக்கிற, கொண்டாடுற மனநிலையையா?
பெரிதினும் பெரியதை தேடி இயந்திரத்தனமாக ஓடிட்டு இருக்குற இந்த காலத்துல நமக்கு பெரிய மனநிறைவையும், சந்தோஷங்களையும் குடுத்துட்டு இருந்த சின்ன சின்ன விஷயங்களை நாம எவ்வளவு எளிதா உணராமலோ, மறந்தோ, இல்ல கடந்தோ போறோம்னு பெரும்பாலான சமயங்கள்ல நமக்கே தெரியறது இல்ல.
அப்படி சின்ன சின்ன விஷயங்கள் என்னத்த தான் கொடுக்கும் என்கிற கேள்விக்கு, என்னதான் கடல்ல முழுசா மணிக்கணக்குல நனைந்தாலும் முதல் அலை காலை உரசும் போது குடுக்கிற மகிழ்ச்சி இருக்குல, என்னதான் மனமும், சுவையும் இருக்குற காப்பியை முழுசா குடிச்சதும் திருப்திகரமாக இருந்தாலும் முதல் துளி பருகும் போது ஏற்படுகிற பரவசம் இருக்குல, என்னதான் வாய் அகல சிரிக்கிற குழந்தையின் சிரிப்பு நம்மையும் சிரிக்க வைத்தாலும் தூங்கிட்ட இருக்குற குழந்தையின் வாய் மூடிய புன்சிரிப்பு நமக்கு குடுக்கிற பேரானந்தம் இருக்குல. இப்படியான அந்த அந்த நேரத்துல நிகழ்கிற ஆச்சரியங்களும், மனநிறைவும் தான் சின்ன சின்ன விசயங்கள் கொடுக்கும்னு நினைக்கிறேன்.
இப்படி சின்ன விஷயங்களின் மனிதனான வண்ணதாசன் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள், மரங்கள், காய்கறி, பழங்கள், பூக்கள், அருவிகள், ஆறுகள், பறவைகள், வெயில், மழை, புகைப்படம், மனித கரங்களின் கதகதப்பு, மனித உணர்வுகள் என ஒவ்வொரு சின்ன விஷயங்களின் அழகையும் கவிதைகள் மாதிரி கொண்டாடி தீர்த்து எழுதி இருக்காரு.
புத்தகத்தை படிச்சு முடிச்சதும் எனக்கு ஏற்பட்ட ஒரே கேள்வி வண்ணதாசன் இப்ப என்ன செஞ்சுட்ட இருப்பாரு என்பது தான். ஒரு வேலை அவர், உடைகளின் கட்டுப்பாடு ஏதும் இன்றி கை கால்களை ஆட்டி சிரிக்கிற குழந்தையாகவோ, தேர்ந்தெடுத்து தண்ணீர் ஊற்றப்படும் செடியாகவோ, கையில் அடிபட்டுருச்சான கடைக்காரரை விசாரிக்கும் சிறுமியாகவோ, வருடலின் ஏக்கத்திற்காக வால் உயர்த்தி ஓடி வரும் நாயாகவோ, பூனைகளுக்கு மிகவும் பிடித்த மீன்காரர் ஆகவோ, மரத்தில் இருந்து கீழே விழும் பழுப்பு இலையாகவோ, காற்றின் அலைக்கழிப்பால் சாலை முழுவதையும் இளம் சிவப்பு ஆக்குகிற தாள் பூ ஆகவோ , நிழலை நகர்த்துகிற வெயிலாகவோ, எல்லாவற்றையும் புதுப்பிக்கும் மழையாகவோ, இப்படி இவற்றில் ஏதேனும் ஒன்றாகவோ இல்லை எல்லாமாகவோ மாறிவிட முயற்சி செய்து கொண்டிருக்க கூடும்.
பெரிதினும் பெரிதை எல்லாம் நான் எழுதவில்லை. சிறிதினும் சிறிதையே எழுதினேன். அந்த சிறிதினும் சிறிதில் பெரிதை உணர்கிறவனாக நான் இருக்கிறேன். எனக்குச் சின்ன விஷயங்களே பெரிய விஷயங்கள்னு, அவர் சொன்ன மாதிரியே சின்ன விஷயங்களின் அழகியலை காட்சியா வடித்து இருக்காரு புத்தகம் முழுவதும்.
சின்ன விஷயங்களின் மனிதனை படித்து நானும் சின்ன சின்ன விஷயங்களின் ரசிகனாகவும், சின்ன விஷயங்களின் மனிதனாகவும் மாறிப்போனேன். வண்ணதாசனை போல மீண்டும் ஒரு முறை சொல்லி பார்க்கிறேன், "சின்ன விஷயங்களின் மனிதன்", அழகாகவும், நன்றாகவும் தான் இருக்கிறது.