பால்யகால சகி
ஆசிரியர் : வைக்கம் முகமது பஷீர்
தமிழில் : குளச்சல் யூசுப்
காலச்சுவடு பதிப்பகம்
குறுநாவல்
80 பக்கங்கள்
காதல் - உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள இயற்கையான ஓர் உணர்வு . ஒரு நொடியில் தோன்றி மறைந்தாலும் , ஒரு யுகம் கடந்து தொடர்ந்தாலும் காதலின் ஆழம் ஒன்று தான் . எங்கு எப்பொழுது யாருக்குள் அது பிறந்து எங்கு எப்பொழுது யாருக்குள் அது மறையும் என்பதை அறிவது கடினம் . ஒரு வேளை பிறப்பும் இறப்பும் காதலுக்கு இல்லாமலும் இருக்கலாம் இங்கு பிறப்பு இறப்பு எல்லாம் உடலுள்ள உயிர்களுக்கு மட்டும்தான் , காதலோ உடல��்ற உயிர் - உன்னதமான உணர்வு , அது இவ்வுலகில் இயற்கையோடு , காற்றோடு , கடலோடு கலந்து காலம்காலமாக வாழ்ந்து கொண்டே வருகிறது . மனிதனோ தனக்கு மட்டுமே அது சொந்தம் என்று எண்ணிக்கொண்டு காதலுக்கு இவன் வரையறை வகுக்கிறான் இந்த கொடுமையை எங்கு சென்று புலம்புவது . ஒரு வகையில் காதலை மனிதனை விட அந்த இயற்கையும் , பிற உயிரினங்களும் மிக தெளிவாக புரிந்துகொண்டிருக்கின்றனர் . இதற்கு சிறந்த உதாரணம் மனிதனின் காதல் நிச்சயம் திருமணத்தில் தான் சென்று முடிய வேண்டும் , அப்படி முடியும் காதல் தான் உண்மையான காதல் என்று இவனே கூறிக்கொள்கிறான் , அதிலும் காதல் தன் வாழ்வில் ஒரு முறை தான் தோன்றவேண்டும் என்றும் , தன் எதிர் பாலினத்தின் மேல் மட்டுமே அது பிறக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டு அலைவதை பார்த்து காதல் எள்ளிநகையாடுவது எனக்கு கேட்கிறது . மனிதனாக காதலை புரிந்துகொண்டவர்கள் சிலரே - குறிப்பாக உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் . அவர்கள் காதலை உணர்ந்தவர்ள் , பல முறை காதல் வயப்பட்டவர்கள் , காதலுக்கு எந்த வேடமும் அணிவிக்காமல் காதலை காதலாக ஏற்றுக்கொண்டு இந்த உலகிற்கு காட்டியவர்கள் . காதலை நான் இந்த உலகிற்கு புரியவைக்க போகிறேன் என்று பட்டியலிட்டு அவர்கள் விளக்கவில்லை , அதற்கு பதிலாக தங்கள் வாழ்க்கையின் காதல் அனுபவத்தை , தாங்கள் பார்த்த உன்னதமான காதல் வாழ்க்கையை அப்படியே ஒளிவுமறைவின்றி இலக்கியத்தில் பதிவு செய்ததன் மூலம் நமக்கு காதலை புரியவைக்க முயற்சிக்கின்றனர் . இந்தியாவில் பஷீர் அதற்கு முன்னோடி . அவருடைய மதில்கள் நாவல் என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத ஒன்று . அந்த புத்தகத்தில் வரும் அந்த பெண்ணின் வாசனையை இன்னும் நான் தேடிக்கொண்டே இருக்கிறேன் . ஒரு வாசனையை எழுத்து வடிவில் உணர்த்த முடியும் என்று நினைத்து , அதில் வெற்றியும் கண்ட ஒரே எழ��த்தாளர் அவர்தான் . அவருடைய சிறந்த இன்னுமொரு காதல் படைப்பு தான் இந்த பால்யகால சகி .
மஜீ0து - சுகறா இருவரும் தங்கள் பால்யத்தை அண்டை வீட்டு நண்பர்களாக தொடங்குகின்றனர் . சுகறா விற்கு மிகவும் பிடித்த தன் வீட்டின் எதிரே உள்ள மாமரத்தின் பழங்களை ருசிப்பதற்காக காத்திருக்கிறாள் ஆனால் மஜீது அவளை முந்திக்கொள்கிறான் , ஒரு நாள் இருவரும் சண்டையிட - அவன் அனைத்தையும் அவளுக்கே கொடுத்துவிட்டு எல்லாமும் உனக்குத்தான் சுகறா என்றவுடன் அவர்கள் நட்பு தொடங்குகிறது . எல்லோரையும் போல பால்யகாலம் அவர்களுக்கும் அளவில்லா சந்தோசத்தை மட்டுமே கொடுத்தது . வாழ்வில் விவரம் தெரிய தொடங்கியதும் , வாழ்கை புரியத்தொடங்கும் தருணம் எல்லாமும் ஒரே நாளில் மாறிவிடுகிறது . தந்தையின் இறப்பு , குடும்ப வறுமை , மஜீதின் பிரிவு , குடும்ப சுமையென சுகறா வின் வாழ்க்கை ஒரே நாளில் தடம்புரள்கிறது . அது ஏனோ தெரியவில்லை தந்தையை இழந்த பெண்களின் வாழ்க்கையில் துன்பம் நிரந்தரமாக தங்கிவிடுகிறது . சுகறாவை வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து நலிவடைய செய்கிறது . மறுபக்கம் மஜீதுக்கு வெளியுலகம் வாழ்க்கையை புரியவைக்கிறது , வீடு திரும்பும் சமையம் அவன் தந்தை சொத்தை இழந்து , அவன் குடும்பமே வறுமையில் தத்தளிக்கிறது , இவனோ வெறுங்கையுடன் வெறும் வாழ்க்கை அனுபவங்களையும் , சில புத்தகங்களை மட்டுமே சுமந்து வருகிறான் . மீண்டும் மஜீது - சுகறாவின் சந்திப்பு கால இடைவெளியின் நிரப்ப முடியாத வெற்றிடங்களின் பிம்பங்களாக காட்சியளிக்கின்றன . மாமரமும் , தோட்டமும் , பால்யகால காதலும் மட்டுமே அவர்கள் வாழ்க்கையில் இன்னமும் அப்படியே இருந்தது , நினைவுகளை மீட்டெடுக்க முயன்று , மஜீது சுகறாவின் வாழ்கையையும் சேர்ந்து சுமக்க முற்படுகிறான் . மீண்டும் வேலைக்காக அனைத்தையும் பிரிந்து செல்கிறான் , ஆனால் இம்முறை தனக்காக காத்திருக்க சுகறா இருக்கிறாள் என்ற பெரும் நம்பிக்கையை சுமந்து செல்கிறான் . மஜீது திரும்பினானா ? சுகறா வின் வாழ்வில் ஒரு துளியேனும் மகிழ்ச்சி தோன்றியதா ? மஜீது -சுகறா காதல் பயணம் தொடர்ந்ததா ? என்பதே கதையின் முடிவு .
இந்த புத்தகம் இந்திய இலக்கியத்தில் சேமித்து பல தலைமுரைகளுக்கு கடத்தி செல்ல வேண்டிய ஒரு பொக்கிஷம் . இப்படியும் காதலிக்கலாம் என்று சமகால இளைஞர்களுக்கும் , வருங்காலத்தவர்களுக்கும் ஒரு சாட்சியாக காண்பிக்கவேண்டும் . இங்கு யார்வேண்டுமானாலும் இல்லாமல் போகலாம் ஆனால் இந்த காதல் கதைகள் அவர்களின் காதலை போல வாழ்ந்துகொண்டே இருக்கும் . இந்த புத்தகத்தில் மஜீது - சுகறா இவர்களுக்குள் நிகழ்ந்த அந்த முதல் முத்தம் இலக்கியத்தின் உச்சம் என்று சொல்லலாம் . " உள்ளங்காலில் அழுத்தமாக கண்ணம் வைத்து ஒரு முத்தம் பதித்தாள் - முதல் முத்தம் " தன் காதலின் ஆழத்தை கட்டியுடன் வேதனையில் துடித்த தன் காதலனின் உள்ளங்காலில் கண்ணம் பதிக்க முத்தம் கொடுக்கும் ஒரு காதலை இந்திய இலக்கியம் தவிற வேறு எங்கே எழுதிவிட முடியும் .
கதையின் சிறப்பு என்னவென்றால் - பஷீர் எழுத்து வடிவில் காட்சிகளை புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களாக நமக்கு திறந்து காட்டிக்கொண்டே செல்கிறார் . ஒரு 80 பக்க குறுநாவலுக்குள் இது எப்படி சாத்தியம் என்றால் ? நீங்கள் நிச்சயம் வாசித்து அதனை உணர்ந்து அந்த உலகிற்குள் பிரவேசித்து பார்க்க வேண்டும் . பஷீர் நினைத்திருந்தால் இந்த கதையை ஒரு நீண்ட நெடிய நாவலாக எழுதியிருக்கலாம் , ஆனால் அவர் மஜீது - சுகறா மீதோ , அவர்களின் வாழ்வின் மீதோ நம்மிடமிருந்து அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை . தன் கலையில் தேர்ந்த ஓவியன் தனக்கு அளித்த ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் தான் இந்த உலகிற்கு கூற விரும்புவதை எந்தவொரு கூக்குரலுமின்றி வண்ணங்களுடன் ஓவியத்தின் வழி இந்த உலகிற்கு உரக்க கூறிவிடுகிறான் . இந்த கதையை பஷீர் ஒரு கைதேர்ந்த ஓவியனை போலத்தான் படைத்துள்ளார் . காதலும் ஒரு ஓவியம் போலத்தானே - தீட்டிய ஓவியன் மறைந்துவிடலாம் , ஓவியத்தில் உள்ளவை உலகத்திலிருந்து மறைந்துபோகலாம் , ஆனால் ஓவியம் அந்த நிகழ்வை , அத்தருணத்தை , அந்த நொடியை அப்படியே தனக்குள் தேக்கிவைத்து காலம் கடத்தி செல்கிறது . காலத்தை உறையவைக்கும் ஓவியத்தை போல காதலும் நினைவுகளை தனக்குள் உறையவைக்கும் சக்தி கொண்டது . உறைந்துபோன காதல் ஒன்று நம் அனைவரின் மனதிலும் இன்னும் கரைந்து போகாமல் இருக்கத்தானே செய்கிறது . அதனை ஒரு முறை மீண்டும் நினைத்து பார்க்க சந்தர்ப்பம் கொடுக்கும் படைப்பு இந்த பால்யகால சகி .
---இர.மௌலிதரன்
9-11-2024
காலை 11.20