இலக்கியத்தில் ரசனை என்பது தானாக ருசி பார்த்து ருசி பார்த்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. எத்தனை சொல்லிக் கொடுத்தாலும் வராது பள்ளியில் படிப்பதுபோலப் படித்து மனப்பாடம் பண்ணிக்கொள்வது அல்ல அது. பல நூல்களைப் படித்துப் படித்து ருசியை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த நூல்களைப் படித்து எப்படி வளர்த்துக்கொள்வது சாத்தியம் என்பது பிரச்னை. நூலளவே யாகுமாம் நுண்ணறிவு என்பது ஒரு வழிகாட்டியாகும். டால்ஸ்டாயின் நூல்களைப் படித்துப்படித்து டால்ஸ்டாய் ஆகி விட முடியாது என்பது ஒன்று - டால்ஸ்டாய் ஆக வேண்டுமா என்பது இன்னொன்று. ஆனால் டால்ஸ்டாயைப் படித்துப் படித்து அன்பு என்னும் சிந்தனையையும் வேறு பல மகோந்நதமான சிந்தனைகளையும் பழக்கப் படுத்திக்கொள்ளலாம். ஷேக்ஸ்பியர் என்கிற இலக்கியாசிரியனைப் படித்து மனிதனின் சாதாரணத்தையும் அசாதாரணத்தையும், மேன்மையையும், தாழ்மையையும் புரிந்துகொள்ளலாம். டாஸ்டாவ்ஸ்கியின் நாவல்களைப் படித்துப் படித்து மனிதனின் ஆன்மிகத்தின் மேற்போக்கையும் - கீழ்ப்போக்கையும்தான் - உணரலாம். இப்படி எத்தனை எத்தனையோ இன்பங்களை இலக்கியத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள் இலக்கியாசிரியர்கள். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சுவைக்கக் கற்றுக்கொண்டால் இலக்கிய ரசனை ஏற்பட்டுவிடுகிறது.
க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர். எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தேர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தார்.
க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் முதலான பல நூல்கள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக நிற்க வேண்டும் என்ற கவலையில், தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்திலும், பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் தரமாக இயங்கிய க.நா.சு தன் காலத்திற்கு மேலான பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.
நவீன இலக்கிய முயற்சிகளுக்கான சங்கமாகச் செயல்பட்ட மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினர் இவர். 1986ஆம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழக அரசின் விருது, குமாரன் ஆசான் விருது போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டார்.
1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மறைந்தார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க.நா.சு வின் மருமகன்.