மம்முட்டியின் மூன்றாம் பிறை - ( வாழ்வனுபவங்கள் ) புத்தகம் பற்றிய அறிமுகம் / மதிப்புரை
மம்முட்டி எழுதி மலையாளத்தில் வெளியான காய்ச்சப்பாடுகள் எனும் நூலிற்க்கு ஏன் மூன்றாம் பிறை என்று பெயர் வைக்க வேண்டுமென்கிற கேள்விக்கு மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா அவர்கள் முன்னுரையிலேயே விளக்கமளித்திருப்பார். தவிர புத்தகத்தின் அறிமுகம் கிடைத்தது என்னவோ "பவா செல்லதுரை"-யின் கதையாடல் வாயிலாகத்தான்.
மிகச் சரியாக நினைவில்லை. ஏதோவொரு வெறுமை அப்பியிருந்த ஓர் மாலை வேளையில் , மலையிறக்க பாதைவழியாக பயணித்த ஓர் இருசக்கர வாகன பயணத்தில் தான் பவாவின் கதையாடலை கேட்டுக் கொண்டே இப்புத்தகத்தை பற்றி அறிந்து கொண்டேன். என்ன..? மம்முட்டி புத்தகம் எல்லாம் எழுதியிருக்கிறாரா.? என்று வியப்பில் வாங்க வேண்டிய புத்தகப் பட்டியலில் மூன்றாம் பிறையை வைத்துக் கொண்டேன்.
முதன்முதலில் மம்முட்டியை திரையில் நான் பார்த்தது என்னவோ கல்யாண தேன் நிலா பாடல் வாயிலாகத்தான். அதில் அவர் தனது அசலான தொழிலான வழக்கறிஞராக நடித்திருப்பார். அதன் பிறகு எப்போதும் போல ஓர் மலையாள நடிகனாக மட்டுமே தெரியும். சில வருடங்களுக்கு முன் முன்னாள் ஆந்திர முதல்வர் Y.S.ராஜசேகர ரெட்டியின் பயோபிக்கில் நடிப்பதாக " யாத்ரா" எனும் திரைப்பட போஸ்டர்களை வெளியிட்டிருந்தார்கள். மம்முட்டி ஏன் அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டும். வேறு ஆட்களே ஆந்திரத்தில் கிடைக்கவில்லையா என கேள்விகளை எழுப்பிக் கொண்டே படம் திரையிடலுக்காக காத்திருந்து பின் பார்த்தேன். 2013 க்கு பிறகு பிறக்கும் அல்லது கேள்விப்படும் இளைஞர்கள் YSR என்றால் மம்முட்டிதான் ஞாபகத்திற்கு வருவார் என்பதுபோல அசாத்தியமாக நிஜக் கதாபாத்திரமாகவே நடித்திருந்தார்.
உடனே மம்முட்டியின் "அம்பேத்கர்" படம் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது. இணையத்தின் வாயிலாக பார்த்தேன். ஒவ்வொரு சீனும் அம்பேத்கரை பார்த்தது போலவே ஓர் உணர்வு. வெறுமென கருப்பு வெள்ளை படங்களில், வெண்கலச் சிலைகளில் பார்த்து பழகிய அம்பேத்கரை Educate, Agitate and Organize என்று மம்முட்டியில் குரலில் கேட்கும்போது கூடுதல் பரபரப்பும், அசல்தன்மையும் தெரிந்தது. அப்படித்தான் இயக்குனர் ராமின் "பேரன்பு " படமும்.
சரி புத்தகத்திற்கு வருவோம். சிறு சிறு கட்டுரைகளாக மம்முட்டியின் வாழ்வனுபவங்களும், அவரது பார்வைகளையும் அவர் எழுதியிருக்கிறார். பிடிக்காமலிருந்த என் பெயர் எனத் தொடங்கி, மூன்றாம் பிறை, விருந்தினர்கள், சொர்கத்தின் வாசல் (லைலத்துல் கத்ர்) வரை 22கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இது.
ஷுக்கூர் பாவாவைப் பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. அவை வாசிப்போருக்கு காதலின், காமத்தின் , மோகங்களின் , வயதின், பருவங்களின் பார்வைகளை மாற்றியமைக்கும் என்றே நம்புகிறேன். எப்படி அந்த மனிதனால் புனிதம் நிறைந்த இக்காதலை முதுமையின் தொடக்கத்தில் புதுப்பிக்க முடிகிறது. இளமையில் காய்ந்து, கனிந்து , கசிந்துருகி, வெறுப்பும் விரக்தியும் நிறைந்த ஏராளமான காதல் கதைகளை நேரிலும் இலக்கியங்களிலும் வாசித்திருக்கிறோம்.
காதலுக்கு சொற்கள், வார்த்தைகள், பொய்கள் மிக முக்கியம் என நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவை வெங்காய சருகுபோல உரிந்து உரிந்து காணாமல் போகும்போது எதார்த்த காதல் அதற்குள் எந்தளவிற்கு இருக்கும்..? என மம்முக்கா கேள்வி எழுப்புகிறார். ஆனால் இளமை ததும்பும் வயதில் சொற���களற்று, வார்த்தைகளற்று, பொய்களற்று கரிசணத்தோடு பார்வைகளை பரிமாறி தனது காதலை அர்த்தமுள்ளதாக ஆக்கியிருக்கிறார் ஷுக்கூர் பாவா. மம்முக்காவை போலவே நாமும் களங்கமில்லாத தனித்தங்கம் போலிருக்கும் காதல் வேண்டுமென்று தோன்றும் போதெல்லாம் ஷுக்கூர் பாவாவை நினைத்து கொள்ளலாம்.
எல்லோரது வாழ்விலும் இழப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. நேசம் மிகுந்த ஒருவரின் மரணம் தருகிற இழப்பை தாங்கிக் கொள்வதில் பேரிடி இருக்கிறது. இருப்பதின் போது உணரப்படாத நேசம் இழப்பிற்கு பின் தேடி என்ன பிரயோசனம். இழந்துவிட்டோம் என்று நாம் உணரத் தொடங்கும் ஒவ்வொரு நொடியும் ரணம் உடலில் அறிந்து கொள்ள முடியாத பகுதியில் ஊசியால் குத்திக் கிழித்துக் கொண்டே இருக்கும். மம்முட்டியின் வாழ்விலும் இழப்புகள் உண்டு அதனை ரதீஷ் எனும் தலைப்பில் எழுதியிருக்கிறார்.
மூன்றாம் பிறை எனும் ஒரு கதையிருக்கிறது. பேரன்பின் ஆதி ஊற்றுதான் அக்களம். முதியவருக்கும், வயதான அவரது மனைவிக்கும் முதுமைகாலத்தில் நீதிமன்றத்தில் நடக்கும் விவாகரத்து போராட்டம் அது. நெற்றி சுருங்கி, தோல் ஒட்டி , நீதிமன்றக் கூண்டில் தாங்கிப் பிடிப்பதும், அவ்வபோது "என்னால முடியல என்ட தெய்வமே" என அப்பாட்டி மயங்கி விழுவதும் இக்கிழவன் ஓடிச் சென்று தன் தோல் துண்டால் முகம் துடைத்து தாங்கிப் பிடிப்பதும் பேரன்பு அல்லாமல் வெறென்ன. நாம் செலுத்துகிற அன்பும் பிரியங்களும் உள்ளங்கை அளவு மட்டும்தானே. அன்பெனும் கடல் வற்றாமல் இருக்கிறது என்பது அம்முதுமை தம்பதியர் உணர்த்தினர்.
பிரபலங்களை பார்க்கிற போது செல்ஃபிக்களுக்காக அலைகிற, அடிபடுகிற , குட்டிக்கரணம் இடுகிற காலத்தில் இருக்கிறோம். ஏனோ பிரபலங்களைப் பார்த்தால் தூரம் நின்று பார்ப்பதற்கோ, செல்ஃபி எடுப்பதற்கோ, அல்லது கைப்பேசியில் பதிவு செய்து அகமகிழ்ந்து கொள்வதிலோ சிறுதும் நாட்டம் இல்லாதவன் நான். மம்முட்டியை சந்திப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் தான் அவர்கள் மம்முட்டியை சங்கடத்திற்குள்ளாக்கி இருப்பார்கள், அவர்களும் மம்முட்டியால் சங்கடப்பட்டிருக்கலாம். அப்படியான ரசிகர்களான பஷீர் பற்றி, சூட்டிங்கிற்கு வாடகைக்கு வீடு தந்த உரிமையாளரின் மகன் பற்றி, தன் மகனைப் போலவே கருதி தினமும் படப்படிப்பு தளத்திற்கு வந்து ஒரு நாள் பசும்பாலும், மறுநாள் வறுத்த முந்திரியும் கொடுத்த வயதான பாட்டி பற்றியும் மம்முட்டி எழுதியிருக்கிறார்.
இப்புத்தகம் வாங்குவதற்காக கடந்த புத்தகத்திருவிழாவிற்கு YMCA சென்றிருந்தேன். வம்சி பதிப்பகத்தில் இப்புதகத்தை எழுதிய ஷைலஜா அவர்கள் அமர்ந்திருந்தார்கள். மிகுந்த களைப்பின் காரணமாக தனக்கு சாப்பாடு வேண்டாமென்றும் முழாம்பழச் சாறு மட்டும் போதும் என்று தன் மகள் மானசியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பவா, சைலஜா, வம்சி, மானசி, திருவண்ணாமலை என முன்பே பரிட்சயமானதைப் போல நான் நின்றிருந்தேன். இவை எல்லாம் எனக்கு பவா செல்லதுரையின் கதையாடலின் மூலம் தெரியும். இந்த நிகழ்வை நினைவுகளாக்கி சேமித்து வைக்க வேண்டுமென நினைத்தேன். அவரை தெரிந்ததுபோல காட்டிக் கொண்டு வளைந்து நெளிந்து பேசவோ, எழுத்துக்களை கோடிட்டு அறிமுகம் பெறவோ, அதனூடாக ஓர் சங்கடத்தை அவர்களுக்கு ஏற்படுத்தவோ விருப்பமில்லை. எனவே அவரை தெரியாதது போல அவர் அருகே சென்று அருந்ததி ராய் எழுதிய சமீபத்திய புத்தகம் ( பெருமகிழ்வின் பேரவை - The Ministry of Utmost Happiness) எனும் புத்தகம் எங்கே கிடைக்கும் என கேட்டேன். ஷைலஜா அவர்கள் ஒரு ஸ்டாலை காண்பித்து அங்கே கேட்டுப் பாருங்களேன் என்றார். நன்றி சொல்லி விடைபெற்றேன்.
மம்முக்கா எனும் மகத்தான திரைக் கலைஞனை தாண்டி அவரது காய்ச்சப்பாடுகளை-பார்வைகளை , கண்ணோட்டங்களை, வாழ்வியலை, சுகங்களை, துக்கங்களை சிறிதளவு நமக்கும் கடத்துகிறது இந்நூல்.
மலையாளத்தில் வெளியான நூலை தமிழுக்கு கொண்டு வந்த ஷைலஜா அவர்களுக்கும் , அதனை கொண்டு வரச் சொன்ன மம்முக்கா அவர்களுக்கும், பவாவிற்கும், வம்சி பதிப்பகத்தார்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
புத்தகம் : மூன்றாம் பிறை
மலையாளத்தில் : காய்ச்சப்பாடுகள்
ஆசிரியர் : மம்முட்டி
தமிழில் : கே.வி.ஷைலஜா
பக்கம் : 128
விலை : ₹100
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
#കാഴ്ചപ്പാട് #மூன்றாம்_பிறை #மம்முட்டி #மம்முக்கா #காய்ச்சப்பாடுகள் #மூன்றாம்பிறை
:அஹ்மது யஹ்யா அய்யாஷ்