ராஜா வந்திருக்கிறார்:
தொடர்ந்து சில ஆங்கில புத்தகங்கள் படித்து விட்ட படியால், தமிழ் புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆவல் தோன்றிற்று. எனது வாசிக்கும் பழக்கமும் இவ்வாறாக கடந்த சில மாதங்களில் மாறிப்போய் உள்ளது. சரி எந்த புத்தகம் எடுக்கலாம் என்று தடுமாறும் அளவுக்கு புத்தக தட்டுப்பாட்டை வைத்துக்கொள்வதில்லை பெரும்பாலும். ஆதலால் இடைசெவல் கிராமத்தில் பிறந்து பழம்பெரும் எழுத்தாளர் கி.ரா அவர்களோடு நெருக்கமாய் இருந்த கு.அழகிரிசாமி அவர்களுடைய ராஜா வந்திருக்கிறார் புத்தகம் கண்ணில் பட்டது.
மிக நேர்த்தியான கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறதா? அல்லது அவரது கதைகள் அனைத்துமே இவ்வளவு நேர்த்தியான அடித்தளங்கள் கொண்டவையா என்று எண்ணிக்கொண்டே கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். அட்டைப்படம் முதல் கடைசி பக்கம் வரை பிடித்து இருத்தி இட்டு செல்கின்றன கதைகள். வாசிப்புக்குள் இப்படி இருந்தால் பிடிக்கும், வேகமாக விறுவிறுப்பாக இருந்தால் பிடிக்கும் என்ற எல்லைக் கோடுகளை தாண்டி வெகு காலங்கள் ஆயிற்று. மனித மனங்களின் போராட்டங்களை, உறவுகளின் விரிசல்களை, உணர்வுகளின் பிரதிபலிப்பை இயல்பாக சொல்லி செல்கிறார்.
முதல் கதையான வெந்தழலால் வேகாது என்பதில் தொடங்கி எனக்கு மனதுக்கு மிக நெருக்கமாக மாறிப் போன ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, திரிபுரம், சுயரூபம், இரு சகோதரர்கள், குமாரபுரம் ஸ்டேஷன் கதைகளாகட்டும் ஒவ்வொன்றுக்குமான உயிர் நாடியாய் இருப்பது மனிதர்கள் தான். மிக ஆழமாக மனிதர்களையும், மனிதர்களின் வாழ்வியலையும் ஒவ்வொவொரு கதையிலும் அலசியிருக்கிறார். கதைகளுக்குள் சரளமாக மனிதர்கள் வந்து செல்கிறார்கள். ஒரு கதையில் வருகிற அனைவரையும் மனதில் நிறுத்தும் மிகப் பெரிய வரம் எனக்கு கிடைக்கப் பெற்றது.
குறிப்பாக "திரிபுரம்" கதையில் நரசம்மாவும் வெங்கட்டம்மாவும், ஆந்திரத்தில் இருந்து பசி வாட்டும் பொழுதுகளை சுமந்து வரும் போதும், அந்த ஒரு வேளை உணவின் ஏக்கங்களை தூக்கி எறிந்து விடுவார்களா அல்லது உணவின் ஏக்கங்கள் அவர்களை விழுங்கி தீர்த்து விடுமோ என்ற அச்சத்தில் நகர்ந்தன வரிகளும், அவர்களின் அன்றைய பொழுதும்.
இனி அடுத்த நாளை எப்படி அந்த இருவரும் எதிர் கொள்ளப்போகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்வியில் நம்மை நிறைக்காமல் திரிபுரத்து சிவனின் சிரிப்பையே வைத்து முடியுமந்த கதையை தாண்டி அடுத்த கதைக்கு செல்ல நேரங்கள் தேவைப்படுகிறது.
"சிவன் சிரித்துத் திரிபுரத்தை எரித்தான்; இவள் சிரிப்பு என்ன செய்யப் போகிறதோ? அதை இப்போது யார்தான் அறிவார்கள் ? அந்தக் காலத்து புத்திமான்களும் கூட ஏழை அழுத கண்ணீருக்குதான் வாளை உபமானமாகச் சொன்னார்களே ஒழிய, ஏழை சிரித்த சிரிப்பைப் பற்றி பிரஸ்தாபிக்க வில்லையே!"
இரு சகோதரர்கள் கதையின் அடிநாதம், எதுவும் நடக்க வேண்டிய காலங்களில் நடந்தேறவில்லையென்றால் வறுமையில் உழலும் மக்களுக்கு எதுவுமே நிலைப்பட்டு நில்லாது செல்லும் என்பதே. மூத்த அண்ணனின் இந்த வார்த்தைகளில் உயிர் நெரிக்கப்பட்டு வீடு விட்டு வேறு திசையில் பயணிக்கிறான்.
"பிணங்களுக்குள் வரன்முறை கெடுவது அவ்வளவு பயங்கரமான விஷயமல்ல; பிணங்களாக இருப்பதுதாண்டா பெரிய பயங்கரம். போ... எங்காவது போய்ச் சௌக்கியமாக இரு. எப்படி வேண்டுமானாலும் இரு".
அன்பளிப்பு என்னும் கதைக்கு சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்பட்டதாக அந்த கதை படித்து முடித்த பின்புதான் அறிந்தேன். குழந்தைகளின் உலகில் எப்போதுமே வேறுபாட்டிற்கு இடமில்லை என்பதை எத்தனை முறை நாம் உணர்ந்திருக்கிறோம். இருந்தும் அவர்கள் மாறிப் போவதற்கு நாம்தானே முழு முதற்காரணம். "ஏய் உள்ள எடுத்திட்டு போய் சாப்பிடு, இப்படி எல்லாருக்கும் சொல்லாத, நீ முதல்ல முடிச்சியா?". இப்படி சொல்லி சொல்லி அவர்களின் வேறுபாடில்லாத வேர்களை வெந்நீர் ஊற்றி, தினம் தினம் கொன்று கொண்டுதான் இருக்கிறோம்! சாரங்கன் ஒரு போதும் மறக்க முடியாத ஒரு குழந்தை...
கீரனை எரித்து மீண்டும் உயிரோடு கொண்டு வந்த கயிலை சொக்கநாதர் அதன் பிறகு என்னென்ன யோசிக்கிறார் என்பதான போக்கில் வரும் கதை வெந்தழலால் வேகாது, மிக நகைச்சுவையான கற்பனை. அது சிவன், பார்வதி, கீரர், கபிலர் பற்றியோரை மட்டுமே நினைத்து எழுதப்பட்ட கதை என்று நினைப்பதை தாண்டி நம்மைப் பற்றி சொல்லப்பட்ட கதை என்றே எனக்கு தோன்றியது. மன்னிப்பதோடு மட்டும் அந்த மன்னிப்பின் உயிர்ப்பு தீர்ந்திடுமா என்ன!!!!
பசி என்ற கொடுமை பிணி நிறைந்து நம்மை வாட்டும் பொழுதினில் வரும் ஒரு ரூபம் இருக்கும் பாருங்க அதுதான் நம்மில் அனைவரின் சுயரூபம். பெரும்பாலும் அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டோம் அல்லது ஒரு சில நேரங்களில் தள்ளப்பட்டிருப்போம். சுயரூபம் கதையில் இரு நண்பர்களாக நினைத்துக் கொண்ட இருவரின் உரையாடல் வாழ்வின் அனைத்து கதவுகளையும் ஒரு முறை தட்டி செல்கிறது!!!
இந்த தொகுப்பில் மேலும் மிக முக்கியமான கதைகள் இருக்கின்றன. ராஜா வந்திருக்கிறார் கதையின் ஆழம் ஒரு முறை எங்கேயோ யாரோ சொல்ல கேட்டிருப்பதாய் நினைவு. சிறுகதைகளின் தாக்கம் உண்மையில் பெரியதாய் இருக்கும், அதை எழுதுவது நாவல் எழுதுவதைக் காட்டிலும் மிக சிரமம் என்று ஓர் உரையில் எஸ்.ரா அவர்கள் குறிப்பிட்டது நினைவில் வந்து சென்றது.
வேறு வேறு அனுபவங்களை விதைத்து செல்லும் 18 கதைகளை தாங்கிய புத்தகம். படித்துப் பாருங்கள்....