ஒரு கள்ளக்கடத்தல்க்காரன் கறுப்பின மக்களுக்காக போராடும் தலைவனாக எப்படி மாறினான் என்னும் கதையிது.
மால்கம் எக்ஸ் மற்ற போராளிகளை போல சிறுவயது முதலே மக்களுக்காக போராடும் எண்ணம் கொண்டவர் இல்லை. சிறு வயது முதலே வெள்ளையர்களிடம் அடிமைத்தனத்தை அனுபவித்தாலும் ஒரு இடத்தில் தன்னால் வெள்ளையர்களை எதிர்க்க முடியாது என நினைத்தார்.
14 வயதிலேயே படிப்பை விட்டு ஷூ பாலீஸ் போடும் வேலைக்கு சென்றார். பிறகு அங்கிருந்து கஞ்சா விற்கும் ஆட்களிடம் பழக்கம் கிடைத்து கஞ்சா விற்க துவங்கினார். 20 வயதிற்குள்ளாக கஞ்சா குழுவிற்குள் ரெட் எனும் பெயரில் முக்கியமான கடத்தல் காரராக இருந்து வந்தார். 21 வயது வரை போதைப்பொருள், பெண்கள், மது என தனது வாழ்வை முழுமையாக வாழ்ந்து வந்தார்.
இதன் பின்னர் 21 வயதில் துப்பாக்கி வாங்கினார். அதை கொண்டு தன்னை தாழ்வாக நடத்தும் வெள்ளையர்களிடம் வஞ்சம் தீர்க்க நினைத்தார். வெள்ளையர் வீட்டில் கொள்ளையடித்தார். ஆனால் அதில் மாட்டிக்கொண்டார்.
அவருக்கு 10 வருடம் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. சிறைக்கு சென்ற மால்கம் அங்கு துப்பாக்கியை விடவும் பலமான ஒரு ஆயுதத்தை பார்த்தார். புத்தகங்கள், ஆம் அங்கு நூலகம் இருந்தது. அங்கு உள்ள புத்தகங்களை சும்மா படிக்க துவங்கிய மால்கம் அதன் மூலம் கருப்பர்களின் வரலாற்றை அறிந்தார். தொடர்ந்து 10 வருடம் தனது கண் பார்வை கோளாறு ஆகும் வரை பல இலக்கியங்களை படித்துவிட்டு 31 ஆவது வயதில் ஒரு போராளியாக வெளியே வந்தார் மால்கம்.
கருப்பர்களுக்கு ஆதரவான ஒரு இஸ்லாம் இயக்கத்தில் சேர்ந்து தொடர்ந்து வெள்ளையர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை துவங்கினார். காலம் முழுக்க வெள்ளையர்களை திட்டி தீர்த்தார். வெள்ளையர் அனைவரும் மோசமானவர்கள் என்பது அவரது எண்ணம். ஒரு வெள்ளையர் உங்களிடம் கனிவாக பேசினால், நல்லவன் என கூறினால் கூட நம்பாதீர்கள் என மால்கம் பேசியபோது, அதற்கு எதிரான ஒரு வாதத்தை மார்டின் லூதர் கிங் பேசி வந்தார்.
வெள்ளையர்களும், கருப்பர்களும் சமரசமாக வாழும் அமெரிக்காவை உருவாக்க வேண்டும் என மார்ட்டின் நினைத்தார். அதனால் இருவருக்கும் இடையே வன்மத்தை ஏற்படுத்த அவர் விரும்பவில்லை.
ஆனால் வாழ்வில் வெள்ளையர்களால் அதிக பாதிப்புகளை கண்ட மால்கம் அதற்கு உடன் படவில்லை. அவர் அனைத்து வெள்ளையர்களையும் திட்டினார். இதனால் அவருக்கு ஆதரவாக இருந்த வெள்ளையர்கள் கூட அவரை விட்டு விலகினர். இறுதியாக தான் தவறான வழியில் சென்று கொண்டுள்ளோம். இந்த பாதை சமத்துவத்தை ஏற்படுத்தாது என்பதை அறிந்த சில நாட்களில் மால்கம் எக்ஸ் கொல்லப்பட்டார். அவர் உடலில் இருந்து 16 தோட்டாக்கள் எடுக்கப்பட்டன.
எப்போதும் வீரத்தின் பின்னே ஓடுகிற ஒரு கூட்டமாகவே மனிதன் இருப்பதால், சமத்துவத்தை பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. ஒரு சாரார் நீதிக்காக போராடும்போது இன்னொரு சாராரை நீ மோசமானவன், கேடு கெட்டவன் என திட்டிக்கொண்டே இருப்பது ஒரு வீரமான செயலாக இருக்கலாம். ஆனால் அது இரு சாராருக்கு இடையே என்றைக்குமே சுமூகமான உறவை ஏற்படுத்த போவதில்லை. இதை மால்கம் எக்ஸ் புரிந்துக்கொள்வதற்கு வெகு நாட்கள் ஆகியுள்ளது.
இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மால்கம் எக்ஸ் பேசுவார் அப்போது #Notallwhiteman என்கிற ஒரு வாதத்தை வைப்பார். அனைத்து வெள்ளையர்களும் மோசமானவர்கள் என்னும் என் கருத்து தவறானது. அனைத்து மனிதர்களிலும் நல்லவர் கெட்டவர் உள்ளனர். இனி நான் கருப்பர்களை மோசமாக நடத்தும் வெள்ளையர்களை எதிர்த்தே போராடுவேன் என கூறுவார்.
அதற்கு பிறகு அவர் காரில் போகும்போது ஒரு வெள்ளை பெண் கைக்கொடுப்பாள்.
“என்ன மால்கம் இப்போதாவது மனம் மாறினீர்களே! இனி எங்களுக்கு கை கொடுப்பீர்கள் தானே” என கேட்பார்.
மால்கமிற்கு மிகப்பெரும் மன கஷ்டமாகிவிடும்.வெள்ளையர்களிடம் இப்படி ஒரு வெறுப்பை வெளிப்படுத்தியது குறித்து வருத்தப்படுவார்.
இந்த புத்தகம் மால்கம் எக்ஸ் வாழ்க்கையை சுவாரஸ்யமாக நமக்கு சொல்லும் ஒரு புத்தகம்.