Appadurai Muttulingam (Tamil அ. முத்துலிங்கம்) (born 19 January 1937) is a Sri Lankan Tamil author and essayist. His short stories in Tamil have received critical acclaim and won awards in both India and Sri Lanka.
அ. முத்துலிங்கத்தின் தனித்துவமான எழுத்து நடையென்பது, புனைவு அபுனைவாகவும், அபுனைவு புனைவாகவும் உருமாறும் ஒருவகை மாயாஜாலம். 'அமெரிக்க உளவாளி' என்ற தலைப்புடைய இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும், அதே பாணி எழுத்தில் அமைந்திருப்பது, இப்புத்தகத்தை வாசிக்க தொடங்கியவுடனே அது உடனே நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. இத்தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள், சிறுகதை வாசிக்கும் அனுபவத்தை அளிக்கிறது. எழுத்தாளரின் பரந்துபட்ட அனுபவம், கட்டுரைகளின் வழியே கடத்தப்படும் போது, எளிய கதையோட்டத்துடன் கூடிய மொழி நடை, வாசகனுக்கு அந்த அனுபவத்தை தானே துய்த்தது போன்ற உணர்வேற்படுவது, இந்நூலை இன்னும் நெருக்கமாக உணர வைக்கிறது. கட்டுரைகளின் வழியே நாம் சந்திக்கும் மனிதர்கள், நம் அன்றாட வாழ்வின் சலிப்பிலிருந்து விடுபடலையும், மற்றோரு கோணத்தில் அன்றாட வாழ்க்கையின் வேகத்தில் நாம் தவறவிடுகிற மனிதர்கள் சார்ந்த அவதானிப்பையும் நுண்ணுணர்வையும் நினைவுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்நூல், ஒரேயொரு பொருள்/புள்ளி குறித்த கட்டுரைகளின் தொகுப்பாக இல்லாமல், பலதரப்பட்ட பொருட்களையும்/புள்ளிகளையம் தொட்டு சென்றிருப்பது, பல்வேறு சுவையுடன் கூடிய ஒரு நல்ல வாசிப்பனுவத்தை அளிக்கிறது. கட்டுரைகளில் நிகழும் பல சம்பவங்கள், நமக்கு அந்நிய நிலத்தில் நிகழ்ந்தாலும், வாசிக்கும் போது ஒரு துளி கூட அந்நிய உணர்வு ஏற்படாதது ஆசிரியரின் மொழி நடையின் வெற்றி. பல கட்டுரைகள், தன் சொந்த வாழ்வில் நடந்த நிகழ்வுகளை, அதில் பங்குபெறும் ஒரு கதாபாத்திரமாக அவதானிப்பது மட்டுமன்றி, ஒரு மூன்றாம் நபர் அந்நிகழ்வை அவதானிப்பது போல், பல இடங்களில் சுய பகடி செய்வது மற்றும் உலக நடைமுறை என்பனவற்றின் மேல் ஒரு மெலிய புன்னகையுடன் கூடிய கேள்விகளை முன்வைப்பதன் மூலம் வாசகனை இந்த எழுத்துக்கப்பாலும் சிந்திக்க வைக்கிறது என்பதில் ஐயமில்லை.