எண்பதுகளில் ஒழுகினசேரியில் இருந்த சரஸ்வதி தியேட்டர் மிகவும் அழகான ஒன்றாகும். அங்குதான் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் வகையறா திரையுலகின் முடிசூடா மன்னர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். பால்ய காலத்தில் திரையில் இருப்பவர்கள் எல்லாம் நிஜமான மனிதர்கள் என்றும், காட்சி முடிந்ததும் அவர்கள் அனைவரும் திரையரங்கின் பின்வாசல் வழியாக வெளியேறுவார்கள் என்றும் நம்பிக் கொண்டிருந்த காலத்தில் அங்கு பார்த்த சினிமாக்கள் எல்லாம் இப்போதும் தெளிவின்றிதான் துலங்கும். அங்கு கைமுறுக்கு மிகவும் பிரசித்தி. முறுக்கும், கலர் என்றழைக்கப்பட்ட குளிர்பானமும் ஒருங்கிணைந்து நமது இருக்கைக்கு வரும் இடைவேளைகள்தான் அந்த காட்சிகளின் பிரஸ்தாபமான ஒன்றாகக் கருதப்பட்ட தங்கக்காலம் அது.
சரஸ்வதி தியேட்டருக்குத் தெற்கில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீட்டுக்குச் செல்லும் திருப்பத்தின் வலதுபக்கத்தில் இருக்கும் பயோனியர் முத்து தியேட்டரும் புகழ் பெற்ற திரையரங்குகளில் ஒன்று என்றால் அது மிகையாகாது. அங்கே தமிழ்ப்படங்களோடு ஆங்கிலப் படங்களும் திரையிடப்படுவது வழக்கம். முக்கியமான காட்சிகளில் ‘சைட் பாக்ஸ்’ எனப்படும் பிரத்தியேக ஒலிப்பெருக்கிகள் திடீரென்று ஒலித்து பார்வையாளரைத் திடுக்கிடச் செய்துவிடும்.
திரைப்படம் பார்ப்பதற்கு கட்டணங்களாக முன்வரிசை வகுப்பு பெஞ்ச் சீட்டுகளுக்குக் கட்டணமாக ரூ.2.15 காசுகளும், அதற்கு முந்தைய தேர்ட் கிளாஸ் சீட்டுகள் ரூ.3.50 காசுகளும், அதற்கு மேல் செகண்ட் கிளாஸ் ரூ.5.00 காசுகளும், ஃபர்ஸ்ட் கிளாஸ் ரூ.8.00, பால்கனி ரூ.10.00 அதற்கும் மேல் பாக்ஸ் எனப்படும் சில்மிஷ வகுப்புகளுக்கு ரூ.13.00 காசுகளும் வசூலித்தார்கள்.
பயோனியர் முத்து தியேட்டரில் கிடைக்கும் பிரத்தியேகமான அன்னாசிப்பழ குச்சி ஐஸ் உலகில் வேறெங்கும் கிடைக்காது. அதைத் தயாரிக்க தனி ஐஸ் ஃபேக்டரி ஒன்று அங்கிருந்தது.
பயோனியர் முத்து தியேட்டரிலிருந்து வடக்குப் பகுதியில் இருந்த ஒழுகினசேரியில் குமார் தியேட்டர்தான் அன்றைய இளைஞர்களின் கனவுப் பிரதேசம். அங்குதான் மலையாளத்திலிருந்து இறக்குமதியாகும் ஷகிலாக்களும், மாயாக்களும், ரேஷ்மாக்களும் உதயமானார்கள். மேற்படி கனவுக்கன்னிகள் அங்குதான் தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டே குளித்து இளைஞர்களையும், முதியோர்களையும் வியர்வையில் குளிக்க ஆயத்தப் படுத்தினார்கள்.
அவர்கள் குளித்து முடித்த ஈரம் திரையரங்கத் தரைப்பகுதியில் காயவே காலம் குறைய ஆயிற்று. அதன்பின்னர் அந்தத் திரையரங்கத்திற்கு ஸ்ரீ வள்ளி தியேட்டர் என்னும் புதிய நாமம் சூடி இன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தியேட்டருக்கு இன்னொரு சிறப்பம்சம் உண்டு. திரையரங்கத்திற்கு உள்ளே அமர்ந்து படம் பார்க்கும்போது வீடியோவையும், வெளியில் வந்து நின்றால் ஆடியோவையும் கேட்கலாம். உலகத்திரையரங்குகளிலேயே இப்படி ஒரு தொழில் நுட்பம் நாகர்கோவிலிலேயே இன்னொரு திரையரங்கிற்கும் உண்டு என்றால் அதுதான் தங்கம் திரையரங்கம்.
வடசேரி மேட்டில் இருக்கும் தங்கம் தியேட்டர் இன்னொரு வகையான ஒரு அனுபவங்களை வழங்கியதென்றால் அது மிகையில்லை. இரவுப் பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பயணிகளுக்கான காத்திருப்புத் திடல் இந்தத் திரையரங்கம்தான். ஒரு திரையரங்கினுள் பெரிய ஜன்னல் ஒன்று இருப்பது உலகிலேயே இங்குதான் என்பது தனிச்சிறப்பாகும். படம் பார்க்க டிக்கெட் எடுத்த மனிதர்கள் தவிர்த்து நாய், பூனை, ஆடுமாடுகள், மற்றும் கொசுக்களும் இங்கே அமர்ந்து ஜீவ காருணியத்தின் நிமித்தம் படம்பார்க்கும் வகையில் கட்டப்பட்ட, முழுவதும் மூடி வைக்கப்பட்ட உலகின் முதல் ஆம்ஃபி தியேட்டர் எனலாம். அப்படியே வெளியேறி தெற்கில் பயணித்தால் ராஜேஷ் மற்றும் ஸ்ரீ கார்த்திகை திரையரங்கங்கள். இந்த இரண்டு திரையரங்கங்களும் அளவிலும் தரத்திலும் அப்போதிருந்தே குறைத்து மதிப்பிட முடியாத அளவில் தங்களது தொழில் நுட்பங்களையும், கட்டுமான அம்சங்களையும் கொண்டவை. நாகர்கோவிலின் முதல் டி.டி.எஸ் தொழில் நுட்பம் இங்குதான் வந்தது.
வடசேரி பேருந்து நிலையத்தின் மேற்கில் புதுக்குடியிருப்புப் பகுதியில் அமைந்திருந்த ராஜன் பிக்சர் பேலஸ்தான் அப்போதைய இளைஞர்களின் இன்ப ஊற்று. தினமும் நான்கு காட்சிகளுமாக் கூடி காமக்கனி சொட்டும் படங்கள்தான் அங்கே சிறப்பு. அங்கும் சேரக்கிளிகளே கோலோச்சிக் கொண்டிருந்தன என்றாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை எட்டு மணி ஷோ என்றொரு எட்டாக்கனிதான் மிகச்சிறப்பு. இருபது ரூபாய் டிக்கெட் என்பதெல்லாம் அன்றைய பொருளாதார நிலையில் மிக உயர்ந்த தொகையாகும்! அப்போது ஒரு தேநீரின் விலை ஒற்றை ரூபாய்தான்.