உறவுகளின் அருமை பிரச்சனைகளால் ஆட்கொள்ளப்படும் போது அவர்களை ஒதுக்கி விடாமல் தாங்கிகொள்ளத் தோள் கொடுப்பவன் மீதி அபரிமிதமான அன்பு வெளிப்பட்டுத் தன் வாழ்வில் தன்னை விட அவனுக்கே முன்னுரிமை அளித்து வாழ்வையே ஒப்படைப்பவனுக்குக் கிடைக்கும் பாசத்தை அளவிடமுடியாது.
ஆண்கள் அன்பை புரிந்துகொள்ளத் தெரியாதவர்கள் என்ற பொதுவான பேச்சின் ஆழத்தை அறிந்தோம் என்றால் எதுவுமே தெரியாமல் அவர்கள் யார் மீது முதலில் அன்பை வைக்கிறார்களோ அவர்களை மறக்கடிக்க மற்றவர்கள் காட்டும் போலி அன்பை ஏற்காமல் விலகுவனைப் புரிந்து கொள்ளாதவன் என்ற பட்டத்தைக் கொடுத்து திருப்திபட்டுகொள்கிறார்கள்.
சுழல் இல்லா ஆறு இல்லை என்பது போல மனஸ்தாபங்கள் இல்லா குடும்பம் இல்லை ஆனால் அதைத் தாண்டி இணைக்கும் பாசப்பிணைப்புகள் தான் உயிரோட்டம்.
ரேணுகாவிற்கு இரெண்டாவது மகன் பிறந்த நேரம் நடக்கும் துர்சம்பவங்களால் அவன் ஜனித்த நேரம் கெட்டது போல் உருவகப்படுத்திக் குடும்பத்தில் இருந்து அவனைப் பிரிக்க நினைக்கும் கணவன் மற்றும் மாமியாரிடமிருந்து பிரிந்து தந்தையின் உதவியால் இரண்டு மகன்களையும் வளர்த்து ஆளாக்குகிறாள்.
தற்போது முதல் மகன் வினய் சிங்கப்பூரில் இருப்பதால் அவன் சம்பாத்தியத்தில் பெரிய பிளாட் வாங்கிக் குடியேறுகின்றனர். பக்கத்தில் இருக்கும் அபிராமிக்கு இவர்களைப் பிடித்துவிட இரெண்டாவது மகன் மனோஜ் குழந்தையில்லா அவர்களை அம்மா என்று கூப்பிடும் அளவிற்கு நெருக்கமாகின்றனர். ஏர்போட்டில் வினய்க்கு பாண்டியன் என்பவருடன் தகராறு ஆகப் பார்த்தவுடனே கண்டுகொள்கிறான் தங்களைவிட்டு விலகிய தகப்பன் தான் அவர் என்பதை. தன்னுடன் வேலை செய்யும் ஹரிணியைக் காதலித்துக் கைபிடிப்பவனுக்கு இருக்கும் ஒரே தொல்லை இவன் தந்தை தான் ஏமாற்றி அவளின் அத்தையை இரெண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டது , அந்த அத்தை வேறு யாருமில்லை அபிராமி தான்.
தந்தையின் முன்னால் தம்பியை பெரிய ஆளாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று துடிப்புடன் இருப்பவனுக்கு விபத்தில் கால்களை இழந்த மனோஜ் பாட்டு போட்டியில் வென்று சினிமாவில் பாடும் அளவிற்குப் புகழ் பெறுகிறான்.
கணவனைப் பற்றி உண்மை அறிந்த அபிராமி விலகி தன் அண்ணனுடன் மீதி வாழ்வை தொடர்கிறார்.
தம்பிக்காக என்று வாழும் வினய்க்கு ஏற்றவளாக ஹரிணி.சிறு வயதில் மனோஜின் ஊனத்தை மறக்கடிப்பவளாக இருக்கும் மலர் அவனின் பாதியாகிறாள்.