Jump to ratings and reviews
Rate this book

காடோடி

Rate this book
மண் மரித்த கதை...

"ஓர் ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதி. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதம"-நக்கீரன்

நன்கு பருத்து உயர்ந்த நெடுமரம். அதனடியில் நின்று அதன் உயரத்தை அண்ணாந்து பார்க்கிறாள். கண்கள் அதன் பெரும் விரிவை அளக்கின்றன. இரு கைகளையும் அகல விரிக்கிறாள்.

அப்படியே காதலனை அணைப்பதுபோல அம்மரத்தைக் கட்டியணைத்து முத்தமிடுகிறாள். மரவணிகராக இருந்தாலும் இம்மனிதருக்குதான் மரங்களின் மேல் என்னவொரு காதல். அருமையான மரம் தெரியுமா எனப் புகழ்கிறாள். பின்பு மரத்தை மீண்டுமொருமுறை கண்ணால் அளவிட்டுச் செல்கிறாள்.

எப்படியும் அய்யாயிரம் டாலருக்கு போகும்.

அப்படியானால் இது டாலர் காதல்தானா?

நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான குவானைப் பொறுத்தவரை மரம் என்றால் அது இலைகள் அல்ல. பூக்கள் அல்ல. காய்கள் அல்ல. கனிகளும் அல்ல. ஏன் அது மரமே அல்ல. மரம் என்றால் அது வெறும் டாலர், டாலர், டாலர் மட்டுமே....

340 pages, Paperback

First published January 1, 2014

14 people are currently reading
205 people want to read

About the author

நக்கீரன்

13 books20 followers
சூழலியலாளர் நக்கீரன், உத்வேகம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். கவிஞர், குழந்தை இலக்கியவாதி, பேச்சாளர் என பல முகங்கள் கொண்டவர்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
69 (81%)
4 stars
12 (14%)
3 stars
3 (3%)
2 stars
1 (1%)
1 star
0 (0%)
Displaying 1 - 28 of 28 reviews
Profile Image for Aarur Baskar.
34 reviews3 followers
April 7, 2022
நக்கீரனின் காடோடி படித்தேன். கிழக்கு மலேசியாவில் நடந்த ( நடந்து கொண்டிருக்கிற ) காட்டழிப்பில் பங்கேற்ற அல்லது உதவியாக இருந்த ஒருவருடைய மனநிலையைப் பேசும் நாவல்
Profile Image for Kumaran Vellaisamy.
37 reviews38 followers
December 22, 2016
சமீபத்தில் Before The Flood என்ற ஆங்கில டாக்குமெண்டரி திரைப்படத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள காடுகள் Palm Oil தயாரிப்பிற்காக பெருமளிவில் அழிக்கப்பட்டு வந்ததையும் அது இன்றும் தொடருவதையும் பார்க்க நேர்ந்தது. அதனால் அங்கு பல காடுவாழ் விளங்குகள் அரிதாகி வருவதையும் கூறியிருப்பார்கள். காடோடியும் அதை அப்படியே விரிவாக கூறிவிட்டது. வசிக்கும் மக்களுக்கும் அது எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் கூறியிருக்கிறார் நக்கீரன்.

காடுவாழ் மக்களின் வாழ்க்கைமுறை, பலதரப்பட்ட மக்கள் வசிக்குமிடத்தில் ஏற்படும் பலதரப்பட்ட மனித உணர்வுகள், உணவு முறைகள், இப்படி பலவற்றையும் சேர்த்து அதிக பொருட்செலவில்லாமல் நம்மாளும் துவானோடும் ஓமரோடும் அன்னாவோடும் சிலகாலம் வாழமுடிகிறது. நம் மனதும் ரலாவிற்காக ஏங்கும். அவளை பார்க்கமுடியாத என்ற உணர்ச்சியை தூண்டும்...
Profile Image for Kesavaraj Ranganathan.
46 reviews7 followers
January 21, 2024
#Kesav_Reads_2024

02/30

காடோடி - நக்கீரன்

எழுத்தாளர் மற்றும் சூழலியளாலர் நக்கீரன் அவர்கள் சூழலியல் சார்ந்த நிறைய படைப்புகளை கொடுத்திருக்கிறார்… அவற்றில் பெரும்பான்மையானவை கட்டுரைத் தொகுப்புகள் தான்… அவர் எழுத்தில் உருவான காடோடி புதினம் காட்டைப் பற்றிய புரிதலை நாட்டிலிருக்கும் மனிதர்களுக்கு கொடுக்கின்ற மகத்தான படைப்பு! நாகை மாவட்டம் குத்தாலம் அருகையுள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் பிறந்தவர்… சாதியும் சூழலும், நீர் எழுத்து, வண்ணத்துப் பூச்சியின் விடுதி, மழைக்காடுகளின் மரணம், அலையாத்திக்காடு ஆகியவை புத்தகங்களை எழுதியிருக்கிறார்…

நாங்கள் திரும்பிச் செல்லும் போது இக்காடு
ஒரு பெரிய பிணமாகக் கிடக்கும். அவ்வளவு பெரிய பிணத்துக்கும் ஒரு பிணப்பெட்டி செய்து கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்.

“காடு என்பது கனவு நிலம் அல்லது கவர்ச்சிமிகு சுற்றுலாத் தலமோ அல்ல. இப்போது காடுகள் குறித்துப் பேசுவதும், கானுலா செல்வதும் மேட்டுக்குடிக்கும், மேல்நடுத்தரக்குடிக்கும் உயர்வகைப் பொழுதுபோக்கு. வீட்டு வரவேற்பரையில் அமர்ந்து பன்னாட்டு நிறுவனத்தின் உருளைக்கிழங்கு வறுவலை கொறித்தவாறு ‘நேசனல் ஜியாகிரபிக்’ அலைவரிசையைப் பார்ப்பது அல்ல காடு பற்றிய அறிதல். தொலைக்காட்சியைப் பார்க்கையில் இவர்கள் அமர்ந்துள்ள இருக்கைகள், அதுவும் இறக்குமதி செய்யப்பட்ட இருக்கைகள், ஒரு மழைக்காட்டின் மரத்ததினால் செய்யப்பட்டவை என்கிற அறிவைக் கொண்டிருப்பதே காடு குறித்த அறிதல். மேலும் அந்த உருளைக்கிழங்கைப் பொறிப்பதற்குப் பயன்படுத்திய ‘பாமாயில்’ எண்ணெய் ஒரு மழைக்காட்டை அழித்து உருவாக்கப்பட்ட செம்பனைத் தோட்டத்தில் இருந்தே கிடைக்கிறது என்கிற செய்தியையும் உள்ளடக்கியதே அந்த அறிவு”

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தீவான, மழைக்காடுகளைக் கொண்ட போர்னியோ தான் கதைக்களம்… ஆசிரியர் ஒரு மரம் வெட்டும் நிறுவனத்தில் வேலையில் இருந்த பொழுது நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட புதினம் இது…

நாவலில் பக்கத்துக்குப் பக்கம் புதிய புதிய மர வகைகள், உயிரினங்கள் என ஆச்சரியத்தை புத்தகம் முழுக்க நிறைத்திருக்கிறார்… கதையில் வரும் ஒமர் ஒரு என்சைக்ளோபீடியாவைப் போன்ற அன்பான மனிதர் அவரின் வாயிலாக எல்லா உயிரினங்களைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை கதைப் போக்கில் கொடுத்திருக்கிறார்!

முருட் பழங்குடி மக்களைப் பற்றிய சித்திரமும் அவர்களின் ஒருவனான ஜோஸின் கம்போங்கிற்கு (பழங்குடி கிராமம்) செல்லுவதும் அங்கு வாழும் மக்களின் வாழ்வியலும் அங்கே கதை சொல்லிக்கும் ரலா என்கிற பெண்ணுக்கும் இடையில் பூக்கும் காதல்… ஆனால், அது காணல் நீராக மறைந்து போகும் கணமும் வாசிப்பவர் மனதில் ஒரு பாராங்கல்லின் கணத்தை ஏற்றி வைத்துவிடுகிறது!

அந்தக் கானகத்தில் காணக் கிடைக்கும் மனித இனத்தின் மூத்த விலங்குகளை (Primate Animals) மொத்தம் பத்தினைப் பற்றிய தகவல்கள் எல்லாம் புதியது! கதையின் இடையே வரும் சமையல்காரப் பெண்ணான யொகன்னா ஆரம்பத்தில் சாதாரணமானவளாக இருந்தாலும் இறுதியில் அவளின் கதையும், கதை சொல்லியுடன் அவளின் நட்பும் நம் மனதில் நின்றுவிடுகிறது!

இந்தக் கதையின் கதாநாயகன் பிலியவ் (பழங்குடிப் பெரியவர்) கதாப்பாத்திரம் உணர்த்திச் செல்லும் மனநிலை ஒவ்வொரு மனிதனுக்குமான பாடம்! காட்டழிப்பு என்கின்ற செயலுக்கு எதிரான புள்ளியில் காட்டின் பக்கமிருந்த அந்த கதாப்பாத்திரம் பேசிய ஒவ்வொரு சொல்லும் மனசாட்சியை கேள்வி கேட்கும்!

“பழி என்ற சொல் எல்லாம் இயற்கைக்குத் தெரியாது. அது ஒன்றும் மனிதர் அல்ல. அதன் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கும். அது நமக்குத் தெரியாது என்பதால்தான் இப்படியெல்லாம் ஊகித்துக் கொள்கிறோம்.”

பிலியவ் என்கிற அந்த காட்டு மனிதர் உலகத்தை நோக்கி விடுக்கும் அறைகூவல் எல்லாம் ஒன்று தான் நாட்டை போலவே காட்டையும் அதன் வளங்களையும் அளவாக எடுத்துக் கையாள வேண்டும் என்பதையும் தன் நிறைந்த அன்பினால் காட்டை மட்டுமல்ல உலகத்தை பல்லுயிர் சூழலுக்கு உகந்ததாக வைத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த நாவலின் ஆன்மா! இந்தக் காடோடி என்னுடைய நினைவுகளில் என்றென்றும் பசுமையாக அந்த மூதாய் மரம் போல நிறைந்திருப்பார்! ❤

புத்தகம் – காடோடி
ஆசிரியர் – நக்கீரன்
பதிப்பகம் – காடோடி பதிப்பகம்
பக்கங்கள் – 316
விலை - ₹360
Profile Image for Arun Datchan.
63 reviews14 followers
March 29, 2020
காடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று தான் நக்கீரன் ஐயா எழுதிய "காடோடி"யை வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் அன்பு நட்பு பிரிவு சோகம் வியப்பு இயற்கை காதல் கவித்துவம் இப்படி நான் எதிர்பாராத பல உணர்வுகளும் புரிதல்களும் இதில் கொட்டிக் கிடந்தது..!
ஒரு சாமானிய மனிதன் காட்டை எப்படி பார்க்கிறான் காட்டிலேயே பிறந்து வளர்ந்த தொல்குடி மனிதர் காட்டை எப்படி பார்க்கிறார் என்று இவர் பார்த்து உணர்ந்த நிகழ்வுகளை எழுதியதைப் படித்த போது மனம் வியப்புற்றது ! எழுத்தாளர் சந்தித்த பல உணர்வுகளையும���, அவர் சந்தித்த மனிதர்களின் உணர்வுகளையும் தன் எழுத்தில் கவித்துவத்தோடு நம்மையும் சேர்த்து உணர வைப்பது தான் இந்நூலின் அற்புதம் ! விலங்குகளுக்கு உணவு எவ்வளவு முக்கியம் என்று எல்லோரும் தெரிந்து வைத்திருப்போம் ஆனால் விலங்குகளுக்கு உணர்வு எவ்வளவு முக்கியம் என்பதை இதைப் படித்துத் தான் தெரிந்துகொண்டேன். மரம் பேசும் என்பதையும்கூட ! மனிதன் எப்படி தன் பேராசையால் இயற்கையைச் சந்தைப் பொருளாக மாற்றி அழிவுக்கு நம்மை இட்டுச் செல்கிறான் என்பதே இந்நூலின் கரு. படித்து முடித்ததும் கண்ணீர் துளிகள், மனதில் ஏதோ ஒரு நெருடல் வலி பல புரிதல்கள் இவை அத்தனையும் நமக்கு வராமல் இருந்தால்தான் ஆச்சரியம் ! அனைவரும் அந்தக் காடோடியைப்போல் இயற்கை சூழல் மீது காதல் கொள்பவராக மாறவேண்டும் என்பதே இந்நூல் நமக்கு சொல்லாமல் சொல்கிறது ! காடோடி பல உணர்வுகளால் ஆன ஒரு அற்புத படைப்பு !💚
Profile Image for Amara Bharathy.
46 reviews6 followers
August 16, 2021
காட்டில் ஒரு நெடிதுயர்ந்த மரத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? அதன் பசிய இலைகள், அது தரும் நிழலின் தண்மை, அம்மரத்தில் தங்கும் பறவைகள், விலங்குகள், இவ்வளவு வளர இது எடுத்துக்கொண்ட ஆண்டுகள் இவையெல்லாம் தானே? ஆனால் மனிதரில் சிலருக்கு மரம் பச்சை டாலராக மட்டுமே தெரியும்! அந்த சிலருக்காக போர்னியோ மழைக்காடுகளில் மரம் வெட்டும் வேலைக்கு செல்கிற ஆசிரியர் தன்னோடு நம்மையும் கூட்டிச்செல்லும் பயணமே "காடோடி".

போர்னியோ என்கிற பசிபிக் தீவு மலேஷியா, புரூனே, இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகள் அடங்கிய வெப்பமண்டல மழைக்காடுகள் கொண்டது. அமேசான் காட்டுக்கு நிகரான பல்லுயிர் வகைமை (biodiversity) கொண்ட காடுகள் இவை; சுமார் 10 முதனிகள் (primates) இங்குண்டு; குறிப்பாக ஓராங் ஊத்தான்! கடமான், கேழையாடு, செம்படாவ், மலை அணில்கள், சறுக்கிகள் என இவையும் கதையின் ஓர் அங்கமே! தவிரவும் மரம் வெட்டும் முகாம் இருக்கும் இடம் இருவாசிகள், பகட்டுக் கோழிகள் முதலான ஏராளமான பறவையினங்கள், நூற்றுக்கணக்கில் செடி கொடி மர இனங்கள் கொண்டது. 30 மீட்டர் உயரம் கொண்ட கவிகை ஒளி புகாமல் தடுத்து குளுமை தரும்! கினபத்தாங்கன் நதியும் அதன் கிளைகளும் நூல் நெடுக நம்மோடு வரும்!

வெறும் காடும் காட்டுவிலங்குகளின் கதை மட்டுமே இல்லை காடோடி; மரம்வெட்டும் முகாமில் மலாய், சீனர், பழங்குடிகள் என்று பல்வேறு இன மக்கள் தங்கள் வேறுபாடு மறந்து வாழும் அன்றாடம் கொண்டது; பிரியும் நாள் வரும் என்று அறிந்தும் ஒருவருக்கொருவர் செலுத்தும் நிபந்தனையற்ற அன்பும் ஒரு வகையில் காடு மனிதருக்கு அளிக்கும் கொடைகள் போலத்தானே! இவர்களில் சிலர் கதையைத் தாண்டி நேரடியாக நம்மோடு உரையாடுகிறார்கள்:

ஜோஸ்: மரத்துக்கு மரம் இலைகள் உரசும் ஓசையில் கூட எவ்வளவு வேறுபாடு? சொரசொரப்பான இலைகளுக்கென்று ஒரு ஓசை. வழுவழுப்பான இலைகளுக்கு வேறு ஓசை. அதுவே தடித்த இலைகள் என்றால் தனி ஓசை. இவையெல்லாம் தனித்தனிப் பண்கள் அல்லாமல் வேறு என்ன? இத்தோடு கூடுதலாகக் கேட்கும் சிள்வண்டு களின் ஓசை, பறவைகளின் குரல்கள் இவையெல்லாம் தாளங்கள். இவை அனைத்தையும் சேர்த்த முழு இன்னிசை நிகழ்வுதான் காட்டின் பாடல்.

தொல்குடி பிலியவ்: எங்களுக்கு அன்பு செலுத்த மட்டுமே தெரியும். அதையும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு வகையாக செலுத்தத் தெரியாது. இப்போது உன் மேல் வைத்துள்ள அதே அன்பைத்தான் இதோ இம்மரத்தின் மீதும் வைத்துள்ளேன்.

தன்னை அழிக்கும் மனிதரை காடு பழி வாங்கும் என்றும், இயற்கை என்பது அன்புமயமான இறைவன் போலும், சில சூழலியலாளர்களாலேயே மடத்தனமாகக் கட்டியமைக்கப்படுவது குறித்துத் தொல்குடி பிலியவ் கொண்டிருக்கும் தெளிவு பகுத்தறிவின் பால்பட்டது! மிக எளிமையாக, மனிதர்களின் உணர்வுகளை இயற்கையின் மேல் திணிக்காதீர்; அதற்கு நம்மைப் பழி வாங்குவது தான் வேலையா என்று சொல்லி ஆச்சர்யமூட்டுகிறார்!

தன் படுக்கையில் இருந்தே மழைக்காடுகளின் சிறப்பு வாய்ந்த ஓராங் ஊத்தான்களைக் காண்கிற ஆசிரியரை எண்ணி பொறாமை கொள்ளும் அதே நேரம், காடு, மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு, விலங்குகள், பறவைகள், கவிகை பரப்பு அனைத்தும் இழந்து, வெற்று நிலத்தை கண்டு எழுதும் அவரது மனநிலையை வாசிக்கும்போதே கண்கள் கசிகிறது! அவரது வாழ்க்கை மரத்தின் வளையங்களில் கண்டிப்பாக அவ்வளையம் வடு பெற்ற ஒன்றாகத்தான் இருக்கும்...

முடிவாக நாம் புரிந்துகொள்ளவேண்டியது இது தான்: கடந்த சில ஆண்டுகளாகவே மக்கள் திரளாக போராடும் களங்கள் பெரும்பாலும் சூழல் போராட்டங்களே; மனிதனின் அதீத பேராசையால், காடுகள் அழிப்பு பருவநிலை மாற்றத்தை துரிதப்படுத்திய இன்றையப் பின்னணியில் இருந்துதான் இந்த நாவலை வாசிக்க வேண்டும்! குணா, குவான், தான் செய்வது எத்தகைய பெரும் குற்றம் என்று தெரிந்தும் கையறுநிலையில் தவிக்கும் ஒமர், கதை சொல்லும் ஆசிரியர் அனைவருமே சுயமாய் முடிவெடுக்க முடியாத, ஏதோ ஒரு பெருமுதலாளி ஆட்டுவிக்கும் கைப்பாவைகளே! இவையனைத்தையும் புரிந்துகொள்ளும் வகையிலும், விறுவிறுப்பாகவும் சொல்லுவதாலேயே காடோடி அனைவரும் வாசிக்க வேண்டிய பிரதியாகிறது!!
Profile Image for Bhavani.
14 reviews39 followers
January 8, 2017
One of the best books that I have read in the recent times.
Profile Image for Siva Prasath T R.
76 reviews4 followers
October 6, 2021
காடோடி நூலை வாசிக்கத் தொடங்கும் முன்பு இது ஏதோ காடுகளுக்குள் சொன்று வந்த அனுபவத்தைத் தான் தோழர் நக்கீரன் பகிர்ந்துள்ளார் என்று நினைத்தே வாசிக்கத் தொடங்கினேன். எந்த ஒரு புத்தகத்தையும் அதன் விமர்சனத்தையோ கதையையோ தெரிந்து கொண்டு வாசிக்கும் பழக்கம் இல்லை. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி எதார்த்தமாக வாசிக்கத் தொடங்கியது தான் காடோடி நூல். காடோடி போர்னியா பகுதியில் உள்ள பொழில்/ மழைக்காடுகளில் பயணித்ததைப் பற்றிய அனுபவங்களை பகிரந்துள்ளார். ஓர் சாதாரண பயணியாக இல்லாது, மரங்களை வெட்டும் முகாமில் பணிபுரியும் ஓர் வேலையாளாக இருந்துகொண்டு எவ்வாறு அவர் காடோடியாக மாறினார் என்பதே இதன் மையக்கரு. காடுகளைப் பற்றி மட்டுமில்லாது தன் உடல் வேறு காடு வேறு என்று பிரித்தறியத் தெரியாக் காடுகளின் பாதுகாவலர்களான பழங்குடியினர்/ தொல்குடியினர்/ ஆதிகுடியினர் வாழ்வியலைப்பற்றியும், ஆங்கிலேரயர் ஊடுருவலால் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றியும், என்னதான் மதமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் இறுதிவரை அழியாது காப்பாற்றும் இயற்கை வழிபாடுகள் கொற்றவை வழிபாடுகளைப் பற்றியும் மிகத் தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளார். விலங்குகள்,பறவைகள், பூச்சிகள், ஊர்வன அவற்றின் தன்மைகளும், வாழ்விடச் சிக்கல்கள்களையும், நீரின் ஆற்றலையும், இயற்கையின் விந்தைகளையும் தொகுத்து அதிசிறந்த கதையாக வடித்துள்ளார்.தொல்குடியினரைப் பற்றி நகரத்து மனிதர்கள் கட்டமைத்துள்ள பிம்பங்களை நொறுங்கியுள்ளான.

நாடுவிட்டு நாடு வந்து பிழைக்க வரும் கூட்டத்தின் துயரங்கள், தொல்குடியினரையே இயற்கைக்கு எதிரியாக மாற்றப்படும் அவலங்கள், காதல் ஓவியம், நட்பின் இலக்கணம், உயிர்ப்புள்ள அன்பு உறவுகள், பிரிவாற்றாமை என முற்றிலும் இரசிக்கும்படியாக, உணர்வுப்பூர்வமான காவியமாக படைத்துள்ளார். அனைவரும் நிச்சயமாக வாசிக்க வேண்டிய ஓர் நூல். ஆசிரியர் நக்கீரன் அவர்களின் முதல் நூலா என்று வியக்கும் அளவிற்கு தொய்வில்லாது கதை நகர்கிறது. எழுத்தாளர் நக்கீரன் நான் சந்தித்த மணிதர்களை, உறவுகளை மிக உணர்வுப்பூர்வமாக, மனதில் நிலைத்து நிற்கும் வகையில், எழுத்தில் கவித்துவத்தோடு எழுதியுள்ளமை ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல உரையாடல்கள் மனதை உருகவைக்கும்; சில நெஞ்சை நெகிழவைக்கிறது. இதன் தாக்���ம் வாழ்நாள் முழுவதும் தொடரும் என நம்புகிறேன்.

இந்த உலகைப் பொறுத்தவரை மரம் என்றால் மரம் அல்ல டாலர் டாலர் டாலர். இயற்கையை நேசிப்போம்,முடிந்தவரை இயற்கையை பாதுகாப்போம். அடுத்த தலைமுறையினரை வாழ வைப்போம்💚
Profile Image for Jaya Kumar K.
24 reviews7 followers
October 12, 2015
நக்கீரனின் 'காடோடி' புதினமல்ல...

தூய தமிழ் சொற்களை கற்றுத்தரும் சொற்களஞ்சியம்; விலங்குகளையும் தாவரங்களையும் கற்றுத்தரும் உயிரியல் பல்கலைக்கழகம்; காட்டு வாழ்க்கையையும் காட்டு மனிதர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தும் மானிடவியல் புத்தகம்; சாட்டையடி வார்த்தைகளால் நம்மைக்காயப்படுத்தி சூழல் அவலங்களை நம் கண்முன் நிறுத்தும் கண்ணாடி...

ஆம், சில மனிதர்களின் பாசம், காதல், ஏக்கம், துக்கம், என்று உணர்வுகளின் சங்கமமாக இருப்பதால் இதனை வேறு வழியின்றி 'புதினம்' என்றே ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது.

உங்கள் எழுத்துக்கள் துணைகொண்டு கடவுச்சீட்டு, நுழைவிசைவு இன்றி எம்மை சில மாதங்கள் மலேசியா நாட்டின் கிணப்பத்தாங்கன் ஆற்றிலும் அதனை சுற்றியுள்ள வனத்திலும் வாழ வழிவகுத்ததிற்கு மிக்க நன்றி, நக்கீரன் அவர்களே !

'Kaadodi' by Nakkeeran is more of a Tamil Dictionary, a reference book of Malaysian wildlife, an anthropological representation of the indigenous people around Kinappathangan River, a cultural study of various tribes of that area, and at last a very involving novel. It presents a near perfect account of the irreparable damage done by the money driven mindless corporate to the environment, wildlife, indigenous people, and on the whole the humanity.

The author gives us a feel of venturing into the Malaysian evergreen forest and living there for almost a year, without any passport or visa.
Profile Image for வெங்கட் பீமசேனன்.
86 reviews1 follower
April 25, 2025
நான் வாசித்த புதினங்களில் நீண்ட நாள் மனதளவிலான தாக்கத்தை ஏற்படுத்திய தலைசிறந்த படைப்பாக காடோடி திகழ்கிறது. இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்முடன் உணர்வுபூர்வமாக ஒன்றரைந்துவிடுகின்றன. குறிப்பாக, பிலியவ் எனும் காட்டு மனிதர் எனது மனதை ஆழமாக கவர்ந்தவர் — அவரின் இயற்கை மையமான தன்மையும் உள்ளார்ந்த மனிதநேயம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நாவலின் மிக முக்கியமான தனிச்சிறப்பு என்னவென்றால், இதில் வரும் முதன்மைக் கதாபாத்திரத்திற்கு பெயர் இல்லாதது. அந்த வகையில், அந்த பாத்திரம் நாமாகவே மாறுகிறோம். இது வாசிப்பை ஒரு தனிப்பட்ட அனுபவமாக மாற்றி நம்மை நேரடியாக கதையின் நாயகனாக மாற்றுகிறது — இது ஒரு மிகச் சிறப்பான இலக்கிய முயற்சி.

காடோடி நமக்கு காட்டு வாழ்க்கையின் இயல்பு, பழங்குடியினரின் வாழ்வியல், கலாச்சார மாற்றங்கள் மற்றும் மனித மனதில் ஏற்படும் மாறுபாடுகளை தெளிவாகவும் அழகாகவும் சொல்லும். காட்டின் சூழலில் ஒருவர் வாழ்ந்ததன் விளைவாக அவரது மனநிலை எவ்வாறு மாறுகிறது என்பதையும் நக்கீரன் அவர்கள் மிக நுட்பமாக எடுத்துரைக்கிறார்.

தமிழ் வாசகர்கள் தவறாமல் வாசிக்கவேண்டிய, உருப்பெற்ற ஒரு புதினம் இது. ‘காடோடி’ என்ற இந்த இயற்கையின் எச்சம், வாசிப்புக்குப் பிந்தையும் நம் மனதுள் ஒலிக்கத் தொடரும்.
Profile Image for Anitha Ponraj.
277 reviews42 followers
March 28, 2025
புத்தகம்: காடோடி
ஆசிரியர்: நக்கீரன்

தலைப்பு: சூழலியல் புதினம்

உலகின் மூன்றாவது பெரிய தீவும், ஆசியாவின் மிகப் பெரிய தீவுமானது போர்னியோ தீவு. அமேசான் காடுகளைப் போன்று போர்னியோ தீவுக் காடுகளும் உலகின் மிகப் பழமையான மழைக்காடுகள் ஆகும். அந்த மழைக்காடுகள் தான் கதைக்களம்.

மரத்தின் பச்சையை டலர்களாகளாக எடைபோடும் கார்.ப்பரேட் கம்பெனிகளால் கழுத்து நெரிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக மடிந்து கொண்டிருக்கும் போர்னியோ காடுகளின் அவலம் வெள்ளையர்கள் காலம் தொட்டு இன்று வரை தொடர்கிறது.

ஒரு வெட்டுமரக் கம்பெனியில் பணியாளனாக, காட்டை பற்றிய முன்அறிவு எதுவும் இல்லாமல் சுற்றுலா பயணி போல நுழையும் துவான் என்ற இளைஞனின் பார்வையில் கதை நகர்கிறது.

அவன் காட்டுக்குள் நுழைந்து கொண்டிருக்கும் போது, மெல்ல மெல்ல காடும் அவனுள் நுழைகிறது.

அதன் ஓசையில் இசை கேட்கிறான். அதன் பலவகையான உயிரினங்களைக் கண்டு ஆச்சரியத்தில் விழி விரிக்கிறான். அதில் வசிக்கும் தொல்குடிகளின் கதைகளில் திளைக்கிறான். இன்னும் இன்னும் என்று காட்டிடம் கற்றுக் கொண்டே இறுதி வரை மாணவனாக இருக்கிறான்.

அங்குள்ள முகாம் மனிதர்கள் அவன் குடும்பமாகிறார்கள். ஓமரிடம் கற்றுக் கொள்கிறான். ரலாவிடம் காதலில் விழுகிறான். ஜோஸின் நட்பில் இயற்கைக்கு அருகில் செல்கிறான். ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி பிலியவ் என்ற தொல்குடி முதியவர் மூலமாக காட்டினை உணர்கிறான்.

எல்லாரையும் பிரிந்து செல்லவே நேரிடுகிறது.

காடு என்பது வெறும் மரங்கள் அல்ல, அதைச் சார்ந்த உயிரினங்கள், நிலப்பரப்பு என எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து உயிர்ப்புடன் இருக்கும் ஒரு தனி உலகம் என்று உணர்ந்து கொள்ளும் போது, மரம் வெட்ட வந்தவன் வெட்டுண்ட மரத்தைக கண்டு கண்ணீர் உகுக்கிறான்.

காட்டை சார்ந்து வாழும் மக்களுக்கு அதன் மீது இருக்கும் அன்புக்கும், அதை வெறும் பணமாக பார்ப்பவராகளுக்கும் இருக்கும் வித்தியாசம், தங்க முட்டை தரும் வாத்தை வளர்ப்பவர்களுக்கும் வெட்டுபவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என உணர்ந்து கொள்ளும் போது அவன் மனம் கசந்து விடுகிறது.

ஆனாலும் அவனால்
என்ன செய்ய முடியும்?
எதை மாற்றிவிட முடியும்?

முகாம் வேலை முடிந்து இறுதியில் கிளம்பும் முன்பு பிலியவிடம் விடைபெற செல்லும் அவனும் அன்னாவும் எதிர்பாராத விதமாக மழை வெள்ளதில் அவரோடு மாட்டிக் கொள்கிறார்கள்.

ஆனால் ஆறு நாட்களாக எந்த ஒரு வெளி உதவியும் இல்லாமல் அவர்களுக்கு உணவு சேகரித்து அவர்களை பத்திரமாக வழியனுப்பி வைக்கும் அந்த காடோடியைக் கண்டு கதை மாந்தர்கள் போலவே நாமும் வியந்து தான் போகிறோம்.

புத்தகத்தில் கொடுக்கப் பட்டுள்ள பல வகையான மரங்கள், உயிரினங்கள் எல்லாம் வாசிக்க வாசிக்க அவற்றை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் கூகுள் உதவியுடன் சாத்தியமாகிறது.

நிஜமான ஒரு காட்டுக்குள் சென்று வசிக்க வேண்டும், அதன் ஓசைகளை அருகிலிருந்து கேட்க வேண்டும், ஒரு காடோடியாக சுற்றித் திரிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

அதே நேரத்தில் வீட்டில் உள்ள மரத்தாலான பொருட்களைப் பார்க்கும் போது அதற்காக எத்தனை மரங்கள் உயிர் துறந்திருக்கும் என்ற எண்ணம் மனதை நெருடுவதை தவிர்க்க முடியவில்லை. அந்த எண்ண மாற்றமே இந்த புத்தகம் நமக்கு தரும் வரமும் சாபமும்.

பல வார்த்தைகள் வேற்று மொழியில் இருந்தாலும், பெயர்கள் முதலில் உச்சரிக்க சற்று சிரமமாக இருந்தாலும் புத்தகத்துள் நுழைந்த பிறகு மொழி பிரச்சினையாக இல்லை. ��வர்கள் உலகுக்குள் எளிதில் உள் சென்று ஐக்கியமாகிவிட முடிகிறது.

அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய அருமையான சூழலியல் புத்தகம்.






Profile Image for மணிகண்டன்.
12 reviews4 followers
August 1, 2020
மூன்றாண்டுகளுக்கு முன்னால் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் வாங்கியிருந்தேன் படிக்க தொடங்கிய சூழலில் மிக நல்ல நூல் என்பதினை திறந்த சில நிமிடங்களிலே மனதார உணர்ந்தேன். மகிழ்ந்தேன். சரியாக மூன்றாம் ஆண்டு நிறைவுறும் தருவாயில் இப்புத்தகத்தினைத் திறந்த போது சரியான நேரம் எனவே கருதுகிறேன்.

தற்கால மனிதன் எந்நாளும் கற்றுக்கொள்ள முடியாத எண்ணற்ற படிப்பினையை காடுகள் கொண்டுள்ளன. அவற்றைக் கற்ற வேண்டுமானால் காட்டின் தொல்குடியாக இருக்கவேண்டும் இல்லாது போனால் எந்நாளும் மனிதன் காட்டினுள் மாணவனாக மட்டுமே இருக்க வேண்டும்.

மனிதனின் பேராசைக்கு இயற்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் அரிந்து திண்ணும் அரக்கனாய் உருமாறியது கால மாற்றத்தில் ஏற்பட்ட பெருங்கொடுமை.

ஞானப் பெற விரும்புவோர் காடோடியோடு கொஞ்ச காலம் பேச்சு நடத்துங்கள்.
Profile Image for Praveen.
3 reviews1 follower
Read
September 2, 2024
I am really happy to see environmentalist novels in Tamil, which is one of its kind. It gives us a hope that the literature is not dead yet in TamilNadu. Having completed the part 1 of the book, I have decided to park this for a while and might revisit it later. Having born in a city and getting an exposure to media, I appreciate what this author is trying to achieve so I am not very keen to complete this now. However this book will surely achieve its purpose I.e. it will easily reach all corners of TamilNadu and create an awareness of how the corporates are guzzling the forests. I also wish it would have been wonderful had the author covered in detail the life of the natives in the forest.
Profile Image for Aswanth.
9 reviews4 followers
August 6, 2022
நாவல் படிக்க தொடங்கி படித்து முடிக்கும் வரை ஒரு வனத்தில் பயணித்து வாழ்ந்தது போன்ற ஒரு உணர்வை அளித்த ஆசிரியருக்கு நன்றி

முக்கியமாக ரலா துவான் காட்சிகள் மிகவும் ரசித்தேன்

தனிபட்ட முறையில் என் வாழ்வில் மாற்றம் தந்த ஒரு புத்தகம் இதை நான் என் வாழ்வை காடோடிக்கு முன் காடோடிக்கு பின் என்றே சொல்லுவேன்
புத்தகத்துக்கு பின் என் பார்வை பச்சை மரங்கள் , இயற்கை, செடி கொடிகள் ,பறவைகள் மீதான பார்வையே முற்றிலும் மாற்றியது இப்போது தான் நான் நிதானித்து அவைகளை ரசிக்கவே தொடங்கி உள்ளேன் , புத்தகத்திற்கு முன் அப்படி நான் சிந்தித்ததே இல்லை இயந்திர வாழ்வில் இயற்கை அளித்த கொடைகளை நான் அவ்வளவாக பொருட்படுத்தியே இல்லை என்று சொன்னால் மிகை ஆகாது.
9 reviews
February 24, 2023
போர்னியோ காட்டுக்குள் மரம் வெட்டும் நிறுவனத்தின் அலுவலராகப் போகும் எழுத்தாளரின் அனுபவங்களின் தொகுப்பு, ஒரு பெரும் மழைக்காட்டின் அழிவுக்கு சாட்சியாக இருந்து அந்த காடுகளின் பண்புகள், விளக்குகள் அதன் வாழ்வியல், மரங்கள், தொல்குடிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை என இந்த புத்தகத்தின் எல்லா பக்கத்திற்கும் உயிர் உள்ளது, அந்த உயிர் எப்படி ஒரு ஒரு மரம் வெட்டி விழுகையில் அவதிப் படுகிறது அதன் விளைவு என்ன என்று ஒரு பெரும் ஆவணப் புத்தகமாக இருக்கிறது காடோடி.

ஒரு பெரும் மழைக்காட்டில் உலாவி பின் வெளி வருகையில் அந்த அழிவின் ஏற்பட்ட குருதி என் மேலும் சிறிது பட்டுவிட்டது, இனி எந்த காட்டுக்கு போனாலும் இந்த குருதி நாத்தம் என்னை துரத்தி கொண்டு வரும்
Profile Image for Dhanush K.
22 reviews1 follower
August 2, 2023
காடு, காட்டழிப்பு அதன் பின்னால் இருக்கும் வணிக அரசியலையும் மிக எளிமையாகவும் துள்ளியமாகவும் வாசகர்களிடம் புகுத்தி விட்டார் எழுத்தாளர்

கடைசி பக்கங்கள் வரை நம்மை காடின்னூடே பயணிக்க வைத்து
காடுகள் கட்டைகளாக மாற்றப்படும் போது அதன் வலியும் வேதனையும் நம்மிடம் கடத்தப்பட்டுவிடுகிறது

அனைத்தும் இயற்கைதான்,
இயற்கைதான் மதம், கடவுள், வாழ்க்கை.

இனி காட்டை பற்றி எண்ணும்போது, எப்படி மறப்பேன் இவர்களை
பிலியவ், துவான், ஜோஸ், ஒமர், அன்னா
இதயத்தை கனக்க வைத்த இரண்டு நாள் சந்திப்பில் விதைக்கப்பட்டு கடைசி வரை இருக்கும் "துவான் - ரலா" காதல்....
3 reviews
January 19, 2021
Interesting book in Tamil for people who love forest, flora and fauna. The author takes us to the forest of Borneo and make us to understand the significance of forest and the food chain. He explains about the deforestation and its effect on the depending animals, insects, and birds. The pain of the tribes who live in the forests, their life style, culture and understanding of nature. The book is simple but meaningful.
Profile Image for மு.கார்த்திக்.
11 reviews3 followers
July 9, 2018
அறிவியல் முன்னேற்றம், வாழ்வியல் முன்னேற்றம் போன்றவற்றால் நாம் இயற்கைக்கு செய்யும் அளவற்ற தீங்கினை அழகு தமிழில் குத்திக்காட்டும் நூல். கதை படித்தேன் என்று சொல்வதை விட , கதையில் வாழ்ந்தேனென்று செல்லலாம். இயற்கையை போற்றும் நாவல். இதே போன்று இன்னும் பல நூல்களை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் திரு.நக்கீரன் அவர்களே.
Profile Image for Jagan Sagaya Nathan.
26 reviews2 followers
June 21, 2022
இந்த நாவலை நான் வாசிக்க எப்படி தேர்வு செய்தேன். "காடோடி" என்ற தலைப்பே முதலில் இந்த புத்தகத்தின் மீது எனக்கொரு ஈர்ப்பை ஏற்படுத்தியது, எனக்கு எந்த ஒரு வாசிப்பாளனும் நண்பராகவோ, குடும்ப உறுப்பினராகவோ இல்லை, ஏதோ மனதில் ஒரு தேடல் ஏற்படும் பின் அந்த தேடலுக்கான கருவியாய் Good reads இருக்கும், இதில் தான் இந்த புதையலை கண்டடைந்தேன், இந்த நாவலை வாசித்ததை நான் என் வாழ்நாளில் பெரும் பேராய் நினைக்கிறேன்...
1 review
November 21, 2023
என்னை மிகவும் பாதித்த புத்தகம் எனலாம்.ஆரம்பத்தில் குதுகலத்தோடு ஆரம்பித்த பயணம் இறுதியில் கண்ணீர் சிந்த வைத்தது.அந்த காட்டிலேயே வாழ்ந்து ஒரு உணர்வை தந்துள்ளது.ஒரு மரத்தின் இறப்பு ஒரு குடும்ப உறுப்பினரின் இறப்பை போல் என்னை பார்க்க வைத்துள்ளது இந்த புத்தகம்.மனிதனின் அனைத்து உணர்வுகளையும் ஆசிரியர் கண் எதிரே காட்டியுள்ளார்.
Profile Image for Nagarajan.
76 reviews23 followers
November 15, 2020
A must read one on ecology and the business/politics surrounding it. In the end you would have become an lover of forest.
Profile Image for Romin Davis.
3 reviews1 follower
February 17, 2022
Fascinating story about forest. I was able to easily visualise the scenes while reading it. A must read to all 💚
Profile Image for Kishore Ahamed.
15 reviews10 followers
July 15, 2016
வரலாறோ பூகோளமோ, மேற்கைப் படித்த அல்லது படிக்க வைத்த அளவு நாம் கிழக்கைப் படிக்கவில்லை என்பது நிதர்சனம். பூமத்திய ரேகையை ஒட்டிய தென் கிழக்கு ஆசியாவில் இரு(க்கும்)ந்த அடர்ந்த வெப்ப மண்டல மழைக்காடுகள் காங்கோவையும் அமேசானையும் விட எந்த வகையிலும் சளைத்தவை இல்லை.

பல அறிய ஆதி உயிரினங்கள், ஓரிட வாழ்விகள், தொல்குடி மக்கள் கொண்ட போர்னியா தீவுகள்/காடுகளுக்கு கடவுச் சீட்டில்லாமல் காடோடியோடு ஒரு பயணம். நம்மைப்போல ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டு சுரண்டல்களுக்கும் சூறையாடல்களுக்கும் உள்ளாகி பின்னர் மலேசியா இந்தோனேசியா என தூண்டாடப்பட்ட இயற்கையின் கொடை நிலங்கள் தாம் இவை. இக்காடுகள், அவை கொண்ட உயிரினங்களின் (தொல்குடி மனிதர்கள் உள்பட) குண நலன்கள் வாழ்வியலையும் விவரித்து அவற்றையெல்லாம் எவ்வாறு இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே காடோடி.

காடு குறித்த தகவல்களையெல்லாம் திரட்டி ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிடாமல், அதில் சில தேர்ந்த பாத்திரங்களை வாழவைத்து உயிரோட்டமுள்ள, சொற்களஞ்சியம் நிறைந்த புனைவாக வழங்கியிருக்கிறார் ஆசிரியர். ஒரு புத்தகத்தின் தாக்கம் நம் சிந்தனைகளைப் புரட்டி போட்டு யோசிக்கவைப்பதில் இருக்கிறது. அந்த வகையில் முடித்து இரெண்டு நாட்காளாகியும் பிலியவும், ஜோஸும், மூதாய் மரமும் என் தலைக்குள்ளேயே கூடாரம் அடித்து உக்கார்ந்திருக்கிறார்கள். சங்கிலி வாளின் இரைச்சல் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிக்கிறது.

முழு நீளத் திரைப்படம் எடுக்க அனைத்து அம்சங்களும் கொண்ட கதை. ஆனால் கதை நகரும் காடுகள் சிறிதளவாவது இருக்குமா அல்லது செயற்கை அட்டைக்காடுகளும் கணினியும் கொண்டே எடுப்போமா என்பது மனிதர்கள் முடிவு செய்யவேண்டும்

அக்காடுகளுக்கு ஈடாக இல்லையானாலும் நம் மேற்குத் தொடர்ச்சி மழைக்காடுகளுக்கு என்ன நிலைமை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.வெகு சொற்ப காலமே வாழ்ந்துவரும் மனித இனம் உலகுக்கு என்ன செய்து தன்னையும் அழித்துக்கு கொண்டிக்கிறது என்பதை உணர கானகத்தோடு பேசினால் புரியும். இயற்கை ஆர்வலர்கள் காடோடிகளும் தவறாமல் வாசிக்க வேண்டிய காட்டின் ஆன்மா- காடோடி.
Displaying 1 - 28 of 28 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.