கடந்துபோன மூன்று தசாப்த காலத்தில் யுத்தத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்த ஈழச் சனங்களின் வாழ்வில் அவ்வப்போது அமைதிக்கால ஒளிக்கீற்றுக்கள் சட்டென மின்னி மறைந்திருக்கின்றன.
இந்திய இராணுவம் அந்த மண்ணில் போய் இறங்கிய போது அப்படியொரு நம்பிக்கை அந்த மக்களிடத்தில் முகிழ்த்திருந்தது. பதுங்கு குழியற்ற வாழ்வொன்றை பாரதம் தந்துவிடுமென அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். முடிவில் நம்பிக்கைகள் சிதைந்தழிந்தன. சனங்களின் முகங்களில் போர் ஓர் அமிலமாய் தெறித்தது.
நீண்ட பத்தாண்டுகளின் பிறகு மற்றுமொரு அமைதிக்கான காலம் ரணில் - புலிகள் பேச்சுக்காலத்தின் போது அரும்புவதாக அந்தச் சனங்கள் நம்பினார்கள். பேச்சுவார்த்தையின் தேனிலவுக்காலம் அதீத நம்பிக்கைகளை அவர்களிடத்தில் ஊட்டியிருந்தது. ஈற்றில் அந்த அமைதியின் முடிவும் முன்னெப்போதும் இல்லாத பெரும் ஊழிக்காலக் கொரூரத்தை உருவாக்கி கழிந்து போனது.
இப்படியான, 87 இல் தொடங்கி 2003 வரையான இந்த இரண்டு அமைதிக்கான காலங்களுக்கு இடையே இந்த நாவலின் கதைகள் நகர்கின்றன.
இந்நாவலை நான் எழுதிய வேளையில் என்னை ஊக்குவித்து உதவிகள் புரிந்த விருபா குமரேசன் இந்நாவலுக்குப் பெயர் சூட்டுவதில் உதவிய கவிஞர் மகுடேஸ்வரன், வெளியிடும் தமிழினி பதிப்பகத்திற்கு மனமார்ந்த நன்றி
சயந்தன் எழுதிய ஆறாவடு நாவல் ஈழம் சம்பந்தப்பட்ட நாவலாகும்.இலங்கையிலிருந்து இத்தாலி நாட்டிற்கு பயணிக்கும் அகிலனின் ஊடாக இலங்கை தமிழர்களின் வாழ்வியல்கள்,அங்கு நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மனதை சுக்கு நூறாகும் நாவலாகும்.நான் வாசித்த ஈழம் சம்பந்தப்பட்ட நாவல்களில் இந்நாவல் சிறந்த ஒன்று.நான்லீனியர் முறையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் பல இடங்களில் உங்களை புத்தகத்தை மூடி வைக்கும் அளவுக்கு மனதினை வலிக்கச் செய்யும்.கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய நாவல்.
ஷோபா சக்தி, அகர முதல்வன்,தமிழ் நதி,ஈழ வாணி,தமிழினி என நீளூம் எனது ஈழ எழுத்தாளர்களின் வாசிப்புப் பட்டியலில் சமீபத்தில் எழுத்தாளர் சயந்தனும் இணைந்திருக்கிறார். உலகலாவி பரந்திருக்கும் தமிழ் எழுத்தாளர்களை ஈழ எழுத்தாளர்கள் எனும் வட்டத்தில் அடைப்பதில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. ஆனால், ஈழ கதைக்களத்தை மையப்படுத்திய படைப்புகளை ஈழப்படைப்புகள் என வகைப்படுத்துவதில் தவறொன்றுமில்லை என்றே நினைக்கிறேன்.
ஆறாவடு - தமிழீழ விடுதலைப்போர் பின்னணியில் பூத்திருக்கும் மற்றோரு படைப்பு. வாசிப்பனுபவம் என்ற பெயரில் இங்கே முழுக் கதையை பகிர்வது சரியான அணுகுமுறையாக இருக்காது. அதனால், கொஞ்சம் மேலோட்டமாகவே பார்க்கலாம். பெரும்பாலும் நெடுங்கதைகளில் ஒரு மையக்கதை என ஒன்றிருக்கும். அதை ஒட்டினார் போல் பல சம்பவங்கள், கிளைக்கதைகள், பாத்திரப்படைப்புகள் என அந்த மையக் கதையை ஒட்டியும் வெட்டியும் செல்லும்படியாகவே புனைவுகள் எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஆறாவடு நாவலை இப்படி ஒரு சட்டகத்துக்குள் அடைக்க இயலாது. ஆதாரமான ஒரு மையக்கதை. அதுவும் முன்னும் நகரும் வகையில். இடையில் மையக்கதைக்கு நேரடித் தொடர்பில்லாத பல கிளைக்கதைகள் என மாறுபட்ட கதைக் கட்டமைப்பு கொண்ட படைப்பு. அந்தவகையில் ஆறாவடு இதுவரை நான் வாசித்த படைப்புகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானதும் கூட.
1987 தொடங்கி 2003 வரையான இரண்டு 'அமைதி' க் காலங்களுக்கு இடையே இந்தக் கதை நகர்கிறது எனும் ஆசிரியர் குறிப்போடு தொடங்கும் இந்தப் புதினத்தின் மையக்கதை, கள்ளத்தோணி ஏறி இத்தாலி செல்ல முயற்சி செய்யும் கதைநாயனின் பயணம் . ஆசிரியரின் மொழியில் சொல்வதென்றால் அது தோணி அல்ல வள்ளம். மற்றதெல்லாம் கிளைக் கதைகள். படைப்பில் ஊடாக பாயும் பல கிளைக்கதைகள் காத்தாரமானவை. நான்கு பக்கங்கள் இருந்தாலும் கூட ஆழ்ந்தபாத்திரப் படைப்போடு ஆற்றொழுக்கான உரையாடல் வழியாக யதார்த்த அரசியலைச் சொல்லிச் செல்கின்றன.
அமைதிப்படை, புலிகள் மட்டுமல்லாது அப்போது களத்தில் இருந்த மற்ற தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகளை இரத்தமும் சதையுமான மனிதர்கள் வழியாக எழுத்தில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். குறிப்பாக புலிகளை விமர்சிக்கும் நேரு ஐயா எனும் ஒரு பெரியவர் பாத்திரத்தின் வழியாக முன் வைக்கப்படும் பல கருத்துகள் ஈழ விடுதலையின் முடிவிற்கு விடைதேடும் சாமானிய வாசகர்களுக்கு ஒரு திறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஈழ எழுத்துகளைத் தொடர்ந்து வாசிப்பதலோ என்னவோ படைப்பில் அடர்த்தியான தமிழை எதிர்பார்த்தே உள்ளே நுழைந்தேன். எழுத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஆசிரியரின் சுய எள்ளல். போரின் வலிகளைச் சுமந்த படைப்பிலும் கீற்றாக வந்துபோகும் பகடி இயல்பாகவே இருக்கிறது.
"இரண்டாவது நாள் இவன் மலேசியா பயணமானான். கஸ்டம்சில் பயணம் எதற்கானது என்று கேட்டார்கள். 'பிஸினஸ்' என்றான். 15 நாட்கள் விசாவினைக் குத்தி அனுமதித்தார்கள். அன்றைக்கு மட்டும் இவனுக்குப் பின்னால் பன்னிரண்டு பேர் மலேசியாவிற்குள் பிஸினஸ் செய்ய வந்தார்கள். அவர்கள் அவ்வளவு பேரும் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டனர்..."
(பக்கம்-143) "..கண்ணுக்கு முன்னால் முழங்காலுக்கு கீழே, இரத்தம் வழிந்தபடி தசைத் துணுக்குகள் பிய்ந்து தொங்கிய என் காலொன்றைக் கடல் அலைகள் தம்மோடு உள்ளிழுத்தன. அந்தக் காலும் அதன் மேலிருந்த வரிச்சீருடைத் துணியும் எனக்கு சொந்தமாய் சற்றுமுன்னர் வரையிருந்தன. எனும் போது நுட்பமான கதைச் சொல்லியாக மிளிர்கிறார். தொடர்ந்து எழுதுங்கள் சயந்தன்.
மற்றபடி டியூசன்கள், ரியுசன்களாக மண் மணத்தோடு வரும் படைப்பில் ஏனோ துவக்குகள் துப்பாக்கிகளாகி விட்டன எனத் தெரியவில்லை. உணர்வுப்பூர்மான மிகப்பெரும் களத்தில் அழகியலோடு இன்னும் பல படைப்புகளைச் சயந்தனிடமிருந்து எதிர்பார்கிறேன்.
An impactful novel set during the Eelam struggle, providing heart-rending glimpses of pain and difficulties faced by a sample of individuals impacted by everything that happened, that truly represents a wider cross-section of the people. The main arc of a character trying to escape to Italy on a small boat with several people is one of the most tragic things I have ever read. The parallel side-stories of different characters are gripping and poignant. The ending was sublimely poetic, if leaving things unresolved, as freedom struggles that are oppressed end up being.