நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் ஆகிய துறைகளில் தீவிரமாகச் செயல் பட்ட சி.சு.செல்லப்பா, சிறுபத்திரிகைகளின் முன்னோடி எனத்தக்க ‘எழுத்து’ இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தியவர். ‘மணிக்கொடி’ காலத்தில் தொடங்கித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் அவராலேயே பல்வேறு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த ஆகச் சிறந்த ஒன்பது கதைகளின் தொகுப்பு இந்நூல். இன்றைக்கும் வாசிப்பிற்கு உகந்ததாக இருப்பதோடு பெரும் கதைசொல்லி அவர் என்பதையும் உணர்த்துபவை இக்கதைகள். மாடுகள் தொடர்பாக இத்தனை விவரங்களோடும் துல்லியத்தோடும் இவரளவுக்கு எழுதியவர்கள் இல்லை. வேளாண் வாழ்வில் மாடுகள் செல்வமாகக் கருதப் பட்டமைக்கு இக்கதைகள் அரிய சான்றுகள். மாடுகளை மையமாக வைத்து மனித உறவுகளும் மனநிலைகளும் செயல்பட்ட விசித்திரங்களை இவரது கதைகள் காட்டுகின்றன. அத்துடன் இயல்புடனும் கிராமத்துத் திண்ணைப் பேச்சுத்தன்மையிலும் அமைந்த மொழியை உத்தியாகவே கொண்டு எழுதியவர் அவர். மாடுகளைப் பற்றியல்லாமல் ஏற்கனவே கவனம்பெற்ற கதைகளையும் கொண்டுள்ள இத்தொகுப்பு சிறுகதை வரலாற்றில் சி.சு.செல்லப்பாவின் இடத்தையும் உறுதிப்படுத்துகிறது.
சி.சு. செல்லப்பா (C.S. Chellappa) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.
பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
Cinnamanur Subramaniam Chellappa (Tamil: சி.சு. செல்லப்பா) was a Tamil writer, journalist and Indian independence movement activist.He belonged to the "Manikodi" literary movement along with Pudhumaipithan, Ku Pa Ra, Va. Ramasamy, N. Pichamurthy and A. N. Sivaraman. He also founded Ezhuthu, a literary magazine. His novel Suthanthira Thagam won the Sahitya Akademi Award for 2001
ஆசிரியர் : சி. சு.செல்லப்பா சிறுகதை தொகுப்பு 127 பக்கங்கள் காலச்சுவடு பதிப்பகம்
சி சு செல்லப்பா என்றவுடன் எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவருடைய வாடிவாசல் நாவல் தான். எனக்கு எப்பொழுதுமே வாடிவாசல் வாசிக்கும் பொழுது என் நினைவிற்கு வருவது எர்னேஸ்ட் ஹெம்மிங்க்வே -யுடைய கிழவனும் கடலும் என்ற நாவல் தான். இரண்டும் பக்கங்கள் அளவில் குறைவாக இருந்தாலும் அவை கொடுக்கும் அந்த ஆழமான உணர்வுகளுக்கு எல்லையே இல்லை. சி சு செல்லப்பா அவர்களின் சிறுகதை உலகம் எனக்கு புதிதுதான். வாருங்கள் செல்லப்பாவின் சிறுகதை உலகிற்குள் பிரவேசிப்போம்.
இந்த தொகுப்பில் மொத்தம் 9 கதைகள்.இத்தொகுப்பு முழுக்க ஒரு கதை சொல்லி கதைகளை நமக்கு சொல்வது போலத்தான் அமைந்துள்ளது. இந்த தொகுப்பில் உள்ள மற்றுமொரு பொதுவான ஒன்று இவை அனைத்தும் கிராமத்தில் நடக்கும் கதைகளாகத்தான் உள்ளது. தங்கள் சொந்தங்களுக்குள் தங்கள் முன் தலைமுறைகளில் நடந்த பல உண்மைகளை பல நூறு வருடங்கள் கடந்து கதைகளாக உருமாற்றி பொக்கிஷம் போல பாதுகாக்கப்பட்டு வரும் உண்மை கதைகளே இதில் பிரதானமானவை. அத்தான்களும், மாமாக்களும், தாத்தாக்களும் தங்கள் தலைமுறையின் வாழ்க்கை முறையை கதைகளின் வழி இன்று வரை கண்ணியத்தோடும், பொறுப்போடும் தங்கள் அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு கடத்தினர் என்பதைத்தான் இவருடைய சிறுகதைகள் கூறுகின்றன.
செல்லப்பா அவர்கள் மாடுகள் மீது எவ்வளவு பேரன்பு கொண்டவர் என்பதை இத்தொகுப்பில் உள்ள கூடுசாலை, பெண்டிழந்த்தான் என்ற இரு கதைகளை வாசித்தால் உங்களுக்கு புரியும். அவரை போல காளைகளை ஒருவர் வர்ணித்து நான் கண்டதில்லை. காளையின் கண்களை யானைகளுக்கும், முக அழகை குதிரைக்கும், திமிலை மலைகளுக்கும், ஓட்டத்தை வீரத்திற்கும் என அவருடைய வர்ணனை நீண்டுகொண்டே இருக்கும். அவர் கூறுவது போல " எல்லாம் தானுங்க, மனுஷன், வாயில்லா சீவன் எல்லாத்துக்கும் ரோஷம் ஒண்ணுதானுங்களே " இப்படி மனிதனுக்கும், அந்த ஜீவரசிகளுக்கும் உள்ள காலம் கடந்த பிணைப்பை இவ்வளவு துல்லியமாக இலக்கியத்தில் பதிவு செய்தவர் எவருமில்லை. இலக்கியவாதிகள் ஒவ்வொருவரும் ஒரு வரலாற்று ஆசிரியர்களே. எப்படி? வரலாற்றை தங்கள் எழுத்தின் வழி தங்கள் கதைகளுக்குள் பத்திரமாக சேர்த்து வைத்து செல்கின்றனர். " பந்தயம் " கதையில் தமிழகத்தின் கிராமங்களில் காபுலியர்கள் என்ற வட மாநிலத்தவர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு பிழைப்பு தேடி வந்தது, "குற்றப்பரம்பரை " கதையில் இந்தியாவில் இயற்றப்பட்ட CD ACT எனப்படும் குற்றப்பரம்பரை சட்டத்தால் சீரழிந்த குடும்பங்களின் வலியை பதிவு செய்கிறார் செல்லப்பா. இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் ஒவ்வொரு வகையில் சிறந்தவையாக இருந்தாலும் என் மனதிற்கு நெருக்கமான கதை ஒன்றுதான். ஒரு செடியில் ஒரே நிறத்தில் பல மலர்கள் பூத்து குலுங்கினாலும் நம் மனம் அந்த மலர்கூட்டங்களில் இருந்து ஒரு பூவை தேர்ந்துதெடுப்பது போலத்தான் இதுவும். "நொண்டிகுழந்தை" என்ற கதைதான் அது. ஞானம் என்று அந்த குழந்தைக்கு பெயர் சூட்டியதிலே செல்லப்பா என் மனதில் நின்றுவிட்டார். மேலும் அந்த குழந்தையின் ஊனமான அந்த பாதங்களை வாழைப்பூவின் இதழ்களோடு ஒப்பிட்டது இந்த கதையை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. " குழந்தைகளின் மனதில் எந்தவிதமான உணர்ச்சியும் நிரந்தரமாக தங்குவதில்லை. வளரவளரத்தான் மனிதன் குரங்காகிறான். எதிலும் தன் பிடிவாத முத்திரையை பார்ப்பதில் அவன் மனம் உற்சாகம் அடைகிறது " எவ்வளவு அர்த்தமுள்ள வரிகள் இவை. இது நிச்சயம் குழந்தைகளை பற்றிய கதைதான் ஆனால் குழந்தைகளுக்கான கதையல்ல என்பதை உணர்த்த இந்த வரிகள் போதும். இலக்கியத்தின் உச்சம் ஏதேனும் ஒரு கதையில் ஒரு இடத்தில் நிகழும். இந்த கதையில் தான் நேசித்த தன்னை நேசித்த மீனா கண்ணாமூச்சி விளையாட்டில் எக்காரணம் கொண்டும் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக ஞானம் தன்னை மறந்து தடுக்கி விழும் தருணம் மீனாவின் கைகள் அந்த சூம்பிய பாதங்களை தொடுவது -இந்த இடம் தான் இலக்கியத்தின் உச்சம் என்று நான் கருதுகிறேன். இந்த மொத்த தொகுப்பிற்கும் இந்த ஒற்றை நிகழ்வு போதும் இந்த புத்தகத்தை ஒரு சிறந்த இலக்கிய பொக்கிஷமாக மாற்றுவதற்கு. எங்கோ? எப்பொழுதோ? வாழ்ந்த மனிதர்கள் இன்று வாழும் மனிதர்களுக்கு கதைகளின் வழி வாழ்க்கை நெறிமுறைகளை கற்றுக்கொடுப்பதுதான் இலக்கியம் என்றால், அதை தேடித் தேடி படிப்போம்! வாழ கற்றுக்கொள்வோம்!