மனதைப் பற்றி ஆராயும் நோக்கத்துடன் மனோதத்துவம், உளவியல், உடல்மொழி என்று பிரிவுகளில் பல ஆழமான, அறிவுசார் நூல்கள் வெளிவந்துள்ளன. இதிகாசங்களிலும் புராணங்களும்கூட மனத்தின் தன்மைகள் பற்றிப் பேசியிருக்கின்றன. மனதைப் பற்றிப் பேசக்கூடிய, மனதின் தன்மை பற்றிக் கேள்வி எழுப்புகின்ற பல பாத்திரங்கள் புராணங்களில் விரவிக்கிடக்கின்றன. ஆனால் இந்தப் புத்தகம் முற்றிலும் மாறுபட்டது. மனதைப் பற்றி மனத்தின் கண்ணோட்டத்திலிருந்தே எழுதப்பட்ட புத்தகம் இது. எழுத்தாளர் சோம. வள்ளியப்பன், பல பன்னாட்டு நிறுவனங்களில் உயர்பதவி வகித்தவர். பலதரப்பட்ட பின்புலங்களிலிருந்து வருபவர்களுடன் அலுவல்ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பழகிய அனுபவம் கொண்டவர். மனம் என்பதை ஒரு கருவியாகப் பார்க்கும் நூலாசிரியர், அந்த மனதை வெற்றியாளர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை சுவாரஸ்யமான சம்பவங்களின் வழியாக சுவையாகவும் ஆழமாகவும் பதிவுசெய்திருக்கிறார். "எந்தக் கணினியும் நல்லக் கணினிதான் கையில் கிடைக்கையிலே. அது இன்பொருளாவதும், இடையூராவதும் அவரவர் பயன்பாட்டிலே.' இது புதுமொழி. மனதுக்கும் பொருந்துகின்ற நன்மொழி. நம்முடைய மனம் மக்கர் செய்தால் அதற்கான மெக்கானிக்கை (மனோதத்துவ நிபுணர்) நாடாமல், நம்மை நாமே செம்மைப்படுத்திக்கொள்ள (trouble shoot) முடியுமா?முடியும், அதற்கு, மனதோடு மனம்விட்டுப் பேச வேண்டும். அதுதான் மனதோடு ஒரு சிட்டிங்!
பொதுவாக சுயமுன்னேற்றுத்துக்கான புத்தகங்கள் என்றால், அறிவுரைகளை அள்ளி வீசியிருப்பார்கள், ஆனால் இதில் அறிவுரைகளை உதாரணங்களாக, கருத்துக்கள் வடிவில், தான் சந்தித்த மனிதர்களின் மூலம் பெற்ற அனுபவங்கள், புத்தர் போன்ற பல மகான்களின் கருத்துக்களை மேற்கோள்களாக காட்டி எழுதியுள்ளார், திரு சோம வள்ளியப்பன்.
இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்களில் மனிதவளத்துறை(HR)யில் பணியாற்றி வந்துள்ளார். அதனாலேயே என்னவோ, பொருளாதாரம் பட்டம் பெற்றவராயினும், பலதரப்பட்ட மனித மனங்களை நன்கு படித்ததனால், அம்மனங்களிலிருந்து தாம் பெற்றதை இப்புத்தகம் வாயிலாக பகிர்ந்துள்ளார்.
இப்புத்தகம், தம் மனதை புரிந்துகொள்ள, கைக்கொள்ள, சொல்பேச்சு கேட்க வைக்க, குறிப்பாக பக்குவத்திற்கு உட்படுத்த எண்ணுபவருக்கு நல்லதொரு வழிகாட்டி. அதுவே, பக்குவப்பட்டவர்களாக தங்களை உணர்பவர்களும், தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்த , ஒப்பிட்டு சரிபாரத்துகொள்ளவும் உதவும்.
புத்தகத்தின் நடுநடுவே அந்தந்த கட்டுரையை பிரதிபலிக்கும் வரைபடங்களை இடம்பெறச்செய்தது, நம்முள் அக்கட்டுரையின் தாக்கத்தை வீரியப்படுத்துகிறது.
புத்தகத்திலிருந்து...
\\ எவரும் நடந்த செயலுக்காக வருத்தப்படுவதில்லை. அச்சப்படுவதில்லை. அந்த நிகழ்வால் ஏற்படப்போகும் விளைவினை நினைத்துதான் கவலை உண்டாகிறது. நடந்தது வேறு, அதனைப் பற்றிய நினைப்பு வேறு. //
\\ "இதுவரை உலகம் பெற்றுள்ள எல்லா அறிவும் மனதில் இருந்து வந்தவையே. பிரபஞ்சத்தின் எல்லையற்ற நூற்களஞ்சியம், உங்கள் சொந்த மனதிற்குள்ளேயே தான் இருக்கிறது . புற உலகம் நீங்கள் உங்கள் மனதை ஆராய்வதற்காக அமைந்த வெறும் ஒரு தூண்டுகோல், ஒரு வாய்ப்பு மட்டுமே. ஆனால் நீங்கள் ஆராய போகும் பொருளும் உங்கள் மனதுதான்". மனதைப் பற்றி இப்படி சொன்னது சுவாமி விவேகானந்தர். முதல்முறை எதிர்க்கிற வலுவுடன் மனதால் அடுத்த அடுத்த முறைகளில் எதிர்க்க முடியாது. மனது பாவம் வேறுவழியின்றி அதன் பக்கம் சாய்ந்து விடும். கட்சி மாறிவிடும்., ஒரு முறை கூட விஷயங்களை செய்யக்கூடாது என்பதுதான் உங்களுக்கான தகவல் . //
\\ காபித்தூள் அள்ளிய கரண்டி , மிளகாய் கிள்ளிய விரல்கள், எரிச்சலில் இருக்கும் மனநிலை. இவையெல்லாம் அடுத்து செய்பவவற்றையும் பாதிக்கும். அந்த வாசனை,காரம், எரிச்சல் போகும்வரை காத்திருப்பது தான் புத்திசாலித்தனம். //
\\ எதைச் செய்யலாம் என்று முடிவு செய்வதற்கு டெலஸ்கோப் பார்வையையும், எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு மைக்ரோஸ்கோப் பார்வையையும் பயன்படுத்தலாம். //
மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றியும், மனதைப் புரிந்துகொள்வதைப்பற்றியும் விளக்குகிறார் ஆசிரியர். மனதை சரியாகப் புரிந்துகொண்டு செயலாற்றினால் வெற்றி எளிதில் வசப்படும் என்கிறார் ஆசிரியர்.