#258
Book 19 of 2024- தொடுகோடுகள்
Author- ரமணிசந்திரன்
“பெண் படும் பாட்டைப் பார்க்கையில், மானம் . .உயிர் என்றெல்லாம் கூறி அவளை வளர்த்ததே தவறோ என்று கூட மயங்கியது தாய் மனம். ஒழுக்கம் என்று நினைத்த அந்த வளர்ப்புதானே, அவளை இப்படித் துடிக்க வைக்கிறது!”
நான் படித்த முதல் ரமணிசந்திரன் புத்தகம் இது. “சக்தி”,”சித்தார்த்தன்” பற்றிய கதை இது. சக்தி-மிகவும் திறமையான,அழகான பெண். சிறு வயதிலே தந்தையை இழந்து,தாயின் அரவணைப்பில் வளர்ந்த மகள். தன் அம்மாவுக்காகவும்,குடும்பத்துக்காகவும் அயராது உழைத்துக் கொண்டிருப்பவள். “சித்தார்த்தன்” என்ற செல்வந்தருக்கு இவள் மீது காதல் வருகிறது,இவள் காதலை ஏற்க மறுக்க,அவளை கற்பழித்து திருமணம் செய்து கொள்கிறான். அவள் இவனை மனம் மாறி ஏற்றுக்கொண்டாளா என்பது தான் கதை.
இதில் வந்த பெண் கதாபாத்திரம் முதல் பாதி புத்தகத்தில் என் மனம் கவர்ந்த கதாநாயகியாகவே மிளிர்ந்தாள். பின் அவள் தன் இயல்பையே மறந்து ஏதோ மாறிவிட்டது போல் தான் உணர்ந்தேன். சமீபத்தில் நிறைய பாலகுமாரன் படிப்பதினாலோ என்னமோ, கற்பை இழந்து விட்டால் என்ன, உன் இலக்கை நோக்கி நீ் ஓடு என்று அவரது எழுத்துக்களே காதில் விழுகின்றன. இதில் அவள் கர்ப்பம் என தெரிந்ததும், அவளுக்கு அவன் நடந்துக் கொள்ளும் விதத்தைப் பார்த்து காதல் வருமாறு எழுதியிருப்பது எல்லாம் இந்த காலத்தில் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. காதலித்தப் பெண்ணை அடைய முடியாவிட்டால், அவளை கற்பழிப்பதும், அதனால் அவளை திருமணம் செய்துக் கொள்ள சொல்லி blackmail செய்வதும்,திருமணத்திற்குப் பின் குழந்தை என வந்தால் அவளுக்கு தன் மீது காதல் ஏற்படும் என அவன் நினைத்து அவளை கர்ப்பமாக்குவதும் எந்த ஊரில் காதல் ஆகும்? இந்த நாவல் அபத்தமாக இருந்தது. சக்தியின் கதாபாத்திரம் பாலகுமாரனின் நாவல்களில் இருந்தால் எப்படி மிளிர்ந்திருப்பாள் என்பதை எண்ணாமல் இருக்க முடியவில்லை.
இந்த கதையின் முடிவுக்கு ஆசிரியர் என்ன தான் காரணங்கள் அளித்தாலும் எந்த காலத்திலும் இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.