நான் முதலில் வாசித்த மகாபாரத சுருக்க கதை அ.லெ.நடராஜன் எழுதி திருமகள் பதிப்பகம் வெளியிட்டது. அது தந்த வாசிப்பனுவத்தினை விட சித்பவானந்தர் எழுதிய இந்தப் பதிப்பு பல மடங்கு ஆழ்ந்தது. அத்தனை முக்கியமானப் பாத்திரங்களின் தகைமையும், மோதல்களும் எந்த சாய்வும் இன்றி சீரிய நோக்கில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரே வீச்சில் படிக்க ஏதுவானது. யக்ஷன் - யுதிஷ்ட்ரன் உரையாடல், அம்புப் படுக்கையில் பீஷ்மர் - யுதிஷ்ட்ரன் உரையாடல், போருக்கு முந்தைய அர்ஜூனன் கண்ணன் கீதாபதேசம், அஸ்வத்தாமனின் கோபத்தின் வெறியாட்டம், இந்திரனிடம் கர்ணன் பெற்ற சக்தி அஸ்திரம், துருபத மன்னன் துரோணாச்சாரியார் உறவு உட்பட எந்த முக்கியமானப் பகுதிகளும் விடுபடவில்லை. பிரஹனளாவாக அஞ்ஞான வாசத்தில் இருந்த அர்ஜூனனின் மறுபிரவேச பகுதியின் வர்ணனை அலாதியானது. ஒரு அம்பினை துரோணாச்சாரியாருக்கு வந்தனையாகவும், அடுத்த அம்பினை போரிட அனுமதி கேட்டும் அர்ஜூனன் எய்துவார். போரிடத் தயங்கும் விராட இளவரசன் உத்திரனனை, சத்திரிய தர்மத்தினை விளக்கி அர்ஜூன்ன் தெம்பேற்றும் பகுதியையும் விரும்பிப் படித்தேன். அன்னவர், யதாஸ்தானம், அடவி, புங்கவன், சிரேஷ்டன் என பல புதிய சொற்களை அறியப் பெற்றேன். பாகுபலி திரைப்படம் ஆங்கில லயன் கிங் படத்தின் தழுவல் என நினைத்திருந்த என் எண்ணத்தை மாற்றியது இந்தப் புத்தகம். மகாபாரதக் கதையை முதன் முதலாகத் தமிழில் வாசிப்பவர்களுக்கு இந்தப் புத்தகத்தை பரிந்துரை செய்கிறேன்.
When you can connect with the thoughts, events and characters in the Mahabharat in a way a true Indian can, what more is needed? I bow down to Lord Krishna and the mighty Pandavas.