இது மலாலாவின் கதை மட்டுமல்ல, உலகம் முழுவதும் மத அடிப்படைவாத தீவிர சட்டங்களுக்கு எதிராக தங்களது கல்வி உரிமை கோரும் லட்சக்கணக்கான குழந்தைகளின கதை. இதன் பின்னே உலகளவிலான ஆயுத அரசியல் எப்படி செயல்படுகிறது என்பதை உணரமுடியும். இந்தக் குழந்தைகளின் கையிலிருந்து புடுங்கப்பட்ட புத்தகங்களும் அன்றாட உணவுமே அடிப்படைவாதிகளின் கையில் இருக்கும் ஆயுதங்கள். இது மத அடிப்படைவாத யுத்தத்திற்கு எதிராக தொடங்கும் கரும்பலகை யுத்தம்.
புத்தகம் : மலாலா கரும்பலகை யுத்தம் எழுத்தாளர் : ஆயிஷா.இரா. நடராசன் பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 64 நூலங்காடி : ஈரோடு புத்தகக் கண்காட்சி
மலாலா என்னும் இப்பெயரை அறியாதவர்களே இருக்க முடியாது . தாலிபான்களுக்கு எதிராக கருத்தை பதிவு செய்ததற்காக தனது பள்ளிப் பேருந்திலேயே , அவர்களின் குண்டுகளை எதிர் கொண்டவர் . மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலை நாடுகளின் உதவியோடு மீண்டு வந்தார் . ஆசிரியர் , மலாலாவுடன் உரையாடுவதாக இந்த நூல் அமைந்திருக்கிறது . மலாலாவின் குடும்பத்தில் தொடங்கி , புத்தக வாசிப்பு , ஸ்வாட் பிராந்தியத்தில் ஏற்பட்ட அசாதராமான நிலை , இறுதியாக மலாலா பெற்ற விருதுகள் , அவருக்கு உதவிய உலகப் பிரபலங்களின் வரிகளோடு இந்த நூல் முடிவடைகிறது .
மலாலா பற்றி தெரியவேண்டுமென்றால் அவசியம் இந்த புத்தகத்தை வாசிக்கலாம் .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
மலாலா யூசுஃப்சாய் பற்றிய இந்த நூலைப் படிப்பது, பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தையும், அடிப்படை மதவாதத்தின் ஆதிக்கத்தால் பெண்களின் உரிமைகள் எவ்வாறு தடைகளுக்கு உள்ளாகின்றன என்பதையும் புரியச் செய்கிறது. உலகங்கிலம் கல்வி சாமானியர்களுக்கு கிடைக்க எத்தனை போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது வரலாற்றின் முக்கிய அத்தியாயங்களில் ஒன்று. குறிப்பாக, பெண்கள் கல்விக்காக நடந்த தியாகங்களும் போராட்டங்களும் தனித்துவமானவை. இந்தியாவில் சாவித்திரிபாய் புலே, பண்டித ராமாபாய், முத்துலட்சுமி ரெட்டி போன்ற பெண்கள் பெண்கள் கல்விக்காக செய்த முயற்சிகள் இதற்கு சிறந்த உதாரணங்கள். இன்று பல இடங்களில் பெண்கள் கல்வி பெறுவதற்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது. பல நாடுகளில் பெண்களின் சுதந்திரம் மதவாதக் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடாமலே இருக்கிறது. "பெண்கள் பள்ளியில் படிக்கக்கூடாது; படித்தால் கொலை செய்வோம்" என்ற மிரட்டல்களை எதிர்கொண்டு, அதனால் பாதிப்பு அடைந்தும் இன்றும் பெண் கல்வி உரிமைக்காக வாதாடும், போராடும் மழலைப் பற்றி படிக்க வேண்டியது அவசியம். இந்த நூல் மலாலாவின் வாழ்க்கையின் மூலம் ஆப்கானிஸ்தானில் உருவான பயங்கரவாத சூழல், அதில் அமெரிக்காவின் கேப்பிட்டலிச அரசியல் விளையாடிய பாதிப்பு ஆகியவற்றையும் வெளிப்படுத்துகிறது. உலகளாவிய ஆயுத விற்பனையும் அதன் விளைவுகளும் நமக்கு உணர்த்துகிறது. இந்த நூலைப் படிப்பது பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தை மேலும் புரியச் செய்வதோடு மட்டுமல்லாமல், பொதுச்சமுகம் கல்வியின் மேல் வைத்திருக்கும் பார்வையை கேள்வி எழுப்பி, சமூக மாற்றத்தின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. ஆயிஷா நடராசன் எழுதிய இந்த நூல், பெண்கள் கல்வி மற்றும் சுதந்திரத்திற்கான போராட்டங்களின் அர்த்தத்தை நமக்கு தெளிவாகக் கூறுகிறது.