இதுவரை வெளிவந்திருக்கும் சம்பத்தின் ஒரே புத்தகம் 'இடைவெளி' நாவல் மட்டுமே. 'தெறிகள்' என்ற காலாண்டிதழின் முதல் இதழில் இப்படைப்பு வெளியானது. வெளிவந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 'க்ரியா' அதைப் புத்தகமாக வெளியிட்டது. புத்தகத்தின் அச்சான சில பக்கங்களைக் கூட சம்பத் பார்த்துவிட்டிருந்தார். புத்தகம் பைண்டிங்கில் சில நாள் முடங்கிக் கிடந்தபோதுதான், சம்பத்தின் மரணச்செய்தி, இறந்து சில நாட்களுக்குப் பிறகு, வெளிப்பட்டது.
சாவு என்னும் அடிப்படைப் பிரச்சினையில் உழன்று அருமையான சில சிறுகதைகளையும் (சாமியார் ஜுவுக்குப் போகிறார், கோடுகள், இடைவெளி) படைத்த சம்பத்துக்கு திடீரென ஏற்பட்ட மூளை ரத்த நாளச் சேதம், இடைவெளியென இருப்பதாலேயே எவராலும் வெல்லப்பட முடியாத சாவு, அவரை அபகரிக்கக் காரணமாகிவிட்டது.
தமிழில் நவீன செவ்வியல் படைப்பு என்பதற்கான ஒரே சிறந்த படைப்பாக நாம் கொண்டிருப்பது இடைவெளி தான். பரந்த, பிரும்மாண்டமான தளமில்லை என்றாலும் சிறிய, ஆழமான, நுட்பமான நவீன படைப்பு, படைப்புலகம் இட்டுச் செல்லும் அறியப்படாத பிராந்தியங்களுக்கு முற்றாகத் தன்னை ஒப்புக் கொடுத்து அச்சமற்ற, சமாளிப்புகளற்ற பயணத்தை மேற்கொண்ட நவீன படைப்பாளி சம்பத்.
உலக நாவல் பரப்பில் நம் பங்களிப்பாக ஒரு நாவல் முன்வைக்கப்பட்டு ஏற்கப்படுமெனில் அது 'இடைவெளி' மட்டுமாகவே இருக்க முடியும். இது, சாவு என்பது என்ன என்ற அடிப்படைக் கேள்வியில் அலைக்கழிக்கப்படும் தினகரன் என்ற பாத்திரம் அதற்கான விடை தேடிச் செல்லும் நாவல். சம்பத்தின் சுயசரிதை அம்சங்கள் இப்படைப்பில் விரவிக் கிடக்கின்றன.
சாவு — முரண்பாடுடைய ஒரு இடைவெளி, தனக்கான இடைவெளிக்காக அது எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறது இல்லையேல் வேறொன்றின் இடைவெளியை சுருக்கி தன்னை உயிர்ப்பித்து கொள்கிறது.
சாவு என்கிற முழுமையின் முன் மானசீகமாக மண்டியிட வைக்கும் நாவல் - இடைவெளி...♥️
நாவல் ஆசிரியர் : சம்பத் பரிசல் வெளியீடு 116 பக்கங்கள்
மனிதர்கள் தன் வெளியுலகிலும் , அக உலகிலும் ஏதோ ஒன்றை தொடர்ந்து தேடிக்கொண்டேயிருக்கிறான் . ஒரு வகையில் தேடல் தான் அவனை முன்நகர்த்துகிறது . வெளியுலகின் தேடல் வழி இந்த உலகத்தை ஓரளவுக்கு புரிந்துவைத்திருக்கிறான் . ஆனால் அக உலகத்தின் தேடலில் அவனுக்கு மிஞ்சியது போதாமை மட்டுமே . சில நேரங்களில் அக உலகின் தேடலில் அவன் தன்னையே தொலைக்கவும் நேரிடுகிறது . புற உலக தேடலில் அறிவியல் ஒரு பெரும்துணையாக இருந்து மனிதர்களின் பல கேள்விகளுக்கு விடையளித்துள்ளது . அதுவே அக உலகின் தேடலில் அறிவியலால் ஆராய்ந்தும் ஒரு சில கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே இருக்கின்றன . இப்படி அக உலகை தொடர்ந்து கேள்விகேட்டுக்கொண்டே இருப்பர்வகளாகிய தத்துவவாதிகள் , அறிவியல் அறிஞர்கள் வரிசையில் தவிர்க்கமுடியா இடம் பிடிப்பவர்கள் இலக்கியவாதிகளும் தான் . எழுத்தாளர்கள் தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை வழி அக உலகை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்திக்கொண்டே இருக்கின்றனர் . அவர்களுக்கு இருக்கும் சில அடிப்படை கேள்விகள் மனிதன் ஏன் சிரிக்கிறான் ? ஏன் அழுகிறான் ? வலிகளும் - கண்களும் - கண்ணீரும் எங்கு சந்திக்கின்றன ? மனிதன் ஏன் தனிமையிலிருந்து தப்பித்துக்கொள்ள தவிக்கிறான் ? பிறப்பை பெருமகிழ்வுடன் கொண்டாடும் மனிதன் - இறப்பை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான் ? . இப்படி எண்ணற்ற கேள்விகளை உலக இலக்கியம் அனைத்தும் தொடர்ந்து அலசி ஆராய்ந்து கொண்டிருக்கையில் , நம் தமிழ் இலக்கியத்தில் இப்படி ஒரு அக தேடல் தழுவிய கதைதான் இந்த இடைவெளி . இந்த புத்தகத்தின் மதிப்புரையில் சி மோகன் அவர்கள் கூறுவது போல கருத்துலகம் சார்ந்து தமிழில் எழுதப்பட்ட படைப்புகள் மிக குறைவுதான் , அதிலும் முழுக்க முழுக்க கருத்துலகம் சார்ந்து எழுதப்பட்ட நாவல்களுள் இந்த இடைவெளி முதன்மையானது . இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டாலும் வாசகர் பரப்பு மிக குறைவுதான் . எஸ் .சம்பத் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு கொடுத்த படைப்புகள் குறைவாக இருந்தாலும் - அவை அனைத்தும் ஆழமானவை . சு ரா கூறுவது போல " அதிமேதாவித்தனத்துக்கும் அற்ப ஆயுளுக்கும் அப்படி என்ன சம்பந்தமோ " அந்த சாபம் சம்பத்தையும் விட்டு வைக்கவில்லை . வெகுவிரைவில் இந்த உலகிலிருந்து விடைபெற்றுவிட்டார் . ஒரு வேளை அவர் நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்தால் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த தத்துவ மேதையாக திகழ்ந்திருப்பார் .
அப்படி எதை கேள்வி கேட்கிறது இந்த இடைவெளி நாவல் ? மனிதன் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள மறுத்து , விலகிச்செல்ல நினைக்கும் மரணத்தை பற்றிதான் . பிறக்கும் ஒவ்வொரு உயிர்க்கும் இறப்பும் நிச்சயம் என்பது எழுதப்பட்ட விதியாக இருப்பினும் , மனிதன் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு தப்பித்துக்கொள்ளவும் முயற்சிக்கிறான் .இந்த எண்ணத்திற்கு வாழ்க்கையின் போதை ஒரு காரணமாக இருக்கலாம் . பிறப்பு - இறப்பு இவ்விரண்டும் நிச்சயம் , நிச்சயமற்றது வாழ்வுதான் - ஆனால் அந்த நிச்சயமற்றதை நோக்கியே மனிதன் ஈர்க்கப்படுகிறான் . பிறப்பை உணர்ந்து , பார்த்து , முழுதாக அனுபவிக்க மனிதனால் முடிகிறது .ஆனால் இறப்பு ஒரு புதிராகவே உள்ளது . உண்மையில் மரணம் எப்படி நிகழ்கிறது? , மரணம் எங்கிருந்து வருகிறது ? எங்கு செல்கிறது ? யாருக்காக ? எதற்காக பொறுமையாக காத்திருக்கிறது ? இந்த கேள்விகளைத்தான் தன் கதையின் வழி தன்னிடமே கேட்டுக்கொண்டு நம்மையும் அவருடைய பயணத்தில் இணைத்துக்கொள்கிறார் ஆசிரியர் .
தினகரன் என்ற கதாபாத்திரம் - ஒரு சராசரியான நடுத்தர வர்க்க சம்சாரி - மனைவி , மக்கள் , மாத சம்பளம் , நண்பர்கள் , இலக்கியம் , வாசிப்பு ( மிகவும் பிடித்தவர் D H LAWRENCE ) என வாழ்க்கை நிறைவாக இருப்பினும் அவருக்கு இருக்கும் மிகப்பெரிய கேள்வி சாவு -மரணம் . ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவர் தன் கவனிப்பின் வழி ஒரு விடையை கண்டடைகிறார் ."சாவு பலவிதங்களில் சம்பவித்தாலும் , அதற்கு மூலகாரணம் ஒன்றாகவேயிருக்கவேண்டும் " இந்த கோணத்தில் தன் தேடலை தொடங்குகிறார் . தேடலின் பயணத்தில் அவர் கண்டடையும் தற்காலிக பதில்களை தனக்குள்ளே விவாதித்துக்கொள்கிறார் , ஒரு கட்டத்தில் மரணத்தை உருவகப்படுத்த தொடங்கி தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார் , அவருடைய விவாதத்தில் மரணமும் ஓர் உருவமாக கலந்துகொள்கிறது . இந்த பயணத்தில் சாவு மனிதனுக்காக காத்துக்கொண்டிருக்கிறது எனவும் , வாழ்க்கையே சாவு மனிதனுக்கு கொடுத்த கருணையெனவும் ஒரு தற்காலிக முடிவுக்கு வருகிறார் . ஏனோ இன்னமும் போதவில்லை - இத்தருணத்தில் அவருடைய பெரியப்பா மரணப்படுக்கையில் இருப்பதாக செய்தி வர - தினகரன் தன் ஆராய்ச்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்று கருதி பெரியப்பாவின் மரணத்தை அருகில் இருந்து பார்க்கிறான் . அவருடைய கடைசி நிமிடங்களில் தினகரன் மட்டுமே உடனிருக்கிறான் . இதன் பின்னர் தினகரன் சாவின் மூல காரணத்தை கண்டடைந்தாரா என்பதே இக்கதையின் முடிவு .
மரணம் ஒரு இடைவெளி என்கிறார் . இந்த கருத்தை எடுத்துக்கொண்டு சற்று சிந்தித்து பார்ப்போம் . மனிதன் உடலால் இறக்கிறான் , உயிர் உடலை உதிர்த்து விடுகிறது . உயிர் உருமாறுகிறது - துகள்களாவோ , அணுக்களாகவோ உருமாறி இந்த உலகில் வேறு ஒரு பணியை மேற்கொள்ள தொடங்குகிறது . அப்படி பார்த்தால் உயிர் இதுவரை உடலால் மேற்கொண்ட பயணத்தை வேறொரு ரூபத்தில் தொடர்கிறது . இந்த உருமாற்றம் நிகழும் அந்த சிறு இடைவெளி தான் சாவு-மரணம் என்கிறார் . இதனை எந்த விதமான மரணத்தோடு நாம் பொருத்தி பார்த்தாலும் மிஞ்சுவது அந்த இடைவெளிதான் . இடைவெளியில்லாம் இங்கு மரணம் நிகழ்வதில்லை . இதுவும் ஆசிரியருக்கு போதவில்லை - மரணம் தொடர்ந்து அவரை உறங்கவிடாமல் செய்கிறது - இதனை அடுத்த படிநிலைக்கு கொண்டுசெல்கிறார் . சாவு ஒரு முரண்பாடுடைய இடைவெளி என்கிறார் ( CONTRADICTORY SPACE ) .ஆம், ஒரு வகையில் உண்மைதான் - சில தருணங்களில் இடைவெளியை கொடுத்ததும் , சில தருணங்களில் இடைவெளியை பறித்துக்கொண்டும் சாவு தன் இருத்தலின் காரணத்தை உணர்த்துகிறது .
இந்த படைப்பில் என்னை கவர்ந்தது என்னவென்றால் - நிற்காமல் , யாருக்கும் அடங்காமல் ஓடிக்கொண்டிருக்கும் சாவின் பயணத்தை , அதன் பாதையை கண்டுபிடித்துவிட்டோம் என்ற மமதையில் இது முடியவில்லை மாறாக சாவிடம் மண்டியிடுகிறார் . சாவு மண்டியிட சொல்கிறது . மானசீகமாகவே ? உடலாலா ?என்கிறார் தினகரன் , சாவு மானசீகமாக என்று தினகரனையும் , அவனுடைய தேடலையும் நிறைவாக ஏற்றுக்கொள்கிற��ு . இந்த படைப்பு இன்னும் மிகப்பெரிய வாசகர் பரப்பை சென்றடைய வேண்டும் . பல தருணங்களில் இந்த படைப்பு விவாதிக்கப்பட வேண்டும் . மரணம் என்பது இருளல்ல - அது வெறும் குறைவான ஒளி என்பதை மக்களுக்கு உணர்த்தி , இந்த படைப்பை ஒரு ஆரம்ப புள்ளியாக வைத்துக்கொண்டு தினகரனின் தேடலை நம்முடைய தேடலாக மாற்ற வேண்டும் . மரணத்தை கண்டு அஞ்சி விலகிச்செல்லும் சாதாரண மனிதனாக அல்லாமல் , நம் சிந்தனையின் படிநிலையை சற்று உயர்த்தி மரணம் நம் தொடர் பயணத்தின் ஒரு சிறு இடைவெளி என்பதை புரிந்துகொள்ள முயற்சிப்போம் .
தினகரனை சாவு என்ற எண்ணம் பிடித்துக் கொண்டது இந்த வாசிப்பில் நாமும் தினகரனுடன் சேர்ந்து சாவை நோக்கிய பயணத்தில் ஈடுபடுகிறோம் மிகுந்த வல்லமையுடன் எழுதப்பட்ட தமிழில் மிக முக்கியமான நாவல் என்று கருதுகிறேன் அசாத்தியமான சிந்தனைகளும் எண்ண ஓட்டங்களும் நிறைந்த எழுத்து . தினகரனுடைய எண்ண ஓட்டங்கள் படிக்க படிக்க நம்மை சிந்தனை அளவில் ஒரு பயணம் செல்ல வைக்கிறது
நான் படிச்ச முதல் தமிழ்ல வந்த 'சர்ரியலிசம்' நாவல். @missedmovies பரிந்துரைதான், அதிலும் தரமான பரிந்துரையில் அவர்கள் மூலம் படித்த முதல் நாவலும் கூட.
நான் அப்போ வயதளவில் முழுதும் முதிர்ச்சியடையாத காலமாதலாலும், தனிமையினாலும், சாவின் மீதான ஈர்ப்பினாலும், தற்கொலையைப் பற்றி "என்னதான் அது?" என்று அதன் எண்ணங்களைப் புடமிட்டு புரிந்துகொள்ள முயன்றதாலும், இது இயற்கையாக என்னைத் தேடி வந்த படைப்போ என்னவோ? இந்த நாவலின் மீதான ஈர்ப்பும், ததும்பும் ஆர்வமும், கூறப்பட்ட உண்மையின் சாரமும், தேடல் தாகமும் இப்போது படித்தாலும் கூட புதிதாகவே தென்படும்.
தினகரன் என்ற இல்லற வாழ்வை சற்றே துறந்து வாழ்பவன் "சாவு எப்படி நிகழ்கிறது / சம்பவிக்கிறது?" என்ற தேடலுக்குள் நிலைத்து, அதிலேயே மூழ்கி, ஆழமறியாமல் தேடல் வேட்கையுடன் திரிந்து, இறுதியில் அவருக்கு 'சாவே' வந்து "நான் இடைவெளியில் இருக்கிறேன்! அது சுருக்குக்கயிருக்கும் - கழுத்துக்குமான இடைவெளி, அது சிவப்பு ரத்த அணுக்கள் குறைந்து வெள்ளை ரத்த அணுக்கள் பரவுகிற இடைவெளி, மூச்சு இழுப்பிற்கும் - உடல் துடிப்பிற்குமுள்ள இடைவெளி..." என்று பதிலளித்துவிட்டு "மண்டியிடு" என்று தினகரனுக்கு அன்புக் கட்டளையைக் கொடுக்க தினகரன் "மானசீகமாகவா? உடம்பாலும் கூடவா?" "மானசீகமாகப் போதும்" நானும் தினகரனோடு சாவுக்கு மண்டியிட்டேன்.
நாவலாசிரியர் எஸ். சம்பத் அவர்கள் இந்தக் கதையை புத்தகமாகப் பிரசுரிக்க கதையில் சில திருத்தங்களை மேற்கொண்டு முயற்சியெடுக்க, இறுதியில் அவர் புத்தகம் அச்சுக்குப் போகும் தருவாயில் சாவுக்கு உடலாலும் மனதாலும் மண்டியிட்டிருந்தார்.
Just finished reading the book 'Idaiveli' by Sampath. It was a worth and must-read book. The way the author has portrayed the concept of death is so profound, it gave me a lifetime answer about it. I highly recommend this book to everyone. It will change the way you think about death and life. #Idaiveli #Sampath #Death #Life #MustRead