"ஒரு கூர்வாளின் நிழலில்" - விடுதலை புலிகள் இயக்கத்தில் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தமிழினியின் சுயசரிதம். விடுதலை புலிகளின் இயக்கத்தில் தலைமை இருந்த எவரும் தங்கள் வரலாற்றை, போரின் நாட்களை பதிவு செய்து நான் படித்ததில்லை. எனவே, தமிழினியின் இந்த புத்தகம் முக்கியமானதாக இருக்கிறது.
1980இன் பிற்பகுதிகளில் எனது பள்ளி நாட்களில் இலங்கை ஒரு முக்கியமான இன பிரச்சினையாக விவாதிக்க பட்டது. 8-9ம் வகுப்பில் (1987) சீறி சபாரத்தினம், உமா மகேஸ்வரன், பிரபாகரன், பாலகுமாரன் போன்றோர் எங்களுக்கு பெரும் நாயகர்களாக இருந்தார்கள். இன்றும் எங்கள் வகுப்பில் சீறி சபாரத்தினம் எப்படி மேலே நோக்காமல் கரண்டு கம்பியை சுட்டு அறுப்பார் என்று என் நண்பன் நடித்துக் காட்டியது நினைவில் இருக்கிறது. தேவி, ராணி போன்ற வார இதழ்களில் வரும் கட்டுரைகளை படித்துவிட்டு பள்ளி வாசலில் பல நாட்கள் நின்று எங்களால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று பேசி இருக்கிறேன்.
தமிழினியின் நினைவுகள் அவர் விடுதலை புலிகள் 1991இல் பதினெட்டு வயதில் இயக்கத்தில் இணைவதில் தொடங்குகிறது. அன்றில் இருந்து 18 வருடங்கள் அரசியல் துறை போராளியாகவும், களப்போராளியாகவும் இயக்கத்தின் வெற்றிகளையும், தோல்விகளையும் ஆவணப் படுத்தி செல்கிறது. 1993இல் 'ஆப்பரேஷன் யாழ்தேவி'யில் தொடங்கி நந்தி கடலில் முடிகிறது அவரது இயக்க வாழ்வு. இடையில் அவர் மக்களை சந்திப்பது, இயக்க வாழ்க்கை, தலைவர்கள், முக்கிய சமர்கள், குடும்ப துயரங்கள் என பலவற்றையும் பேசிச் செல்கிறார்.
இந்த புத்தகத்தின் மீதான பெரும்பாலான விமர்சினங்கள் அவர் hindsightஇன் உதவியுடன் புலிகளின் தலைமையும் அவர்கள் எடுத்த முடிவுகளையும் விமர்சிக்கிறார் என்பதே. எனக்கு இதில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஒரு கோர யுத்தம் முடிந்த பிறகும் அதற்கு காரண கர்தாக்களையும், அந்த யுத்தம் விளைவித்த கோரங்களையும் பார்த்து அதன் காரணங்களை ஆய்வது எப்படி தவறாகும்? தமிழினியின் முடிவுகள் தவறானவைகளாக இருக்கலாம். ஆனால் எனக்கு அவை ஒரு பெண்ணின் பார்வையில் போர் இப்படித்தான் காட்சியளிக்க முடியும் என்றே தோன்றுகிறது.
புலிகள் மேலான எனது ஈர்ப்பு 1991இல் மே 21இல் முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகான எனது ஈழப்பார்வை அங்கிருக்கும் சனங்களின் மீதான பரிதவிப்பாகவும், இங்கு அதை அரசியலாக்கியவர்களின் மீதான வெறுப்பாகவும் முடிந்தது.
தமிழினியின் வாழ்வு 2009க்கு பின் வெலிக்கடை சிறையிலும், புனர்வாழ்வு மையத்திலும் கழிந்து 2013இல் அவரின் திருமணத்தோடு முடிகிறது. இன்று தமிழினி புற்று நோய்க்கு பலியாகிவிட்டார்.
ஈழ பிரச்சினை பற்றி ஆர்வம் இருக்கும் எவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
புலிகளின் கட்டுக்கோப்பான பரந்த விரிந்திருந்த நிர்வாகத்தன்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தேசத்தின் ராணுவத்தை போல இப்படி ஒரு போராளிகளின் இயக்கத்தை கட்டமைப்பது அசாதாரணமான காரியம். இலங்கை தமிழர்களின் மத்தியில் பள்ளி, கல்லூரி இளைஞர்களின் எழுச்சி மகத்தானதாக இருந்துள்ளது. சொந்த தேசம் காணும் நெருப்பை வளர்த்து பல்வேறு இயக்கங்களில் தன்னை 18-19 வயதுகளில் சேர்த்துக்கொண்டவர்கள் 40-50 வயது வரை குடும்பம் வாழ்க்கையை இழுந்து பலர் உயிரையும் இழுந்திருக்கிறார்கள்.
பின்னாலில் மற்ற இயக்கங்களை அழிக்க புலிகளே அதிக முயன்றதும், சமாதானத்தை விரும்பாததும், கடைசி வரை ஒரு தேசத்தின் இராணுவத்திடம் சண்டைகளில் வென்ற விடலாம் என்ற அதீத நம்பிக்கையில் இயக்கமே காணாமல்போன பரிதாபம். புலிகளின் பல போராளிகளையும், மகன், மகள், தந்தை, கணவர் என புலிகளின் போராளிகளாய் இழந்த குடும்பங்களும், புலிகளால் கடைசி யுத்ததில் கட்டாயமாக சேர்க்ப்பட்டவர்களின் குடும்பங்களும், யாழ் வெளியேற்றம் போல் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இடம்மாறி, வெளியேறி பின்னால் பொதுமக்களின் அரணால் புலிகள் பலர் காப்பாற்றப்படுவதும் தமிழ்நாட்டில் உணர்ச்சி பெருக்கில் உரக்க இயக்க வரலாற்றை மட்டும் தற்பெருமை பேசவதிலிருந்து நம்மை விடுவிடுக்கும். ஈழ இலக்கியம் என்பது புலிகளை பற்றியது மட்டுமல்ல என்பதற்கு இது ஒரு உதாரணம். தன் வரலாறு என்பதால் சில கேள்விகளும், தெளிவுகளும் இருந்துக்கொண்டேதான் உள்ளது.