நம் முன்னோர்கள் ஒன்றும்…. என்பது போன்ற தலைப்புகளை சற்று விலக்கலுடனே அனுகுவேன். பழமைவாத, பழைய சமூக கட்டமைப்பை மீட்டெடுத்தல் போன்ற கற்பனையுலக கூறுகளை விவரிக்கும் பத்திகளுக்காக காத்திருப்பேன்.
இந்த புத்தகத்தில் வெகு சில இடங்களில் அதுபோன்ற தொனி இருந்தாலும் முழுமையாக பார்க்கையில் ஆசிரியர் தனது பார்வையை நடப்புநிலையை மனதில் பொருத்தி எழுதியுள்ளார்.
இயற்கை வாழ்வியல் , சமூகம், உணவுமுறை , பாட்டி வைத்தியம் போன்ற தலைப்புகள் சிறந்த பார்வையை வெளிப்படுத்தினாலும் அவை நான் அறிந்த்தவை அல்லது எதிர்பார்த்தவை. ஆனால் மனநலம் அதன் முக்கியத்துவமும் காக்கும் விதமும், இயற்கை சார்ந்த வாழ்வியலில் சமூகத்தின் பங்கு போன்ற தலைப்புகள் சிந்திக்க வைத்தன. அவற்றுக்கு இலக்கியங்களிலிருந்து சான்று எடுத்திருப்பது கூடுதல் சிறப்பு , புத்தக தலைப்புக்கும் பொருந்துவதாக அமைந்தது.
நேர்மையாகவும், தன்னடக்கத்துடனும் தனது அனுபவங்களையும், அறிவுரைகளையும் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.
அன்று அனைவரும் உடற்பயிற்சிகள் செய்தனர், யாருக்கும் பொருளாதார நெருக்கடி இருக்கவில்லை ஆனால் இன்று …போன்ற சில இடங்கள் சற்று மிகையோ என தோன்றியது. ஆனால் “சிறுவயது பொழுதுபோக்குகள், பழகும் முறைகள், சமூக வழக்கங்கள்” ஆகிய தலைப்புகளை வாசிக்கும் போது ஏக்கம் மிஞ்சியது, அந்த உணர்வு 20 ஆண்டுகளுக்கு முன்பு நாம் வாழ்ந்தது சற்றேனும் இயற்கையை ஒட்டிய வாழ்வு என்பதற்கான சான்று.
இன்றைய சில வாசகர்களிடம் இதுபோன்ற தலைப்புகளிலிருந்து நமக்கு கிடைக்க ஒன்றுமில்லை அல்லது யாவும் தெரிந்தவையே என்பன போன்ற உணர்வுகள் இருக்கக்கூடும். ஆனால் எனக்கு ஒரு நல்ல மறுபார்வையாகவும், இக்கருத்துக்களில் என் நிலை மற்றும் நடைமுறை என்ன , எதை மேம்படுத்தலாம் போன்ற புரிதலுக்கு வர உதவும் பயிற்சியாக அமைந்தது.
128 பக்கங்கள் கொண்ட சிறிய தரமான தாளில் அச்சடிக்கல்பட்ட நூல். எளிதாக வாசிக்கலாம்.