தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு. “பெரிய கதையொன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்” என்று கூறும் அவர், தான் எழுதிய இச்சிறிய கதைகளின் வாயிலாக என்றுமே எழுதி முடிக்கமுடியாத அந்தப் பெரிய கதையான ‘வாழ்வின்’ பக்கங்களை நமக்குப் புரட்டிக் காட்டுகிறார். முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாத அக்கதையினை நாம் பகுதிபகுதியாக வாசித்துக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு தருணத்தில் அது நம்மைப் பற்றிய கதையாக மாறிவிடுவதும் அசோகமித்திரனின் இந்தக் கதைகளில் இயல்பாக நடந்தேறுகிறது. அசோகமித்திரன் செகந்தராபாத்தில் பிறந்து வளர்ந்து சென்னையில் வாழ்ந்துவருபவர். எண்பதுக்கும் அதிகமான வயதுடையவர். அவரது அனுபவங்களாக மட்டும் சுருங்கிவிடாமல், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக நீளும் ஒரு காலகட்டத்தின் சமூகப் பண்பாட்டு வரலாற்றைக் குறிப்புணர்த்தும் புனைவுகளாகவும் விரிவுகாட்டி நிற்கின்றன என்பதே இக்கதைகளின் சிறப்பு.
1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.
அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.
சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
சென்ற நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களின் பட்டியல் தயார் செய்தால் அதில் கண்டிப்பாக அசோகமித்திரன் பெயர் இடம்பெறும்.. நாவல், சிறுகதைகள், கட்டுரை என பல வடிவங்களில் தன் பங்களிப்பு இருந்த போதிலும் சிறுகதையே அவரின் உச்சமாக தோன்றுகிறது, அவரின் கட்டுரைகளிலும் சிறுகதை புதைந்திருப்பதை நாம் காணலாம், அவரின் நாவல்கள் நீண்ட சிறுகதையாகவோ அல்லது ஒத்த சிறுகதைகளின் தொகுப்பாகவே தோன்றும். கரைந்த நிழல்கள் என்ற ஒரு நாவல் போதும் திரைக்கலைஞர்களின் வாழ்வை ஒரு குறிப்பிட்ட காலசூழலில் உறைய வைக்க... ஒரு வாசகனாக அவரின் எழுத்திலிருக்கும் சிறப்பை அறிய அவரின் எழுத்துக்கள் அனைத்தையும் வாசிக்க நினைத்தேன், குறிப்பாக் சிறுகதைகள்...சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து எழுதிய சிறுகதைகள் அனைத்தையும் படிக்க ஓராண்டிற்கு மேல் எடுத்துக் கொண்டேன். 279 சிறுகதைகளை இவர் எழுதியிருக்கிறார். இவரின் எழுத்தின் ஊடாக அவர் தன் வாழ்கையையும் தன்னை சுற்றி நிகழ்ந்தவைகளையும், தான் வாழ்ந்த கால சூழலை வார்த்தைகளில் உறைய வைத்துள்ளார். பெரும்பாலான சமயங்களில் அது வரலாற்று ஆவனமாகவும் மாறுகிறது. எந்த வண்ணப் பூச்சும் இல்லாத எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார்.
என் வாசிப்புக்கு எட்டிய வரை அ.மி யின் சிறுகதைகளை நான்கு வகைகளாக பிரித்து கொள்ளலாம்.
1. செகந்திராபாத் வாழ்வும் மனிதர்களும் 2. சென்னை நிலவியலும் மனிதர்களும் 3. ஜெமினி ஸ்டுடியோ மற்றும் சினிமாத் துறையில் வேலை பார்த்த அனுபவம். 4. பரிசோதனை முயற்சிகள்
செகந்திராபாத் நாட்கள் மீதான நாஸ்டால்ஜியா அவர் கதைகளில் நிரம்பி வழியும், ஐம்பது வருடங்களாக எழுதிய பின்பும் அந்த நிலத்தைப் பற்றியும், நண்பர்கள் பற்றியும் எழுதியிருக்கிறார். செகந்திராபாத் கதைகளில் தன் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் தானும் தன்னுடைய நண்பர்களும் அனுபவித்த வாழ்க்கையை பதிவு செய்திருப்பார். அந்த கதைகளில் லான்சர் பாராக்ஸ், பசுக்கள், சைக்கிள், கிரிக்கெட் மாட்ச், முஸ்லிம் நண்பர்கள், ஆங்கிலோ இந்திய நண்பர்கள், அவர்களின் குடும்பத்தார் போன்றவை பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது. நாம் எப்போது வாசித்தாலும் அந்த கதையில் வரும் மனிதர்கள் உயிர் பெறுவார்கள். அக்கால அரசியல் சூழல், நிஜாம்களின் அதிகார போக்கு, இந்தியாவுடன் இணைந்த பிறகு நிகழ்ந்த அதிகார மாற்றம். இதன் காரணமாக, முன்பு அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த முஸ்லிம்கள் அதிகாரத்தை இழந்து வருந்தும் தருணங்களை தன்னுடைய பல கதைகளில் பதிவு செய்திருப்பார். ‘அப்பாவின் சினேகிதர்’, ‘ஒரு நண்பன்’ போன்ற கதைகள், அதிகாரம் மனிதனின் நடத்தையில் ஏற்படுத்தும் மாற்றத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. அவர் பெரும்பாலும் தன்னுடைய உணர்வுகளை நேரிடையாக இல்லாமல் ஒரு observer ஆக பதிவு செய்வதை தனது பாணியாக கொண்டுள்ளார். செகந்திராபாத் கதைகளில் பசுகள் அதிகமாக இடம் பெறும், கயிரை அறுத்து கொண்டு ஓடும் பசுவையோ எருமையையோ தொடர்ந்து பல கதைகளில் தேடி அலைந்திருக்கிறார். பசுவை பார்த்துக் கொள்ள இருந்த ராம்லால் பல கதைகளில் வருகிறார். அவரின் மனைவியான ஜானகி பாயும் பல கதைகளில் வருகிறார். ‘உத்தர ராமாயணம்’ எனும் கதையில் வரும் ஜானகி பாய் காவிய கதாபாத்திரம். செகந்திராபாத் கதைகள் பெரும்பாலும் சுயசரித உணர்வை கொடுக்கிறது. செகந்திராபாதிலிருந்து சென்னை வந்த பிறகு எழுதிய கதைகளில் ஒரு மென்சோகம் இழையோடும். அந்த இடப்பெயர்வு அவரை பாதித்ததோ என்று எண்ணத் தோன்றும்.
தன்னுடைய தந்தை இறந்த பிறகு சென்னைக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்திருக்கிறார். இந்நிகழ்வை அற்புதமான கதைகளாக மாற்றியிருக்கிறார், குறிப்பாக ‘முனீரின் ஸ்பானர்கள்’ என்ற கதை பிரிவின் துயரை விளக்குபவை. சென்னை வந்ததும் அவரின் கதைக் களங்கள் முற்றிலும் மாறுகிறது. சென்னையின் குறுகிய சந்துகள், மூர் மார்கெட், தி.நகர் போன்ற இடங்களை களமாக கொண்டு கதையமைத்திருக்கிறார். அரசு அலுவலகம், தண்ணீர் பிரச்சினை சென்னையில் அலுவலகம் செல்லும் பெண்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள். அவர்களின் குடிம்ப சூழல் என பல்வேறு கதைகளை சென்னையின் நடுத்தர வர்கத்தின் வாழ்வை பதிவு செய்துள்ளார்.
ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிய அனுபவம் அவரின் பெரும்பாலான கதைகளில் இடம் பெறுகிறது. அருகிலிருந்து கவனித்ததாலா என்று தெரியவில்லை, பல அற்புதமான கதைகளை சினிமா பின்புலத்துடன் படைத்திருக்கிறார். இந்திய சினிமா நட்சத்திரங்களை ஒரு அபத்தத்தின் வெளிபாடாகவே பல இடங்களில் பதிவு செய்கிறார்.அவர் கதைகளில் வரும் இந்தி சினிமா மேற்கோள்கள் பரிட்சயமற்றதாக இருந்த போதிலும் சுவாரசியமாகவே இருக்கிறது. ஸ்டுடியோ நாட்களில் ஆகச் சிறந்த கதைகளை தந்துள்ளார். இந்த வகை கதைகளை படிப்பதற்கு முன் அதன் பின்கதைகளை அறிவது வாசிப்பனுபவத்தை மேன்மையாக்கும். உதாரணத்திற்கு, ‘பாண்டி பஜார் பீடா’ என்ற கதை, அதில் வரும் இரண்டு கதாபாத்திரங்களும் நடிகர்களாக இருந்து, படமெடுத்து தோற்றுப் போன கதாபாத்திரம். காபி குடிக்க கூட அடுத்தவன் கையை எதிர்பார்கும் நிலைமை. அந்த கதாபாத்திரத்தை ஒரு ரசிகன் சந்திக்கிறான். அவர்கள் இடையே நடக்கும் உரையாடல், 5 பக்கத்தில் அ.மி யின் வார்த்தைகள் உணர்தும் வலி தாங்க முடியாதது. அது நம்மை அழ வைக்கும் வார்த்தைகள் அல்ல, மென்சோகத்தை உணர வைக்கும் வார்த்தைகள். வெற்றியடைந்த மனிதர்களின் கொண்டாட்டம் ஒரு வகை தான் ஆனால் தோல்வியடைந்த மனிதர்களின் வலி ஒவ்வொன்றும் ஒரு கதை. அதை தான் அ.மி தன்னுடைய கதைகளில் பதிவு செய்திருக்கிறார்.
இவையல்லாத சில பரிசோதனை முயற்சிகள், அதாவது கதை களம் மற்றும் கதையின் வடிவத்தில் நிகழ்த்தியிருக்கிறார். ‘கடிகாரம்’ என்னும் கதையில் கடிகாரத்திற்கு சாவி கொடுப்பது தான் கதையில் நிகழும் சம்பவம் ஆனால் அதை சிறுகதையாக மாற்றத் தோன்றியது தான் பரிசோதனை முயற்சியாக தோன்றுகிறது. மேலும் காலமும் ஐந்து குழந்தைகளும், காந்தி, பிராயணம், ஐந்நூறு கோப்பைத் தட்டுகள் போன்ற கதைகள் சில உதாரணங்கள். காந்தி என்ற கதை, காந்தியடிகள் மீதான என் பார்வையை சற்று மாற்றியது, ஒரு கதையை படிப்பதின் மூலமாக அது மாறும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அவரின் சிறப்பு எந்த ஒரு நுண்ணுணர்வையும் கதையாக மாற்றக்கூடிய திறன் பெற்றவர்.
மொத்த கதையின் மீது நாம் கொண்டிருக்குற பார்வையை ஒரே வரியிலோ அல்லது சில வார்த்தைகளில் கூட மாற்றக் கூடியவர். மினிமலிஸத்தின் சிறந்த உதாரணம் அவரின் எழுத்து. பக்கம் பக்கமாக எழுதாமல் (அப்படி எழுதுவது பிழையல்ல) குறைந்த பக்கங்களில் தான் நினைத்ததை தெளிவாக குழப்பமில்லாமல் சொல்வது தான் அவரின் பலம். அவர் 60 ஆண்டுகளில் 279 சிறுகதைகள், 13 குறுநாவல்களும், 9 நாவல்களை எழுதியுள்ளார். அ��ரின் எழுத்தை படிக்க வேண்டியது நம் கடமை.
பி. கு: புகைப்படதில் உள்ள *குறியீடு கொண்ட கதைகள் தவற விடக்கூடாதவை.
எனக்கு பிடித்த கதைகள் என்ற தலைப்பில், மனதிற்கு நெருக்கமான கதைகளாக குறிப்பிட்டதை மீண்டும் ஒருமுறை படித்து தனியாக பிறகு எழுத வேண்டும். 🙏