மற்றவர்களின் தேவைக்காக ஆபத்தின் விளிம்பை தொட்டு வருபவனுக்கு ஓய்வு என்பதே கிடையாது,ஒதுங்கி வாழ விரும்பினாலும் அவனின் திறமை ஒதுங்கவிடுவதில்லை.
விரும்பத்தகாத நிகழ்வுகள் அனைத்தும் மறைந்திருக்கும் அல்லது மறைக்கப்பட்டிருக்கும் ஏதோ ஒன்றை வெளிக் கொணரவே நடந்தேறுகிறது..
தன்னைத் தானே அறிந்தவனுக்குப் பிரபஞ்சம் சமநிலையை அறிமுகப்படுத்தி விடுகிறது, மற்றவர்களை அடக்கி அவர்களை வெல்வேன் என்று புறப்படுபவன் தன்னாலே தன் முடிவை நோக்கி நகர்ந்துவிட்டது கடைசி நொடியிலே அவனால் அறிய முடிகிறது.
திபெத்தில் புத்தரின் மறுபிறப்பு ஜனனமாகப் போகிறது என்பதை முன்னோர் எழுதிய சுவடி மூலம் அறிந்து கொண்ட இருசாரர்களின் மனநிலை வெவ்வேறாக இருக்கிறது.ஒருசாரர் அப்பிறவியைக் கொல்ல முற்படுபவர்களிடமிருந்து காப்பாற்ற போராடுகின்றனர். அதற்கு அமானுஷ்யனாக இருக்கும் அக்ஷயின் உதவியை நாடுகின்றனர்.
தீவிரவாதிகளால் தேடப்படும் அக்ஷய் தன் குடும்பத்துடன் பலவருடங்களாக ஒரு மறைமுகச் சராசரி வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பவனைத் தேடி மீண்டும் சாகசம் புரிய வாய்ப்பு வருகிறது அதில் குடும்பத்தினருக்கு விருப்பமில்லை என்றாலும் பத்து வயதாக இருக்கும் அச்சிறுவனைக் காப்பாற்றப் புறப்படுபவனுக்குத் தெரியவில்லை எதிர் கொள்ளப் போவது இரண்டுவகையான எதிரிகளை...
தீயசக்தியான மாராவும் மறுபிறவி எடுத்து புத்த அவதாரமான மைத்ரேயனை அழிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது தன் சக்தியை பலமடங்காகப் பெருக்கிக் கொண்டு.மறுபுறம் சீனா தனது கட்டுப்பாட்டிலே திபெத் அடங்கி இருக்க வேண்டும் என்று அதன் உளவுத்துறை அதிகாரி லீ க்யாங் பலவாறாக மைத்ரேயனை அழிக்க முற்படுகிறான்.
பலரின் பிரார்த்தனை பலனாகப் பிறந்ததில் இருந்து பத்துவருடம் எவரின் பார்வையிலும் அதிகம் படாமல் காப்பாற்றப்பட்ட மைத்ரேயனின் கஷ்டகாலம் என்று குறிக்கப்பட்ட காலத்தில் அவனைக் காப்பாற்ற நாகசக்தியின் பலன் கொண்டவனான அக்ஷய் நியமிக்கப்படுகிறான். சுவாரசிய சாகசங்களுடன் திபெத்திலிருந்து தப்பியவர்கள் இந்தியா வந்து சேர்கின்றனர்.
தீயசக்தி வலிமைப் பெற்று மைத்ரேயனுடன் அக்ஷயின் மகனையும் சேர்த்து திபெத்துக்குக் கடத்தி விடுகின்றனர். மற்றும் ஒரு சாகசப்பயணத்திற்குத் தயாராகிய அக்ஷய் தனக்கென இட்ட பணியை நிறைவேற்றி விடுகிறான். மாராவை அவனின் சக்திக் கொண்டே அழித்த மைத்ரேயன் தன் பிறப்பின் நோக்கத்தை அடைய புறப்பட்டுப் போகிறான்.
திறமைகளை மதிக்கத் தெரிந்த அதீத நாட்டுப்பற்றுடைய லீ க்யாங், மைத்ரேயனை காப்பாற்ற துடிக்கும் ஆசான் தன் பிறவியை அவரின் மடியிலே
முடித்துக்கொண்டதும்,தந்தைமீது அளவற்ற அன்பை கொண்டிருக்கும் வருண் அதை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் துவள்பவன் மைத்ரேயனால் சமநிலைக்கு வருவதும்,பல கதாபாத்திரங்கள் அனைத்தும் அக்ஷயின் சாகசத்திற்கும் அவனின் குணத்தையும் விவரிப்பதற்கே பயன்பட்டிருக்கிறது.