1900 களில் ஹாலிவுட்டில் அனைவரையும் சிரிக்க வைக்கும் புன்னகை மன்னனாக இருந்த பிரபலம் தான் சார்லி சாப்ளின். அவர் தன்னை குறித்த சுய சரிதையை எழுதும் வரை அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அமெரிக்க ஊடகங்களுக்கு கூட அதிகம் தெரிந்திருக்கவில்லை. மக்களை எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய சாப்ளின் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகப்பட்சம் சோகங்களின் மீதே பயணம் செய்தார் என்பது வருத்தமான விஷயமாகும். ஆனால் சுய சரிதையில் எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் அதை எழுதுவது என்பது மிக முக்கியம். சுய சரிதைகளில் சிலர் தங்களை தாங்களே மிகைப்படுத்தி எழுதுபவர்களும் உண்டு. சிறு வயதிலேயே தனது தாய்க்கு மன நல பிரச்சனை ஏற்பட்டதால் கடுமையான வாழ்க்கையை எதிர்க்கொள்ளும் சாப்ளின் அவரை பற்றி கூறும்போது “ இளமை காலங்களில் தினமும் நான் மேடைகளில் நடிப்பேன். பிறகு அந்த பணத்தை மதுவுக்கும் பெண்களுக்குமாக செலவு செய்து விடுவேன்.” என்கிறார். பிறகு தனது தனிப்பெரும் கலை மூலம் புகழின் உச்சத்திற்கே செல்கிறார் சார்லி சாப்ளின். மிகவும் மோசமான ஒரு வாழ்வில் இருந்து கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களையும் அவர் தனது படத்தில் மிக முக்கியமாக பதிவு செய்துள்ளார். அவர் ஹிட்லருக்கு எதிரானவராகவும் கம்யூனிசத்திற்கு ஆதரவானவராகவும் உள்ளார். ஹிட்லர் அவரது காலத்தில் தொழிலாளர்களை 16 மணி நேரம் வேலை வாங்கி ஜெர்மனியின் பொருளாதாரத்தை உயர்த்தினாராம். அதை காட்டும் விதத்தில் சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தில் ஒரு காட்சி அமைந்திருக்கும். அதிகமாக வேலை பார்க்கும் தொழிலாளியாக சார்லின் சாப்ளின் இருக்க தொழிலாளர்கள் உணவு உண்ணும் நேரத்தை கூட குறைக்க வேண்டும் என ஒரு உணவு உண்ணும் மெஷினை உருவாக்குவர். பிறகு ஸ்பானர் முறுக்கும் வேலையை அதிகமாக செய்ததால் சாப்ளின் கைகள் ஸ்பானர் இல்லாமலே திரும்ப திரும்ப அதையே செய்து கொண்டிருக்கும். அதே போல அவர் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக ஜெயிலுக்கு செல்ல பார்ப்பார். ஏனெனில் ஜெயிலில் மூன்று வேலை நல்ல உணவு கிடைக்கும். இப்படியாக ஒரு வேளை உணவுக்கே கஷ்ட்டப்படும் கதாநாயகனாக அவர் இருக்க காரணம் என்னவென்று அவரது சுய சரிதையை படிக்கும்போது தெரிகிறது. நல்ல வாழ்க்கை முறையை அடைந்த பின்னும் சாப்ளினால் நல்ல படியாக வாழ முடியவில்லை. அவரை கம்யூனிஸ்ட் என அமெரிக்கா அவர் மீது பலி போடுகிறது. அவரை சிறை வைக்க பார்க்கிறது, அங்கிருந்து தப்பிக்கும் சாப்ளின் தனது மனைவியின் மூலம் சொத்துக்களை விற்று விட்டு அமெரிக்காவை விட்டே செல்கிறார். இப்படியாக ஒரு கலைஞனை விரட்டி அடித்த பெருமை அமெரிக்காவை சேர்கிறது. சார்லி சாப்ளின் வாழ்ந்த சம காலத்தில் பலரை சந்தித்துள்ளார். அவர் காந்தியை முதல் முறை சந்தித்த போது “ஏதோ பிச்சைக்காரன் என்று நினைத்ததாக தனது சுய சரிதையில் கூறுகிறார். அதே போல தனது சமக்கால நகைச்சுவை கலைஞனும் சாப்ளினையே மிஞ்சிய கலைஞனுமான பஸ்டர் கிட்டனையும் அவர் நேரில் சந்தித்துள்ளார். தன் வாழ்வில் தான் பார்த்து மிகவும் வியந்த நபர் பஸ்டர் கிட்டன் என அவர் கூறியுள்ளார். தனது சுயசரிதையில் எங்கும் அவர் தன்னை மிகைப்படுத்தி கூறவில்லை. கஷ்ட்டப்பட்டேன், கவலைப்பட்டேன் என்றெல்லாம் பேசாமல் வாழ்க்கையின் ஓட்டத்தில் தன்னுடைய பயணம் எப்படி சென்றது என மட்டுமே அவர் பேசியுள்ளார். அவரது வாழ்க்கை நிகழ்வுகளை கண்டு நாம் பரிதாபப்பட்டாலும் எங்குமே அவரை குறித்து அவர் பரிதாபபட்டதாக தெரியவில்லை. ஹாலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியா வரலாறான சாப்ளின் கலை உலகின் தனி நாயகன் என்றுதான் கூறவேண்டும்.