இந்தப் புத்தகம் பற்றியும் இதன் ஆசிரியர் சா.கந்தசாமி அவர்களைப் பற்றியும் நிரம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன். பிரபஞ்சன் அவர்களின் புத்தகத்தை நான் படித்தது போலவே, இவரின் மறைவுக்கு பின்னரே சாயாவனம் படிக்கும்படி ஆயிற்று. எழுத்தாளர்களுக்கு எங்கே உள்ளது மரணம்? இதோ சாயாவனம் வழியே அவரின் மொழியைக் கேட்டேனே!
40 வருடங்களுக்கு முன்னரே, இன்று பெரிதாகப் பேசப்படும் ஒரு கருப்பொருளை முன்வைக்கிறார் ஆசிரியர். ஆம் ஒரு வனம் அழிக்கப்படுகிறது. அழிக்க எத்தனிப்பது சிதம்பரம். அவனுக்கும் உதவுவது சிவனாண்டித் தேவராகிய அவனது மாமா. இவர்களையும் அந்த வனம் போன்ற தொப்பையும் மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. சாயாவனம் என்ற ஊரில் பல தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் தோப்பை, இலங்கையிலிருந்து வரும் சிதம்பரம் விலைக்கு வாங்குகிறான்.
அவனது கனவு - அந்த வனத்தினை அழித்து அதில் ஒரு கரும்பாலை நிர்மாணிப்பது. இப்படித் தொடங்குகிற கதையில், இயற்கைக்கு எதிரான மனிதனின் போர், உறவுகள், ஊரின் நட்புகள், ஏற்றத் தாழ்வு காட்டாமல் காட்டும் மனிதர்கள், தனி மனிதனின் போராட்டம், இரண்டு தலைமுறைக்கும் நிலவும் இறுக்கம், அது தளரும் பொழுதினில் வரும் பரஸ்பர மரியாதை, எத்தனை முறை தோற்பினும் தளராத வைராக்கியம், முக்கியமாக மனிதனுக்கும் இயற்கைக்குமான யுத்தத்தில் மனிதன் தோற்றாலும், வெற்றியின் விளிம்பினைத் தொட்டாலும் எப்போதும் இயற்கையே மானுடத்தை வென்று நிற்கிறது என்று ஏராளமான அடுக்குகள். மெல்ல சுவைக்கத் தோன்றும் கரும்பின் இனிப்பாய் இருக்கிறது ஒவ்வொரு எழுத்தின் அடுக்குகளும்.
இந்த புத்தகத்தின் வழியே முக்கியமான ஒரு சொல்லக் கற்றுக் கொண்டேன். அகச்சரிவு என்பதே அந்த சொல். எவ்வளவு முக்கியமான சொல். நம் வாழ்வின் ஒவ்வொரு செயலும், நிகழ்வும் நம்மைப் பற்றியே இருக்கும் பொழுதில், நாம் அனைவருமே ஒரு விதமான அகச்சரிவையே சந்தித்து கொண்டே இருக்கிறோம்.
இந்தக் கதையின் நரம்பாய்ப் பின்னிக் கிடப்பது அந்த தோப்பில் இருந்த மரங்களும், அதை நேசித்த மனிதர்களுமே. சில நேரங்களில் எதுவும் சிரமம் இல்லமால் கிடைப்பின், அதன் அருமை தெரிவதே இல்லை. அது போலத்தான் சாயாவனத்து வீடுகளின் தேவைகளை அந்த தோப்பு பல வருடங்களாய் சிவணாண்டியின் உலுக்கல்களில் நிரப்பி வந்திருந்தது.
ஓர் ஊர் எல்லாவிதமான அத்தியாவசியத் தேவைகளைக் குறைவின்றி தன்னகத்தே விளைவித்தால் பல வருடங்களுக்கு முன்னர், பணத்தின் புழக்கம் குறைந்து தானே இருக்கும். பொருளுக்கு பொருளை எடுத்தும் கொடுத்தும் மட்டுமே பழகியிருந்தனர் மக்கள். புளி வண்டிக்கணக்கில் வரும். அதற்கு நெல்லைக் கொடுத்து
கணக்கை நேர் செய்வார்கள்.
இப்படித்தான் அந்த ஊரின் தேவைகள் தீர்க்கப்பட்டு வந்தன. மேலும் அந்த மனிதர்கள் எதனை விடவும் வார்த்தைகளை முழு மனதாய் நம்பினார்கள். அதைத் தாண்டிய பத்திரங்களோ, பண மூட்டைகளோ அவர்களின் வாழ்கைக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை.
"அவர்கள் வார்த்தகளை நம்பினார்கள். அவர்கள் வாழ்க்கை வாய்ச்சொற்களின் மீது ஆதரப்பட்டிருந்தது."
இப்படி இருந்த ஊரின் நாடியாய், தலைமுறைகள் தாண்டிய தோப்பைதான் சிதம்பரம் அழித்து ஆலை அமைக்க எத்தனித்திருந்தான். தலைமுறைகள் தாண்டி புழக்கம் இல்லாமல் இருக்கும் தோப்பு என்பது இயற்கை முழு வீச்சில் நடத்திய நடனத்தின் சாட்சி. பல மரங்கள் வேர் பிடித்து காடாகி நின்ற தோப்பு. பராமரித்து வளர்க்கும் வீட்டு மரங்களில் இல்லாத வீரியத்தை, வளர்ச்சியின் பெருங்குணத்தை காட்டு மரங்களில் பார்த்திருப்போம். இப்படி வீரியத்தையும், பிரம்மாண்டத்தையும் காட்டுவது எப்போதும் இயற்கைக்கே சாத்தியம்.
அப்படி நிற்கும் தோப்பை அழிப்பதென்பது அவ்வளவு சுலபமில்லை. அதை எதிர்த்துதான் நின்றிருந்தான் சிதம்பரம். சிறிது தாமதமாக வேளைகளில் சேர்ந்தாலும் சிதம்பரத்திற்கு உறுதுணையாக நின்றார் தேவர். இவர்களுக்கு துணையாய் இரு சிறுவர்களும் இருந்தனர்.
"நாளுக்கு நாள், தோட்டம் கடுமையான சோதனைக் களமாக மாறி, அவனை வேதனையுற வைத்தது. சக்தியை உறிஞ்சி விட்டுத்தான் மறு காரியம் பார்க்கும் போலத் தோன்றியது".
இப்படியாக மெல்ல மெல்ல அந்த தோப்பு அழிவதும் அவன் மகிழ்வுறுவதும் அதிகமாய் மாறி மாறி நிகழ ஆரம்பித்து இருந்தது. இந்த கதையில் மற்றவர்களின் உணர்வுகளையும் அறிய இருந்த இடம் சிவணாண்டியின் பெயர்த்தியின் திருமணம். அந்த தோப்பு மெல்ல அழிந்து வரும் நேரத்தில், அதில் இருந்த பல்வேறு விலங்குகள் தன் வாழ்விடத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்ததும் இயற்கைதானே.
"சிதம்பரம் சற்றே ஒதுங்கி, அவைகளுக்கு வழி விட்டுப் பதுங்கி நின்றான். கடைசியில் சென்ற பெரிய குரங்கு, கூட்டத்திலிருந்து பிரிந்து, அவனை நோக்கிப் பல்லை இளித்து சீறியது. அவன், கொய்யாவின் பின்னே மறைந்து கொண்டான்.
எத்தனையோ காலமாக, மனிதர்களின் குறுக்கீடு இன்றி, விருப்பப்படி பிராணிகள் வாழ்ந்த பகுதி அது. இன்றைக்கு ஒரு தனி மனிதனின் தலையீட்டால் கலவரமுற்றுப் போய்விட்டது. மரம் செடிக்கொடிகள் மாதிரி வண்டுகளும், பறவைகளும் மிருகங்களும் அழிவை நோக்கிக் கொண்டிருந்தன. அவைகளின் அமைதியான வாழ்க்கை நிர்பந்தத்திற்கு உள்ளாகி விட்டது" .
இன்னுமொரு பகுதியில், இயற்கையை வெட்டி அழிப்பது போகவே, தீயிட்டுக் கொளுத்த நினைத்து அதற்கான திட்டங்களைப் பேசி செயல்படுத்த முனைவர். தலைமுறைகள் தாண்டி நிற்கின்ற தோப்பிற்கு தீயிடுவது என்பது, எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற தர்க்கங்களை இடையே பயணிக்கிறது கதை.
"கனன்றெரிந்த கிளைகள் நெருப்புத் துண்டுகளாய்த் தகதகத்துக் கொண்டிருந்தன. ஒரு ஜொலிப்பு! ஜுவாலையின் கம்பீரம்! நெருங்க முடியாத அனல் வீச்சு!"
.......
"சிதம்பரத்தின் கட்டிலில், குருட்டாம்போக்காய் - சிறகைப் படபடவென்று அடித்துக் கொண்டு ஒரு காக்கை விழுந்தது. அவன் திடுக்கிட்டுத் துள்ளிக் குதித்தான். காக்கையைப் பார்த்ததும் புன்சிரிப்பு வெளிப்பட்டது. காக்கையின் காலைப்பிடித்து தீயை நோக்கி வீசியெறிந்தான். ஒரு ஓசையின்றி, சடசடப்பின்றிக் காகம் தீயில் போய் விழுந்தது. இறகு பொசுங்கிக் கருகிச் சாம்பலாகும் காட்சியைக் காண வேண்டும் என்று மனதுக்குள் ஓர் ஆவல். அலக்கை எடுத்துக் கொண்டு முன்னே சென்றான், அனல் வீச்சையும் பொருட்படுத்தாமல்.
காக்கை தீயில் பொசுங்கிக் கொண்டிருந்தது. அலக்கால் குத்தி, எரியும் காக்கையை மேலே தூக்கினான். ஒரு நெடி, வாடை, குப்பென்று அடித்தது. முகத்தைச் சுளுத்திக் கொண்டு காக்கையோடு அழகையும் தீயில் செருகினான். அலக்கு வேகமாக உள்ளே சென்றது".
அகச்சரிவு என்ற சொல்லின் உட்சபட்ச சர���வெனவே இதை உணர்கிறேன். இப்படி அனைத்தையும் அழித்து கரும்பாலை ஒரு வழியாக உருவாகிடும் சாயாவனம் கொண்ட தோப்பினில். இந்த புத்தகத்தின் மொத்த ���ட்பொருளையும் விளக்கும் வகையில் முடியும் இந்த புத்தகத்தின் கடைசி சில வரிகள். ஆச்சியின் கேள்விக்கு விடையின்றி திணறி நிற்கும் சிதம்பரம்! அந்த கேள்விக்கான விடை யாரிடமும் இல்லாமல் போனது தான் இன்றைய சூழலியலின் சாபமாய் விஞ்சி நிற்கிறது.
நேரம் இருப்பின் படித்துப்பாருங்கள்...