தமிழில் சிறுகதை என்றாலே புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் முதலில் வந்து விடுவார்கள்.
தமிழில் பல ஆளுமைகள் பலவிதமான சிறுகதைகளை வாசகனுக்குத் தினமும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதை வாசகனும் பருகிக் கொண்டு தான் இருக்கிறான்.
குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு சிறுகதை வாசித்தாலும் ஆண்டுக்கு 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அதில் அடங்கும்.
அதில் அனைத்தையும் ஞாபகம் வைத்துக்கொள்வது என்பது சற்று சிரமமான காரியம். ஆனால் சில சிறுகதைகள் நம் வாழ்வியலோடு ஒன்றிப் போகும்போது அதை நாம் எக்காலத்திலும் மறக்க முடியாதபடி ஆழ்ந்து பதிந்து இருக்கும். அப்படி அதுபோன்ற சிறுகதைகள் அனைவராலும் எழுதப்பட முடியாது என்பது நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
பாடல்கள் கவிதைகள் நாவல்கள் இதில் மூன்றிலும் வைரமுத்து அவர்கள் புகழ் தமிழில் பிற எழுத்தாளன் கவிஞன் அடையாத புகழை அடைந்தவர். மிச்சம் வைத்திருந்தது இந்த சிறுகதை ஒன்றாக இருந்தது அதிலும் அவரின் தமிழைத் தூவி, சிறுகதையைக் கவிதையாக அல்லது கவிதையைச் சிறுகதையாக எழுதி இருக்கிறார். வெறும் சொற்றொடர்கள் எழுத்துக்களில் மட்டும் சிறுகதைகளை அளிக்காமல் அதில் தன் அனுபவம், கற்பனையையும் அள்ளி தெளித்திருக்கிறார் வைரமுத்து. இந்த புத்தகத்தில் மொத்தமாக 40 சிறுகதைகள் வருகிறது ஒவ்வொன்றும் ஒரு விதம்.
7.4 ரிக்டர் என்ற சிறுகதையில் ஒரு நிலநடுக்கத்தில் சிக்கிய காதலைக் கவித்துவமாக எழுதியிருக்கிறார்.
கணவன்-மனைவி-மகள் என்ற சிறுகதையில் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களுக்குக் காரணமாக அமையும் எதிர்மறை கருத்துக்களை எழுதியிருக்கிறார்.
இறந்த காலங்கள் இறந்தே போகட்டும்,
புத்தருக்கும் அடிசறுக்கும்,
ராஜராஜன் போன்ற சிறு கதைகள் என்றும் நினைவில் இருக்கும் கதைகளாக அமைகிறது. வரலாறு, ஆன்மிகம், பொருளாதாரம், கிராம வாழ்க்கை, நகர வாழ்க்கை, திருமண வாழ்க்கை, ஜாதிக் கொடுமைகள், நவீனக் காலத்தின் நிகழ்வுகள், என்று அனைத்து வகையான தலைப்புகளும் அடங்கியவாறு இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார் கவிப்பேரரசு.
குறிப்பிட்ட மண் சார்ந்த அல்லது நபர்களைச் சார்ந்தோ அல்லாமல் வெவ்வேறு விதமான சிறுகதைகளை வாசிக்க ஆர்வமுள்ள நண்பர்கள் நிச்சயமாக இந்த புத்தகத்தை வாசிக்கலாம்.
வெளியீடு : சூர்யா லிட்ரேச்சர்
384 பக்கங்கள்
விலை ₹350
தொடர்புக்கு : 044 2491 4747