"தென்னகத்தின் வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்த சோழப் பெருமன்னன் கரிகால சோழனின் காலத்தையும் அவன் சந்தித்த துன்பங்களையும், அந்தத் துன்பங்களை உற்றார் துணைகொண்டு அவன் துடைத்தெறிந்ததையும் விவரிக்கும் ஸ்ரீசாண்டில்யன் அவர்களின் யவனராணி சரித்திரப் புதின வாசகர்களால் மறக்க இயலாத ஓர் காவியம். இக்கரிகாலனின் காலத்தை, அதாவது தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல் அவனது இமயத்தில் புலிக்கொடி நாட்டிய வெற்றியையும் விவரிக்கும் புதினமே வானவல்லி. அதாவது யவனராணியின் நீட்டிக்கப்பட்ட வடிவமே வானவல்லி என்றே சொல்லலாம். ஆக யவனராணியின் மறுபிரதியா? என்ற ஐயம் எழவும் கூடும். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி அவ்விதம் ஓர் பிரமையையும் தோற்றுவிக்கலாம். ஆனால் இரண்டாம் பாகமான யவன நிலாவும், மூன்றாம் பாகமான கரிகாலனின் எழுச்சியும், நான்காம் பாகமான இமயத்தில் புலிக்கொடியும், அப்பிரமையைத் துடைத்தெறிந்துவிடுகின்றன. வரும் ஜுன் 1ம் தேதி முதல் நிகழவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படவிருக்கும் இப்புதினத்தை, இயற்றப்படும் காலத்திலேயே வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது நண்பரான இப்புதின ஆசிரியர் திரு.வெற்றிவேல் அவர்களின் ஆதரவால். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி, கதையின் நாயகன் செங்குவீரன் மற்றும் அவன் காதலி வானவல்லி முதலான கதை மாந்தரை நமக்கு அறிமுகம் செய்விக்கிறது. அறிமுகக் கட்டங்களாதலால் சற்றே வேகம் குறைவாயிருப்பதாகத் தோன்றினாலும், அடுத்தடுத்த அத்தியாயங்களில் சுவாரஸ்யமும் வேகமும் அதிகரிக்கவே செய்கின்றன. இரண்டாம் பாகமான யவன நிலாவே இப்புதினத்தின் நான்கு பாகங்களில் மிகச் சிறந்தது என்றே நான் சொல்வேன். விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த பாகம். கதை மாந்தரோடு நாமும் கிரேக்கம் வரை பயணிக்கிறோம் என்றே வாசகர்களும் உணரக்கூடும். போர்க்காட்சிகள் கண் முன் நிகழ்வது போன்ற பிரமையைத் தோற்றுவிக்கும் வண்ணம் சிறப்பாக இயற்றியிருக்கிறார் இப்பாகத்தை வெற்றிவேல் அவர்கள். மூன்றாம் பாகமான கரிகாலனின் எழுச்சி, கரிகாலன் தனது நாட்டை மீட்பதை சுவைபட விவரிக்கிறது. வானவல்லியே இப்பாகத்தின் பெரும்பகுதியை ஆக்ரமித்திருக்கிறாள். சிறப்பான போர் உத்திகள், விநோதமான ஆயுதங்கள் எனப் பரபரப்பாகக் கதையை நகர்த்துகிறார் வெற்றிவேல் அவர்கள். நான்காம் பாகமான இமயத்தில் புலிக்கொடி, “இமாலய சாதனை” என்று தற்காலத்தில் சிலரின் வெற்றிகளைப் பற்றி உயர்வு நவிற்சியாகச் சொல்லப்படும் உவமைக்கு ஆதாரமான கரிகாலனின் இமயப்போரை, அவன் காலத்தில் பெருவலிமை கொண்டிருந்த அவந்தி (தற்போதைய மத்யப் பிரதேச மாநிலப் பகுதியில் இருந்த ஓர் அரசு), கலிங்கம் (தற்போதைய ஒரிசா மற்றும் ஆந்திர மாநிலப் பகுதிகளில் இருந்த ஓர் அரசு) மகதம் (தற்போதைய பீகார் மற்றும் வங்காள மாநிலப் பகுதிகளில் இருந்த ஓர் அரசு) என மூன்று அரசுகளின் நிலையையும் விவரித்து, அவன் அவற்றை வென்றமையையும் திருப்பங்கள் பல நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக விவரிக்கிறார் புதின ஆசிரியர். தேவையான இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள வரைபடங்களும் போர் வியூகங்களை விவரிக்கும் விளக்கப்படங்களும் நம்மை கதையோடு ஒன்றச் செய்கின்றன. மொத்தத்தில் வானவல்லி வாசகர்கட்குப் பெரும் மன நிறைவைத் தரும் ஓர் புதினம் என்பதே என் கருத்து. சரித்திரப் புதின வாசகர்கள் இந்நூலுக்கும் தமது பெருத்த ஆதரவினை நல்குவீர் என நம்புகிறேன். ----------------------- அன்புடன் சக்திஸ்ரீ. "
கதாசிரியரின் வலைதளத்தில் தான் படித்தேன். One man army கதை. எதற்கெடுத்தாலும் செங்குவீரன், செங்குவீரன் என்பது கரிகாலனின் இடத்தை குறைப்பது போல் உள்ளது. அப்படிப்பட்ட செங்குவீரன் இரு முறை இறந்து விட்டான் என்று எல்லாரும் நினைக்கும் படியான சூழல் சலிப்படையை செய்கிறது.
அத்தியாயம் 4: அப்படி ஏதேனும் அணிந்திருந்தாள்? ல் 5: பிறை வடிய பள்ளம் 15: அடங்கயே 11: பரிமாரியதொடு 20: அது எப்படியடி அது துடிப்பதை நிறுத்தும் 35: கலையில் தான் உறைந்தை வீரர்கள்? காலையில் 40: அவன் அருகில்? அவள் அருகில் 47: சோழ குளம் என்னோடு? குலம் 49: கவுரவித்து? கௌரவித்து 50: ஓவ்வொருவிதமாக