அருகில் இருப்பதால் அருமை தெரியாது என்ற பொதுவான கருத்து அனைத்திற்கும் பொருந்தாது.அதை உணர வேண்டிய நேரத்திற்கான வாய்ப்புக் கிடைக்காமல் இருந்திருக்கலாம்..
மனதில் வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்தவும் தயங்கக் கூடாது. சிறுவயதில் இருந்தே கிருபா – உத்ரா தோழமையுணர்வு பெரியவர்களாகிய பின்பும் அவனுக்கானதை அவள் மட்டுமே உணர்ந்து செய்யக் கூடிய அளவில் வந்து நிற்கிறது. ஒரு நொடி கூடத் தன்னை விட்டு அகலாத கிருபாவின் மேல் காதல் கொள்பவள் தனக்காக அவன் தன்னைக் காதலிக்க வேண்டும் என்று நினைக்க அண்ணியின் குடும்பச் சூழல் விளையாட்டில் அவளின் தங்கையைப் பார்த்து மயங்கிய கிருபாவிற்குத் திருமண ஏற்பாடும் வேகமாக நடைபெறுகிறது.
தன் காத்திருப்பிற்கான முடிவை அறிந்தவள் தாயுடன் அண்ணன் வீட்டில் தஞ்சமடைகிறாள், உத்ராவின் பிரிவு, கிருபாவை நிலைக்கொள்ளாமல் செய்வதுடன் தனக்கானவள் என்று முடிவெடுத்த பெண் செய்யும் சேட்டைகளைப் பார்த்துத் தவறு நடந்ததை உணர்ந்து யாருடன் வாழ வேண்டும் என்பதைத் தெளிவாக முடிவெடுத்து உத்ராவை காணச் செல்கிறான்.