காந்திக்குப் பிறகு அஹிம்சைக் கொடி ஏந்திப் போராடி வென்ற ஒரு கறுப்பின அமெரிக்கரின் துடிப்பான வாழ்க்கைக் கதை இது! "மார்ட்டின் லூதர் கிங் "
இனவெறி உச்சத்தில் இருந்த சமயம் அது. வெள்ளையர்களுக்குத் தனி பள்ளிக்கூடம் கறுப்பர்களுக்குத் தனி. வெள்ளையர்கள் உபயோகிக்கும் சாலைகளில் கறுப்பர்களுக்கு அனுமதியில்லை. குழந்தைகள் விளையாடும் இடங்கள் கூட தனித்தனி.
மார்ட்டின் ஒரு கனவு கண்டார், அவர் முன் இருக்கும் அனைத்து பள்ளங்களும் மேடாக்கப்படுவது போல். வெள்ளையர்களுக்குச் சமமாக கறுப்பர்கள் நடத்தப்படுவது போல். அந்த பள்ளத்தை மேடாக்குவதற்காக அவர் கொடுத்த விலை தனது உயிர்.
கறுப்பின அடக்குமுறையை முன்பு கேள்வி பட்டிருத்தாலும் இப்பொழுது தான் முழுமையாக அதை பற்றி படிக்கிறேன். இந்த புத்தகம் படிக்கையில் எப்படி பட்ட சமூகம் முன்பு இருந்து இருக்கிறது, நாம் எப்படி பட்ட சமூகத்தில் இப்பொழுது இருக்கிறோம் அதற்காக எத்தனை பேர் எவ்வளவு தியாகம் செய்து இருக்கிறார்கள், அவர்களுக்காக நாம் இந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது புரிந்தது.
மார்ட்டின் லூதர் கிங் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆற்றிய உரையிலிருந்து சில வரிகள்:
‘விட்டுச் செல்வதற்கு என்னிடம் பணம் எதுவும் இல்லை. அருமையான மற்றும் ஆடம்பரமானது எதுவும் என்னிடம் இல்லை. ஆனால், ஒரு கொள்கைப் பிடிப்புள்ள வாழ்வை விட்டுச் செல்ல நான் விரும்புகிறேன்.’
ஒரு புரட்சியாளனின் தனித்துவமிக்க வரலாற்று பயணத்தை ஒரு இரயில் பயணித்தில் தான் தொடங்கினேன். மார்டின் லூதர் கிங் ஜூனியர். ஏறத்தாழ புரட்சியாளர் மால்கம் எக்ஸின் காலத்தை ஒட்டிய சமயத்தில்தான் இவரும் வேறொரு தளத்தில் நின்று கருப்பின மக்களுக்காக ஓயாது தனது போராட்டத்தினை நடத்தியுள்ளார்.
மார்டின் லூதர் கிங் ஜுனியர் பெயரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் நான் அவரை கண்டடைந்தது ஊடகவியலாளர் Ramki Jenraam K மூலம்தான். ஜென்ராம் முன்பு பணியாற்றிய ஊடகத்தில் காலை நடத்தும் நிகழ்ச்சியில் மார்டின் லூதர் கிங் ஜூனியரின் கோட்பாடுகளை, கருத்துக்களை சாத்தியப்படும் போதெல்லாம் பதிவு செய்வார்.
"கெட்டவர்களது அராஜகமல்ல அல்ல எனை தொந்தரவுக்குள்ளாக்குவது, நல்லவர்களின் மௌனமே. "
போன்ற கருத்துக்கள் தான் ஜுனியரின் மீதான தேடலை அதிகப்படுத்தியது.
யார் இந்த ஜுனியர்..? மார்டின் லூதர் கிங் ஜுனியரை பற்றி அவரது பிறப்பு முதல் இறப்பு மிக சுவாரசியமாக புத்தகத்தின் போக்கினை நகர்த்தியிருக்கிறார் இதன் ஆசிரியரான பாலு சத்யா .
கருப்பின மக்களுக்கெதிரான அடக்குமுறைகள் அவரது சிறு வயதிலிருந்தே அனுபவித்ததன் பின்னனியில் இருந்து தான் அவரது வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும். உணவகங்கள், பேருந்துகள், பள்ளி, நூலகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் என எல்லாவற்றிலும் பாகுபாடும் பிரிவினையும் மிக்க ஒரு கொடூர அமெரிக்காவின் வரலாறுகள் கண் முன் தோன்றி மறைகின்றன.
பிரிவினையை, பாகுபாட்டினை எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் மார்ட்டினின் வாழ்க்கையிலிருந்தே பேசத் தொடங்கலாம். வெள்ளையர்களுக்கும் கருப்பர்களுக்குமான வேறு வேறு இருக்கைகளை கொண்ட பேருந்தில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே இருப்பீர்கள் , வெள்ளையர்களின் பகுதியில் உள்ள இருக்கைகள் காலியாகத்தான் இருக்கும் ஆனால் அவரால் அமர முடியாது. அவரது உடல் ஓரிடத்தில் ஆனால் அவரது மனதோ காலியான அந்த இருக்கைகளிடம். அவர் ஆசை வைத்தது ஒன்றுதான் உடலும், மனதும் ஓரிடத்தில் ஒன்றிணைந்து இருக்கிற பிரிவினையற்ற வாழ்க்கை. அதை சாத்தியப்படுத்தியும் காட்டினார் மார்ட்டின். அவர் முன்னெடுத்த பேருந்து புரட்சி என்பது அமெரிக்க கருப்பின போராட்ட வரலாற்றில் முக்கியமான ஒன்று.
புரட்சியாளர்களின் காதல் கதைகளை படிப்பதில் அலாதியான பிரியம் கொண்டவன் நான். ஃபலஸ்தீன புரட்சியாளன் அய்யாஷில் தொடங்கி , அர்ஜென்டினாவின் சேகுவேரா, ஃபிடல், மால்கம் எக்ஸ் போன்றே மார்டினின் காதலும் சுவாரசியமானது. அவர் தனது காதலை வெளிப்படுத்தும் விதம், பயன்படுத்தும் சொற்கள், பேசுபொருள் என எல்லாமே சாதாரண காதல்களில் இருந்தே வேறுபட்டிருக்கும். குடும்பவியலுக்கும், சமூகவியலுக்கும் உறு-துணையாக இருந்திருக்கிறார் கிரேட்டா.
அமெரிக்க கருப்பின மக்களின் அடிமைத்தனத்தின் ரணங்களை மற்ற எல்லா சமூகங்களை விடவும் இந்திய சாதிய சமூகத்தால் மிக எளிதாக உள்வாங்கி கொள்ள முடியும். அங்கே நிறத்தை கொண்டு பிரிவினை எனில் இங்கே சாதியைக் கொண்டு பிரிவினை. அங்கே இருப்பிடங்கள் வெவ்வேறெனில் இங்கே ஊர் வேறு சேரி வேறு. மார்டினோ, மால்கமோ, அம்பேத்கரோ, பிலாலோ வெறுமனே சாதரண மனிதர்கள் அல்ல மாறாக அனைத்து வகையான அடக்குமுறைக்கு எதிரான உறுதியான குறியீடு.
மார்ட்டினுக்கு இந்தியாவின் மீதும் , காந்தியின் மீதும் , அகிம்சையின் மீதும ஓர் தீராப் பிரியம் இருந்தது. அந்த பிரியம் அவரை இந்தியா நோக்கி அழைத்து வந்தது. நாம் தாம் நமக்காக போராடியவரை கொல்வதற்கு கூட ஆட்களை வைத்திருக்கிறோம். காந்தி சாகடிக்கப்பட்ட பின்னர் தான் அவரால் இந்தியா வந்து அவரது நினைவகத்தை பார்க்க முடிந்தது. அரசியலில் அதிகாரம் செலுத்தாமலையே ஒரு சாதாரண பாதிரியாராக இருந்து மிகப் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தவர் மார்ட்டின்.
இப்புத்தகத்தில் மார்ட்டின் லூதர் கிங்கும் அவரது சமகால போராளியான மால்கம் எக்ஸ் குறித்தும், அவர்கள் உரையாடிக் கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. ஆனால் மால்கம் எக்ஸ் ஐப் பற்றி குறிப்பிடும்போது மட்டும் அவரை தீவிரவாதி என்பது போன்று சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். இந்த ஒப்பீடு என்பது தவறானது. நீதிக்காக ஆயுதம் தாங்கியதற்காகவும், தற்காத்துக்கொள்ள பதில் தாக்குதல் நடந்தியதும் எப்படி தீவிரவாதம் ஆகும். மார்ட்டின் முன்னெடுத்தது சகிப்பு போராட்டமெனில் மால்கம் முன்னெடுத்தது எதிர்வினை போராட்டம் அவ்வளவுதான். இந்தியாவில் பகத் சிங் கின் போராட்டமும் , காந்தியின் போராட்டமும் வெவ்வேறு வடிவம் கொண்டது. அதேபோலத்தான் மால்கம் உடையதும், மார்ட்டினுடையதும்.
புதிய வாசகர்களுக்கு அமெரிக்காவின் ஆதிக்கம் குறித்தான, கருப்பின போராட்டங்கள் குறித்தான வரலாற்றை எளிய முறையில் பேசும் நூல் இது.
புத்தகம் : கருப்பு-வெள்ளை ஆசிரியர் : பாலு சத்யா பக்கங்கள்: 134 விலை : ₹150 பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்