"எனக்குள் பேசுகிறேன்" - பாலகுமாரன்
ஜூனியர் விகடனில் 1999ல் வெளிவந்த, 26 கட்டுரைகளின் தொடர் கட்டுரைகளின் தொகுப்பு.
திரு பாலகுமாரன், தமது அனுபவத்திலிருந்து, அறிவுரைகளாகவும், தத்துவார்த்த சித்தாந்தங்களாகவும், தன்னம்பிக்கைகளை விதைக்கும் விதமாகவும் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதாக, எழுத்தாளர் சிவசங்கரியின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலத்தில் பாலகுமாரன் அவர்களுக்கு வந்த கடிதங்களிலும் அது பரதிபலித்ததாக கூறப்படுகிறது. அதற்கான உதாரணமாக, வாசகரின் கடிதமும் அச்சிடப்பட்டுள்ளது.
23வருடங்களுக்கு முன் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் என்றாலும், இன்றும் மனித மேன்மைக்கு வழிகோலும் வகையில் இவரின் எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளது.
பொறாமை, வஞ்சம், வெட்டிபேச்சு போன்ற தீக்குணங்கள் வெற்றிக்கு தடைக்கற்களாய் நிற்பதையும், உணவு, ஒழுக்கம், அமைதி, தியானம் என பல விடயங்களை எப்படி கையாண்டு வெற்றிக்கு வித்திடுவது பற்றியும், தமது வாழ்வில் ஏற்பட்ட, சந்தித்த நபர்களின் அனுபவத்தையும் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார்.
சமகாலத்தில், நம்மில் சிலர், இப்புத்தகத்தில் சொல்லப்பட்ட வெற்றிக்கான குணங்களுக்கு பரிணமித்திருந்தாலும், பின்தங்கியுள்ளவர்களுக்கான கட்டாயவாசிப்புக்கு ஏற்ற நூல்.
புத்தகத்திலிருந்து...
\
மனித வாழ்க்கையில் மனங்களை உற்று பார்த்து யோசிக்கப் போகிறேன். 'என்ன இது, ஏன் இப்படி...?' என்று சிந்திக்கப் போகிறேன். யோசிப்பினுடைய இன்னொரு வடிவம் தனக்குள் பேசுதல். நீங்கள் வளர வளர, தனக்குள் பேசுவது அதிகரித்துவிடும். பொறுப்புகள் அதிகமாக, தனக்குள் பேசுவது விரைவாகும்.
/
\
வன்முறை அமைதி கொடுத்ததாக வரலாறே இல்லை. வன்முறையால் ஏற்படும் அமைதி மிகக் குரூரமானது. அது அடிபட்ட நாகம். புதர் பதுங்கிய புலி, தோப்புக்கு நடுவே அசையாது நிற்கும் ஒற்றை கொம்பன் யானை, கிணற்றுக்குள் உறங்கிக் கிடக்கும் விஷவாயு, விரிசல் விட்டு, விழக் காத்திருக்கும் கோபுரக் கலசம், சாம்பல் கக்கும் எரிமலை, வெளியே தெரியாமல் தனக்குள் முணுமுணுக்கும் பூகம்பம்.
/
\
ஒரு வினையின் காலகட்டம் மூன்று முறை விரல் சொடுக்கும் நேரம்தான். விளைவு-பல வருடங்கள்... பல மனிதர்கள்... பாதிக்கப்பட்டுப் பரிதவித்தல் தொடரும். 'இது நடக்காமல் இருந்திருக்கக்கூடாதா...?' என்ற ஏக்கம் பரவும்.
/
\
எங்கு வன்முறை செல்லுபடியாகுமோ, எங்கு எதிர்ப்பு வராதோ, எவர் பதிலுக்கு அடிக்க மாட்டாரோ, எவரால் அடிக்க முடியவில்லையோ அவரிடம் வன்முறை காட்டவே மனிதர்கள் விரும்புவார்கள்.
/
\
உண்மையில் எல்லா அதிகாரமும் அபத்தம். அதிகாரத்தில் தலைவிரித்தாடியவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்திருக்கிறார்கள்.
எல்லா அதிகார ஆணவமும் சரிவில் தான் முடியும். சரிகிற நேரம், அதுவரை செய்தவர்க்குக் கலவரம் ஏற்பட்டு விடும். எப்படியெல்லாம் அதிகாரம் செய்திருக்கிறோம் எத்தனை பேரை புண்படுத்தி இருக்கிறோம் என்று புத்தி பட்டியல் போடும். மனம் நடுங்கும், பதிலுக்கு அவர்கள் சீறினாள் என்னாகும் என்று பதறும். எவர் கையிலோ அடிபட்டு சாவதைவிட அவமானப்படுவதை விட, தற்கொலை மேல் என்று முடிவாகும்.
/
\
எதிராளி பற்றி எடை போடுகிறபோது ஒரு மௌனம் ஆரம்பமாகிவிடும், பதிலுக்கு கூவுதல் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வெறுமனே மௌனம் காப்பது திடமனம் உள்ளவராலேயே முடியும்.
/
\
பேசாமல் இருப்பது என்பது ஒரு தவம். புராணக்கதைகளில் முனிவர்கள் காட்டுக்கு போனார்கள். தவம் செய்தார்கள் என்று சொல்லப்படுகிறதே... அது என்ன என்று உற்றுப் பார்த்தால் உங்களுக்குப் புரிந்துவிடும்.
ஒருவர் நகரத்திலேயே இருந்தால், நாட்டிலேயே இருந்தால் நாலு பேரோடு பேசத்தான் வேண்டியிருக்கும். அதனாலேயே காட்டுக்குப் போய் விடுகிறார்கள். காடு என்பது பேச்சற்ற, பேச்சு துணையற்ற ஓர் இடம். பேச ஆட்களே இல்லாத இடம்.
தவம் செய்தால் தான் வரம் வாங்க முடியும். அதாவது தனிமையில் இருந்தால் தான், தனித்து பேசாமல் இருந்தால் தான் வெற்றி பெறுகின்ற உறுதி உள்ளுக்குள் பிறக்கும்.
மனம் யோசிப்பது நின்று போனால், உள்ளத்தில் வேறொரு சக்தி நுழைந்து கொள்கிறது. இதுதான் உண்மை. இதற்குமேல் இதை சொல்ல முடியவில்லை. வேண்டுமானால் இப்படிச் சொல்ல முயற்சிக்கிறேன்.
மனம் ஒரு பக்கமாக சிந்திப்பதை நிறுத்தி விட்டு அமைதியாக விட, ஒரு நடுநிலைமை தன்மை, ஒரு தெளிவான பார்வை, ஒரு கூர்மையான புத்தி உங்களுக்குள் வந்துவிடுகிறது. இந்த நடுநிலைமை பார்வை வருவது எளிதல்ல.
எது பற்றியும் நமக்கு விருப்பு, வெறுப்பு இருக்கிறது. அந்த விருப்பு வெறுப்போடு யோசித்து, விஷயங்களை தவறாக புரிந்து கொள்கிறோம். விஷயங்களை தவறாக புரிந்து கொள்வதாலேயே தவறான முடிவுகள் எடுக்கிறோம். முடிவில் முட்டிக்கொண்ட பிறகு, 'தெரியாத பண்ணிட்டேன்' என்று வருந்துகிறோம்.
இந்த விருப்பு வெறுப்பு இல்லையெனில் பார்வை அமைதியாகவும் இந்த விஷயம் எப்படிப்பட்டது என்று விஞ்ஞானப்பூர்வமாக சிந்திப்பதாகவும் அமையும் கோணலாகவும், குதியாலாகவும், நல்லதாகவும் கெட்டதாகவும் யோசிப்பதையெல்லாம் ஒரே வீச்சில் துடைத்தெடுத்துவிட்டு, 'இது ஒரு செய்தி. இந்த செய்திக்கு என்ன அர்த்தம்' என்று மனம் பதறாமல் வெகு நிதானமாக அதை யோசிக்க ஆரம்பித்து விடுகிறது.
/
\
இளைஞனாக இருக்கும்போது அதிகமாக தூங்குவது ஒருவித மயக்கமான கற்பனையை மனதில் ஏற்படுத்திவிடுகிறது.. ஆனால், இன்னும் சற்று தூங்கி கொண்டிருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. எழுந்து என்ன ஆகப்போகிறது என்று ஒரு அலுப்பு வருகிறது. தூக்கமும் இல்லாத, விழிப்பும் இல்லாத ஒரு நிலைதான் மிகப் பயங்கரமான விஷயம். அந்த நேரத்தில், மனம் தன் இச்சைப்படி ஏதேதோ யோசிக்க ஆரம்பிக்கிறது. தன்னால் இயலாதவற்றையெல்லாம் இயலும் என்று ஒரு கதை செய்யத் தொடங்குகிறது.
/
\
உங்களை நீங்கள் அதிகம் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறபோது, அல்லது உங்களை எல்லோரையும் விட மிகத் தாழ்மையானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறபோதுதான் ஒப்பிடுதல் குணம் வருகிறது
இந்த ஒப்பிடுதல் ஒரு பொறாமையை வளர்கிறது. இந்த பொறாமை வெகு எளிதில் முகத்தின் லட்சணத்தை மோசமாக்குகிறது. ஒரு கீழ்வெட்டுப் பார்வையையும் ஒரு கோணல் புத்தியையும் எளிதே கொடுத்துவிடுகிறது. விருப்பு, வெறுப்போடு ஒப்பிட்டு பார்க்கும் போது மற்றவர்களைப் பற்றி தவறாக எடை போடுவது மட்டுமல்லாமல் உங்களுடைய சுயமதிப்பீடும் உங்களுக்குள் சரியாக வந்து தங்காமல் போகிறது. உங்களை நீங்கள் அறிவதற்கு மிகப்பெரிய இடைஞ்சலை இது ஏற்படுத்துகிறது.
/
\
பணம் சம்பாதிப்பு, தொழில், வீடு அமைதல், மனைவி, குழந்தைகள் இவையெல்லாம் பூர்வஜென்மத்து மிச்சங்கள். அதன் விளைவால் நமக்குக் லயிப்பவை. மிகச் சாதாரண நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலைக்கு வருவதற்கு, வெறும் உழைப்பு மட்டுமே காரணமாகி விடாது. கடுமையாக உழைப்பவர்கள் பலபேர் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்ட முடியாமல் தவிப்பதை, உங்களில் பலர் நன்கு பார்த்திருக்கக்கூடும். அதிர்ஷ்டம் நம்மை அள்ளிக்கொண்டு போய் உச்சாணிக் கிளையில் வைக்கும். இதில் புறப்படுவதற்கு ஏதுமில்லை. ஒப்பிட்டுப் ப���ர்ப்பதில் லாபமில்லை.
/
\
வார்த்தைகளை கண்டபடி இறைத்து பேசுகிறவர்களுக்கு, எதிர்த்தாக்குதல் வந்தால் ஒரேயடியாகப் பதுங்குவார்கள். அந்த எதிர் விளைவுக்குப் பயந்து அவர்கள் 'மன்னிச்சுக்குங்க ஐயா, தெரியாம பண்ணிட்டேன்' என்று வெட்கமின்றிச் சொல்வார்கள். வார்த்தைகளைக் கண்டபடி இறைத்தது தவறு என்று உடனே உணர்ந்துவிட்டது போலச் செயல்படுவார்கள்.
/