வேலராமமூர்த்தி தன் உதிரத்தை மையாக்கி எழுதுபவர். அவர் காகிதத்தின் பக்கங்களெல்லாம் மனித ஆத்மாக்களே நிரம்பியுள்ளனர். தன் மண்ணை விட்டு ஒரு அடி கூட தள்ளிச் சென்று சிந்திக்காதவர். அள்ள அள்ளக் குறையாத அற்புதங்களை அந்த மண் தனக்குள் சூல் கொண்டிருப்பதை அவர் மட்டுமே அறிவார்.
வேல ராமமூர்த்தி (Vela Ramamoorthy) ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருநாழியில் பிறந்தவர். தற்போ இவர் பாயும் புலி (2015 திரைப்படம்) மற்றும் சேதுபதி (2016 திரைப்படம்) ஆகியவற்றில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர், நாடகம், தொழிற்சங்கம், அறிவியல் இயக்கம், சினிமா என்று பல்துறை வாழ்வியல் அனுபவங்கள் கொண்டவர்.
நீளும் ரெக்கை, வேட்டை போன்றவை இவரது சிறுகதை நுால்களாகும். பட்டத்து யானை, குற்றப்பரம்பரை (முன்னதாக கூட்டாஞ்சோறு என அழைக்கப்பட்டது) மற்றும் குருதி ஆட்டம் ஆகியவை இவரது நாவல்களாகும். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வேல ராமமூர்த்தி கதைகள் என வெளியிடப்பட்டுள்ளது.
பன்முகத்தன்மையுடன் இயங்கி வரும் வேலா அவர்களின் புத்தகங்களும், அவரின் மண்ணின் மனம் கொண்ட எழுத்துக்களும், சமூக இடைநிலைகள் மீதான பெருங்கோபமும் எனக்கு முன்பே பரிச்சயம். ஆதலால் இம்முறை அவரின் சிறுகதை தொகுப்பினை வாசிக்கத் தேர்ந்தெடுத்தேன். ஏற்கனவே வாசித்திருந்த ஒன்றிரண்டு கதைகள் கண்டவுடன் சிறு பூரிப்பு தொற்றிக் கொண்டதை தவிர்க்க இயலவில்லை தான்!
அவரது எழுத்துக்களில் எப்போதும் உள்ளிருக்கும் சமூக சாதலும், எளிய மக்களின் போராட்டத்தின் உச்சங்களும், சிறு துளி கோபம் எப்படி தலைமுறைகளை முடக்கி போடுகின்றன என்பன போன்ற நேரிய சுட்டல்களும், வெகுளித்தனமான மக்களின் அன்பும், குறும்பு கொப்பளிக்கும் பெண்களின் ஆட்டமும், பெருநாழி என்ற ஊரின் பேரன்பும், பெருங்கோபமும் இந்த தொகுப்பில் இருக்கின்ற 38 சிறுகதைகளிலும் தொடர்ந்து பயணிக்கிறது. ஒவ்வொரு முறை வாசிக்கப்படும் போதும் அவை எழுந்து நம் அருகில் அமர்ந்து பின் புத்தகப் பக்கங்களுக்குள் மீண்டும் பயணிக்க செல்கின்றன.
சில கதைகளுக்காவது அதன் முடிவைக் கணிக்க முயன்று தோற்றுப் போன வாசகனாகவே வளம் வந்தேன். கோட்டைக்கிணறு என்ற கதையில் வரும் லட்சுமியின் இன்னும் கூட நினைவலைகளில் ஒலித்துக் கொண்டிருப்பதுதான் வேலா அவர்களின் தனித்துவமாகப் படுகிறது. எப்போதுமே, வாசித்த புத்தகங்களை பற்றி பகிரும் போது, நன்றாக வாசித்த பின் இடைவெளி விட்டு எழுதத்தான் எனக்கு பிடிக்கும். அப்போது தான் நொதித்து உண்ண தோதானப் பழைய சோற்றின் ருசி போல, அந்த வாசிப்பின் நினைவுகளை மெல்ல மெல்ல மேலெடுத்து வந்து பகிர்த்திடுதல் நன்றாக இருக்கும்!
"அப்பத்தாவுக்கு என் மேலே உசுரு. எங்க தாத்தா தங்கசாமி தேவரும் நானும் ஒரே ஜாடையாம். தன் புருசனே என் மூலமாக மறுபிறப்பு எடுத்ததாக அப்பத்தா அடிக்கடி சொல்லும்.
ஜானகி அக்காவும் அப்பத்தாவும் ஒரே ஜாடை. அக்காவை 'சின்ன அங்கம்மா' என்பார்கள்.
அம்மாவின் பிடரியில் மலைத்தேன் தட்டு மாதிரி அள்ளி முடிந்த கொண்டை சரிந்து கிடக்கும். காதுக்குக்கீழ் இறங்கிச் சுருண்ட முடி. மேல் உதட்டில் அரும்பி முளைத்த பூனை ரோமம். முரட்டுப் புருவங்களுக்கு கீழே தெறிக்கும் முழிகள். உள் வீடு அதிரும் நடை.
வீடு நிறைய அம்மா இருந்தது."
இப்படிப் பல கதைகளில் வந்து போகின்ற அனைவருமே, ஆப்பநாட்டு பெருநாழியில் வாழ்ந்தவர்களாகவே தோன்றுவது, இயல்பாகவே அவரது நினைவுகளை எழுதியிருப்பது தெரிகிறது. சேது, ஜானகி, நிறைகுலவள்ளியம்மன், பெருநாழி, ஊரணி, கோட்டைக்கிணறு போன்ற பெயர்கள் அவரின் கதைகள் முழுதும் நடமாடுவதை பார்க்கையில், படிக்கையில் இவ்வாறாகவே தோன்றுகிறது.
எழுத்தில் காலை படைக்கும் நிலையில் இருக்கும் அனைவருமே, இந்த சமூகத்தை வெகு நெருக்கமாக உற்று ஆழ நோக்குபவர்களாகவே இருக்கிறார்கள். அந்த வரிசையில் வேலா அவர்களும் யாருக்கும் எந்த வகையிலும் சளைத்தவர் அல்ல என்பதற்கான காலத்தின் அடையாளமே இந்த சிறுகதைகள். இதில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையிலும் நமக்கு காட்டப்படும் ஒவ்வொன்றும் இந்த சமூகத்தின் ஒவ்வொரு மூலைகளிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் அன்பின் எச்சத்தையோ, ஏற்றத் தாழ்வுகளின் உரத்த சாடல்களையோ, களவின் காட்டங்களையோ, நட்பின் ஆழங்களையோ, ஊரின் சாதிச் சித்தலங்களையோ இப்படி எதாவது ஒன்றை சொல்லி விட்டுதான் கடந்து செல்கிறது.
நெஞ்சுப் பின்னல் என்ற கதையில், அந்த ஊரின் சலவைத் தொழிலாளியின் மகள் தன் தாய் இல்லாமல் படும் அந்த நெஞ்சு பதறும் கணங்களைப் பதிவு செய்யும் விதமும், அவளுக்கு அன்னையென வரும் தமையந்தியும், இச்சமூகத்தில் ஆயிரம் கீறல்கள் விழுந்து கிடப்பினும், அதை நகர்த்தி மூடும் இன்னொரு சேலையென, அன்பின் மொத்த உருவமாய் வலம் வந்திருப்பார்கள்.
"நான் கட்டி இருக்கிற இந்தச் சேலை, அவுங்க சேலை..." தமயந்தியின் நெஞ்சுக்குள் முகம் அழுத்தி அழுதாள்.
தமயந்தி உறைந்து போனாள். பேச நா எழவில்லை.
ஊர் வெள்ளை வெளுக்கிற வண்ணாத்தி, எப்பவாவது ஊரார் துணிமணிகளை உடுத்துவது உண்டுதான்.
லக்ஷ்மியின் முதுகை தடவிக் கொடுத்தாள்.
"பாதகத்தி! தாய் இல்லாப் பிள்ளைன்னு கூட பாராமல், இப்படி அடிச்சிருக்காளே!" லக்ஷ்மியின் தலையைக் கோதிவிட்டாள்".
தன் கையில் பணமே இருந்தாலும் தன மகளுக்கு சேலை வாங்கிக் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மாடசாமியின் வாழ்க்கையை இந்தக் கதையைப் படிக்கையில் நெஞ்சமெல்லாம் பதைத்து அடங்குகிறது. கற்பனையைத் தாண்டித் தெறிக்கும் உண்மையின் கோர முகங்கள். உண்மையில் இப்படிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அறியாமலே, பார்க்காமலே அதையெல்லாம் பொருட்டென மதிக்காமல் தள்ளிச் செல்லும் சாதியின் வெறி பிடித்த கோர முகங்கள் அவை. பெருமைகளின் ஆதி நாதம், மற்றொருவரின் சிறுமையில் தான் தொடங்குமென்றால் அது பெருமை என்பதற்கான தடங்கள் அதிலிருந்து அப்போதே அழிந்து போயிருக்காதா என்ன?
இப்படி எளிய மக்களின் பக்கம் நின்று பெருங்கோபத்தில் கேள்வி கேட்கும் கதைகள் தான் இந்த தொகுப்பு முழுவதும். ஹிட்லர் என்ற கதையில் வரும் இரு தோழர்கள், அதில் காட்டப்படும் எளியவர்கள் பால் மனிதர்கள் காட்டும் அசுரத்தனமான அலட்சியம், நின்று நம் மீது கேள்விகளை எறிந்து விட்டுதான் நகர்கின்றன. எளிய நிலைமையில் இருக்கும் ஒருவரை எவ்வளவு தூரம் நம்மால் மட்டம் தட்ட முடிகிறது, அது ஒரு வகையில் கட்டுப்படுத்த முடியாத மனநோயின் வகையாக இருக்குமோ என்றெல்லாம் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் அவர்களை எப்படி நடத்தினாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற உணர்ச்சி நிலைதான் இதையெல்லாம் செய்ய தூண்டுமோ என்னவோ?
"அட... நம்ம ஆப்ரஹாம்! வாங்க. உள்ளே வாங்க ஆப்ரஹாம்" திண்ணையைக் கடந்து ஓடி வந்தான் துரை.
"ஆப்ரஹாம் நல்லா இருக்கீங்களா? பார்த்து எவ்வளவு வருஷமாச்சு" மார்போடு தழுவிக்கொண்டு, "வீட்டிலே சௌக்கியமா ஆப்ரஹாம்," அணைத்தபடி உள்ளே அழைத்துப் போனான்.
"உமா இங்கப் பாரேன், என் கிளாஸ்மேட் ஆப்ரஹாம்!" துரை தன் மனைவியை அழைத்தான்.
உமா, உள்ளிருந்து வந்து "வாங்க அண்ணா!" கைக்கூப்பி வணங்கினாள்.
"மகராசியா இருங்க தாயீ ..." உடலின் சகல பகுதிகளிலுருந்தும் 'குப்'பெனக் கிளம்பிய சந்தோசம், கண்களில் நிலைகொண்டது.
ஒரு கதையின் மத்தியில் காற்றைப் பற்றி விவரணை செய்திருப்பார். இப்படிக் காற்றினை ,அதன் வேகத்தை இயற்கையுடன் இணைந்து, கூர்ந்து நோக்கி அந்த உணர்ச்சி நிலைகளை நமக்கு கடத்துவது ஒரு தேர்ந்த கலைஞனால் மட்டுமே செய்யக் கூடிய செயல் இல்லையா?
"இத்தனை ஜீவன்களையும் வாழவைக்கும் காற்றுக்குத்தான் எத்தனை குணங்கள்!"
இளம் மனைவியைப் போல் முழுதாய் ஆரத்தழுவி சுகம் தருவதும், தார்க்காம்பால் குத்தப்பட்ட எருத்துக்கட்டு காளையைச் சீறுவதும்...!
காற்றால் சீற முடிகிறது.
கொடுமை கண்டு சீற வேண்டும்.
அதிகாலை மூன்று, நான்கு மணிவாக்கில் குதிக்கால் கூட பூவாய்க் குளிரும். காது மடலைகளை வருடினாள் கண்கள் சொருகும்!
'தடால் புடால்' என்று எழுந்து விடக்கூடாது.
புரண்டு, குப்புறப் படுத்��ுக் கொண்டு, தலையணையில் முழங்கைகளை ஊன்றி, உள்ளங்கைகளில் கன்னங்களை ஏந்திக் கொள்ள வேண்டும். மரங்களுக்கு ஊடே பார்க்க வேண்டும். முதல் இரவு அறைக்குள் தோழிகள் அழைத்து வந்து தள்ளி விட்டுப்போன மணப்பெண் போல மரங்கள் கவிழ்ந்து நிற்கும். சாம்பல் வானம் குளிர்ந்து கிடைக்கும்."
இதை படித்த பின் கண்களை மூடி இப்படியான தருணங்களை யோசிக்க வைத்தபடி கடக்கிறது 'கன்னிதானம்' கதையின் பக்கங்கள். இப்படி ஏராளமான தருணங்களையும், கோபங்களையும், கேள்விகளையும் தன்னுள் அடக்கி வைத்து காத்திருக்கின்றன இந்த கதைகள்.
ஊமைச் சலங்கைகள், சக்கம்மா, அக்கினிச் சலவை, இருளப்ப சாமியும் 21 கிடாயும் என்று எந்தக் கதையினை வாசித்தாலும் மக்களையும், அந்த மண்ணையும், அவர்களின் பாடுகளையும் ஒரு சுமைதாங்கி கல்லின் சுமை தாங்கும் நிலையிலிருந்து நமக்கு கடத்தியிருக்கிறார். கண்டிப்பாகப் படித்துப் பாருங்கள்...
வேல ராமமூர்த்தி கதைகள் ❤️ • வேல ராமமூர்த்தி நடிப்பில் மட்டும் அல்ல எழுத்திலும் கம்பீரம் குறையாத பட்டத்து யானை என்பது அனைவரும் அறிந்ததுதான். அவரது நேர நெருக்கடியில் குறைந்த படைப்புக்களையே தந்திருந்தாலும் அத்தனையும் சிறப்பானவை. அந்த வரிசையில் அவர் எழுதிய 38 சிறுகதைகளை கொண்ட தொகுப்புத்தான் இந்த வேல ராமமூர்த்தி கதைகள். • எளிய மக்களின் வாழ்க்கையையும், போராட்டங்களையும், வேசமில்லா நேசங்களையும், பேரன்புகளையும், குறும்புத்தனங்களையும், கம்பீரங்களையும், களவுகளையும், எடுத்ததுக்கெல்லாம் இரத்தம் கேட்கும் அவர்களின் முன் கோபங்களையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், மரபுகளையும் வழக்கம்போலவே தனது மண் மணம் மாறாத எழுத்துக்களில் அழகாக காட்டுகிறார். • வேல ராமமூர்த்தியின் எழுத்து நங்கூரம் போல கதைகளின் பக்க அலைகளுக்குள் நிலைகொள்ள வைத்து மூழ்கடித்துவிடுகிறது. உவமை, உருவகம் எல்லாம் மழை மாதிரி பொழியும் எழுத்து. ஒவ்வொரு சிறுகதையும் முடியும் போது ஒரு கனத்த உணர்வையும், இனம் புரியாத கோபங்களையும், கேள்விகளையும் நம்முள் ஏற்படுத்திவிடுவதே வேல ராமமூர்த்தியின் வெற்றி. • • “”ஏத்தா… தொட்டுக்கிற ஏதாவது பழைய வெஞ்சனம் இருந்நா குடுங்களேன் தாயீ..” மீசை நிறைய கஞ்சி ஒட்டியிருந்தது.
பெருநாழி கிராமத்து மக்களின் வாழ்க்கை என்னும் அழகிய ஓவியத்தை கற்பனை என்னும் வண்ணம் கொண்டு காலம் கடந்து காணாமல் போகாமல் நம் நினைவில் நிற்கும் வண்ணம் கவிதையாய் தீட்டியிறுக்கிறார் ராமமூர்த்தி அய்யா அவர்கள். கதைகளின் நடுவே மூடநம்பிக்கைக்கு எதிராக அவர் வீசிய சாட்டையின் வீரியத்தை இன்னும் நம்மால் உணர முடிகிறது. ரொம்ப பிராமதமான புத்தகம் என்று சொல்லுமளவு இல்லை என்கிற போதும் நேரமிருந்து படித்தால் கண்டிப்பாக பொழுதை கழிக்கும் நல்வ புத்தகமாக இது இருக்கும்.
வேலராம்மூர்த்தி அவர்கள் தனது பெருநாழி கிரமாத்தில் நடந்த சம்பவங்களை கதையாக பதிவு செய்தது இந்த புத்தகத்தில். பல கதைகளில் ஹிட்லர், எங்க அய்யாமாருக்காக..., கோட்டைக் கிணறு, ஆசை.. தோசை..., குர்ஷித் கதைகள் கவனத்தை ஈர்கின்றன. -கலைச்செல்வன் செல்வராஜ்
Collection of short stories narrating the rural lifestyle and culture in the author's unique way of portraying the incidents. Unable to binge-read as it is a collection and not a single story.