இப்புத்தகம் ஐந்து குறுநூல்களின் தொகுப்பு, அவை முறையே - நான் இந்துவல்ல, சங்கர மடம், இந்து தேசியம், இதுதான் பார்ப்பனியம் மற்றும் புனா ஒப்பந்தம்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மதவாதம், ஒற்றைக் கலாசாரத்தை முன்னிறுத்தி எழுப்பப்படும் கருத்துக்களால், வேற்றுமையில் ஒற்றுமை முற்றிலும் அழிந்து, அரசும் அரசாங்கமும் மெல்ல மெல்ல மதவாதிகளின் கைகளுக்குள் சிறைபட்டு நிற்கிறது. மதவாதக் கொள்கைகள் நூறாண்டுகளுக்கும் மேலாக அதிகார மையங்களின் சிந்தாந்தங்களாக மாறி, இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்துவருகிறது.
இந்து என்ற சொல்லின் பிறப்பிடம், பொருள் பற்றி பாரசீகம், துருக்கி, காகாசிரியர் மொழிகளின் அகராதியில் வழிப்பறிக்காரன், அடிமை என்று குறிப்பிடப்பட்டிருப்பதை அறியும் போது வியப்பாகவுள்ளது. அதுவே பல மொழி ஆய்வாளர்களின் கருத்தாகவும் அமைந்துள்ளது.
சங்கர மடத்தின் (காஞ்சி மடம்) நடைமுறைகள், அதன் அரசியல் தலையீடுகள், சிக்கல்களைப் பற்றி அடுத்த பகுதியில் அறிந்துகொள்ள முடிகிறது. வேதங்கள் வழியாக சமஸ்கிருதம், பார்ப்பானியத்தின் வளர்ச்சி, தனக்கென்று ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்கி, பிறப்பினால் உயர்வு, தாழ்வை ஏற்படுத்தி, மடங்கள் வாயிலாக ஆன்மீக அரசியல், ஊழல்கள் பற்றிய கருத்தகளைத் தெரிந்துகொள்ள முதல்படியாக அமைகிறது.
இந்திய தேசியம், திராவிட தேசியம் பற்றிய கருத்துகளும், அவற்றின் முரண்களையும், பார்ப்பானியத்திற்கு எதிரான பெரியார், திராவிடக் கருத்துகளை ஆழமாக அறிந்துகொள்ள முடிந்தது. சுதந்திரத்திற்கு முன்னும், பின்னுமான பார்ப்பானிய பத்திரிக்கைகளின் வளர்ச்சி, வருவாய்த் துறை, கல்வித்துறை, நீதித்துறைகளில் அவர்களின் மேலாதிக்கம் மெல்ல மெல்ல வசமாகிவிட்டதன் பின்புலத்தையும், அதன் நுட்பங்களை அறிய முடிகிறது. தேசிய அரசியலில், இந்து தேசியமும், ஆரிய மாயையும் கலந்து ஆன்மிக சாயம் பூசி வேற்றுமையை இம்மண்ணில் விதைத்து வருகிறது.
சுயமரியாதை உணர்வு கொண்டு சமூக மாற்றத்தை விரும்பும் அனைவருக்கும் இப்புத்தகம் முதற்படியாகவும், பாடநூலாகவும் அமையும். புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியின் முடிவில் அடிக்குறிப்புகளும், படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகமிது.