முனைவர் சு. அ. அன்னையப்பன் எழுதியுள்ள குறுந்தொகை காட்டும் அகமரபுக் கோட்பாடும் பண்பாடும் என்னும் நூல் ஊழ்வினையில் அறம், இடந்தலைப்பாடு, மடலேறுதல், உடன்போக்கு, இயற்பழித்தல், வெறியாட்டு, நொதுமலர் வரைவு போன்ற பல தலைப்புகளின்கீழ், குறுந்தொகைப் பாடல்களின் பெருஞ் சிறப்பை வெளிக்கொணர்கிறது. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் இன்று உலக இலக்கிய அரங்கில் அவற்றிற்குரிய பேரிடத்தைப் பெற்றுத் திகழ்கின்றன. அவற்றை விஞ்சிய இலக்கியம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை(“They are unsurpassed in world literature”) என்பதைப் பல செம்மொழிகளையும் இன்றைய மொழிகளையும் ஆழமாகக் கற்றுணர்ந்த பேரறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழின் உட்பகைவர்களும், அரைவேக்காடுகளும் சங்க இலக்கியம் பற்றி ஏதேதோ உளறிக்கொண்டிருந்தபோதிலும், உலகெங்குமுள்ள கவிதை உணர்வு உடையார் அதற்குத் தொடர்ந்து வணக்கம் செய்து வருகின்றனர். கைம் ராபின் எனும் யூதப்பேராசிரியர் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டிலுள்ள மன்னன் சாலமன் எழுதிய ‘உன்னதப்பாட்டில்’ தமிழ் அக இலக்கிய மரபின் தாக்கம் இருப்பதை வரலாறு, மொழியியல், இலக்கியம் ஆகிய துறைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணச்சான்றுகள் கொண்டு நிறுவியுள்ளார். இத்தொன்மையும் தனித்தன்மையும் கொண்ட அக இலக்கிய மரபில் வந்த படைப்புகளுள் குறுந்தொகை பெரும்பெயர்க்குரியது. அகவை முதிர்ந்த அறிஞர்கள் மட்டுமல்லாமல், நமது இளைய தலைமுறை ஆய்வாளர்களும் சங்க இலக்கியங்களில் ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்கது.