இந்த நாவலின் கதாநாயகன் அலெக்ஸாண்டர் புலம் பெயர்ந்தே தன் வாழ்க்கையைக் கழித்தவன். இதனால் இருத்தலின் நிச்சயமின்மை அவன் மனத்தின் சமனிலையை எந்த நேரமும் குலைக்கத் தயாராக இருக்கிறது. விதி அவன் காதுகளைப் பிடித்து இழுத்து எல்லாக் காலங்களுக்கும் கொண்டு போகிறது. அந்தக் காலங்களினூடான பயணத்தில் இவன் தன்னைப் பல அலெக்ஸாண்டர்களாகப் பெருக்கிக் கொள்கிறான். அவனுக்கேற்ப இந்த நாவலும் தன்னை ஏக காலத்தில் ஒரு சரித்திர நாவலாக, சமூக நாவலாக, துப்பறியும் நாவலாக பல வகைமைகளில் தன்னைப் பெருக்கிக் கொள்கிறது. மூர்க்கத்தனமான கடந்தகாலத்தின் நீட்சியாக, குரூரமான நிகழ்காலம் கட்டப் பட்டிருக்கிறது. இந்த நிகழ்காலத்தின் நீட்சியாக வரவிருக்கும் எதிர்காலம் எத்தகைய விபரீத சாத்தியங்களை முன் வைக்க இருக்கிறது என்பதையும், எல்லா அலெக்ஸாண்டர்களும் ஒரே அலெக்ஸாண்டரே என்பதையும் இறுதியில் அறிய நேரும் வாசகனை இந்த நாவல் திகைப்பில் ஆழ்த்துகிறது.
மறுவாய்ப்பு கிடைத்தால் தான் வாழ்ந்த தடத்தை மாற்றிச் சீரமைப்பேன் என்பது ஒவ்வொரு மனிதனுடைய எண்ணமாகிறது.கொண்டாடிய வெற்றிகளே நாள்பட வெறுப்பவைகளாகிறது. எதிலும் நிலையான சந்தோஷத்தை மனிதன் ஏற்பதில்லை அதுவே அவனை பல தேடல்களை நோக்கி வழிநடத்துகிறது.
இறந்த காலம்,நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் மூன்று ஒரே கோட்டில் சந்தித்தாலும் அந்த அந்தக் காலத்தில் வாழ்பவன் எதிர்காலத்தில் மட்டுமே சந்தோஷம் இருப்பதாகப் பிரமைக் கொள்கிறான்.எதிர்காலத்தில் இருப்பவன் மற்றொரு எதிர்காலத்தை நோக்கி காத்துக் கொண்டிருக்கிறான். எதிர்பார்ப்புகள் ஒரு போதும் முற்றுப்பெறுவதில்லை, சமநிலைப்படுவதுமில்லை..
தனக்கெனத் தேசமில்லை என்று போர்பூமியிலிருந்து இழப்புகளைச் சந்தித்த பிறகு ஈழத்திலிருந்து வெளியேறும் அலெக்ஸ் இந்தியா,கனடா என்று சுற்றி வருகிறான்,அங்கேயும் அவனுக்கு இருப்பிடத் தேவைக்குப் பிரச்சனை எழுகிறது. இயக்கத்தைச் சேர்ந்தவனாக இருப்பானோ என்று உளவு அதிகாரி ரனில் அலெக்ஸை பின் தொடர்கிறான்.
உலக நாடுகளால் தேடப்படும் கார்லோஸ் தன்னிடம் வேலை செய்பவர்களின் கடைசிக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க ஓர் ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறான். கிடைத்த ஏதோ ஒரு பழங்கால மம்மியை கிளியோபட்ரா மம்மி என்று பொய் சொல்லி பல மில்லியனுக்கு விற்றுவிட்டுப் பணம் பெற்றுவிடுகிறான் அதில் அலெக்ஸின் பங்களிப்பும் இருக்கிறது.
எகிப்தில் அலெக்ஸ்க்கு ருக்ஸானாவின் அறிமுகம் கிடைக்கிறது.உலகில் தன் மண்ணைக் காப்பாற்ற போராடும் பல இயக்கங்களில் ஒன்றில் சேர்ந்தவளாகத் தன் மண்ணைக் காக்க போராடிக் கொண்டிருக்கிறாள்..
எதேட்சையாகப் பிரமிடின் வழியே விரும்பிய காலத்துக்குள் பயணிக்கலாம் என்று தெரிந்த பிறகு அலெக்ஸ் மற்றும் ருக்ஸானா இருவரும் நிகழ்காலத்திலிருந்து விடுபடுகின்றனர்.
நிகழ்கால அலெக்ஸ்வுடனே கடந்த கால மகா அலெக்ஸின் வாழ்க்கைப் பற்றிய குறிப்பும் ஒரு சேர வாசிப்புக்கு தரப்படுகின்றன.மண்ணின் மீது வெறிக் கொண்டவனாக உலகத்தை ஆளப் புறப்பட்டவனின் போர்வாழ்க்கையும் அவன் எதிர்கொண்டவையும் கதைக்குத் தேவையான அளவில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
எதிர்காலத்துக்குள் நுழைந்த அலெக்ஸ்க்கு நிகழ்காலத்தில் இருக்கும் பிரிவினைகளே வேறுவடிவில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமே எழுகிறது. ருக்ஸானா விரும்பியபடியே எதிர்காலம் இருப்பதைக் கண்டு ஆனந்தப்படுகிறாள் ஆனால் அந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்களின் வாழ்க்கை முறைகளை வெறுப்பதையும் அறிந்துக் கொள்கிறாள்.
ஒரு கட்டத்தில் எதிர்காலம் ,நிகழ்காலம் கடந்த காலத்தைச் சேர்ந்த அலெக்ஸ்களும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொள்கின்றனர்.
மனிதனின் வெறிச் செயலால் பூமியை அழித்து வாழ்வாதார இடம் தேடி அலைய போகும் எதிர்கால நிலையறிந்து விக்கித்துப் போகின்றனர் நிகழ்கால மனிதர்கள்.தொடர் பயன்பாடுகளின் முடிவு அதை அழிப்பதிலே முற்றுப் பெறுகிறது.
மாவீரர் அலெக்சாண்டரையும் இலங்கை அலெக்ஸ் ஆகிய மனிதர்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை பற்றி கற்பனை கலந்து எடுத்துரைக்கிறது இந்நூல். எகிப்து பிரமிடு பற்றிய விடயங்களை கூறி பிரமிடு குறித்த ஆர்வத்தினை தூண்டுகிறது. கதைக்களம் கொஞ்சம் ஆமை வேகத்தில் நகர்கிறது. கதையின் முடிவில் முழுவதும் கற்பனை கதாபாத்திரங்கள் மற்றும் புனைவுடன் ஆசிரியர் அமைக்கப்பட்டிருப்பது யாதெனில் என்பது தெரியவில்லை. இந்த இறுதிக்கட்டம் கொஞ்சம் சலிப்படைய வைக்கிறது. மொத்தத்தில் கற்பனை கதைகள் பிரியராய் இருப்பின் இக்கதை ஏற்புடையது.