எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சில கதைகளை முன்பு படித்துள்ளேன். யானை டாக்டர், கெத்தேல் சாஹேப் கலக்கும் சோற்று கணக்கு, ஊமைச்செந்நாய் போன்றவைகள் அடக்கம். ஏனோ தெரியவில்லை மீண்டும் ஊமைச்செந்நாய் கதையினை படிக்கத் தோன்றியது. முன் படித்தது அவரின் இணையதளத்தில், சரி புத்தகமாய் வாங்கிப் படிப்போம் என்று புத்தகத்தை ஆர்டர் செய்து காத்திருந்தேன். சில சமயங்களில் எதிர்பாராமல் சில நிகழ்வுகள் நடக்கும். அது போன்றுதான் இந்த புத்தகத்தில் ஊமைச்செந்நாய் கதையோடு சேர்த்து இன்னும் ஆறு கதைகள் இருந்தன.
யட்சி, இரு கலைஞர்கள், காடன்விளி, திருமுகப்பில், காமரூபிணி, மத்தகம் மற்றும் ஊமைச்செந்நாய் ஆகிய கதைகள் அடங்கிய புத்தகம் இது. எனது பள்ளித்தோழன் ஜெயமோகன் அவர்களின் தீவிர வாசிப்பாளன். அவன் சிலாகித்து இருப்பதை கேட்டு ஆரம்பித்த கதைகள் ஜெயமோகன் அவர்களுடையது. அவரின் கதைகள் பொதுவாக வட்டார வழக்கு தூக்கலாக இருப்பதை உணர்ந்தே படிக்க ஆரம்பித்தேன். உண்மையில் ஒரு வாசகனாய் இன்னும் கடக்க வேண்டிய தூரங்கள் மிக உண்டு என்பதில் எனக்கு எப்போதும் அதீத நம்பிக்கை உண்டு.
ஒரு வாசகனுக்கு இதுதான் எல்லை என்று ஒன்று இருக்கவும் இயலாது. அது எப்போதும் எழுத்தாளர்கள் புதியதாய் அறிமுகம் ஆகும் போது புரிந்து கொள்ள முடிகிறது. காடன்விளி படித்து முடிக்கையில் ஏற்பட்ட எண்ண ஓட்டங்களை யட்சி கதையில் விளங்கிக்கொள்ள முடிகிறது. யட்சி கதையில் சொல்லப்பட்ட அல்லது விதைக்கப்பட்ட சொற்களின் யதார்த்தங்கள், காமரூபிணி கதையின் மூலம் முற்றாக விளங்குகிறது. அது போல ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களில் யானையின் பரிபூரண உலகம் விளக்கமாக எப்போதும் எடுத்து சொல்லப்படுகிறது.
ஊமைச்செந்நாயின் காரிக்கொம்பன் ஒரு வகை யானை என்றால், மத்தகத்தின் கேசவன் இன்னொரு வகை. இப்படி மலையின் மகனை, இருளின் மைந்தனை, எத்தனையோ ஆண்டுகளாய் இந்த பூமித்தாயில் கால் வைத்து இந்த பூமியை ஒரு வகையில் காத்து நின்றும், நமக்கு மிகப் பெரிய பிரம்மாண்டமாய் இருக்கும் யானையை எழுதுவதில் அவருக்கான அலாதி பிரியம் எப்போதும் வெளிப்படுகிறது.
மத்தகத்தில் இப்படி ஓர் இடம் வருகிறது, "டேய் மயிராண்டி, அவனுக்கு அவன் கண்ணிமைக்கிறதுக்குக்கூட கணக்குண்டுலே" என்பார் ஆசான்.
உண்மையிலேயே கண் இமைப்பதையும் தலையாட்டுவதையும் எல்லாம் மனதுக்குள் எண்ணிக்கொண்டிருக்கிறதா என்ன? யானை மனம் மனித மனதைவிட்டு நூறு மடங்கு பெரியது. அந்த கரும்பாறைக்குள் பத்து மனங்கள் இணைந்து செயல்படுகின்றன. ஆனால் அது பேசுவதில்லை. புலம்புவதும் அழுவதும் இல்லை. உள்ளே ஏராளமானவர்கள் அமர்ந்து வேலை செய்யும் ஒரு ஹுஸூர் கச்சேரியே இருக்கிறது என்று நினைத்து கொண்டேன். யாரும் எதுவும் பேசாமல் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த கச்சேரி நடுவே ஒரு பெரிய மணல் கடிகாரம் மண்ணை இம்மியிம்மியாக உதிர்த்துக் கொண்டிருக்கிறது. எல்லாம் கனகச்சிதம். ஒரு தப்பு ஒரு பிசிறு கிடையாது.
கேசவன் என்ற யானையில் வழித்தடத்தில் பலர் பயணிக்கிறார்கள். திருவானந்தபுரத்து இளையதம்புரானின் நண்பனாய் வலம் வருகிறது கேசவன். சீதர ஆசான், கதை சொல்லும் அவரின் உதவியாள், அருணாச்சலம் அண்ணன், சுப்புக்கண்ணன், அம்பிளி, கடுவப்பாறை நாராயணன் என்ற மற்றொரு யானை, இன்னும் சில யானைகள் என்று வேகமெடுத்தும், சில இடங்களில் இளைப்பாரியும் பயணிக்கும் கதை மத்தகம். கேசவனின் மத்தகத்தில் நாமே பயணிப்பது போன்று இருக்கிறது. இதில் பல கிளைக்கதைகள். ஜெயமோகன் அவர்களின் மொழி நடை பழப் பழக பல உலகத்தை விவரித்து காட்டுகிறது.
ஆசான் கைகூப்பியபடி, "ஆனை பத்ரமாயி வந்நுவல்லோ . அது மதி தம்புரானே" என்றார். "அவன் வரும் சீதரா. அவன் ஆனை. நூறு மனுஷரை காட்டிலும் அவன் சக்தன். ஆயிரம் மனுஷருடைய ஆத்மா உள்ளவன். மலையுடெ மகனல்லே அவன்? அவன் வந்ந வழி நீ வந்தால் ஜீவன் உண்டாகுமோ? நந்நாயி. ஒந்நும் பற்றியல்ல. ஈஸ்வர அனுக்கிரகம்..." என்றார் தம்புரான். இப்படி யானையின் ஆத்மாவையும், அதன் கால்களின் பின்னர் நடந்து உலகம் பார்ப்பவரையும், தந்தத்தில் கை வைத்து உலகம் பார்க்கும் ஆசானின் பார்வையிலும் நகர்த்தப்பட்டு கதை. ஊமைச்செந்நாய்க்கு பிறகு இந்த புத்தகத்தில் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்திய கதை.
ஊமைச்செந்நாய் கதையின் நாயகன் பெயரே ஊமைச்செந்நாய்! மிகவும் விறுவிறுப்பாக, அடிமைத்தனத்தையும், வீரத்தையும், உண்மையான வீரத்தையும், விலங்குகளைப் புரிந்து கொள்ளும் வாழ்வியலையும், பறங்கியினர் எந்த அளவுக்கு அடிமைத்தனத்தின் உச்சத்தையும், மலத்தை துடைத்து தூக்கிபோட கூட ஆட்கள் வைத்திருந்த அகோரத்தையும் , தான் வெள்ளைக்காரன் என்பதனாலேயே இயற்கை தனக்கு கட்டுப்படும் என்று நினைக்கின்ற பேதலித்த மனதின் உளறல்களையும் போகிற போக்கில் அள்ளி வீசி செல்கிற கதை.
இரண்டாம் முறை படிக்கையில் அது வேறு மாதிரியான படிமங்களை காட்டியது உண்மைதான். காரிகொம்பனை கொன்று அதன் தந்தங்களை அடையாளமாய் கொண்டு செல்லத்துடிக்கும் ஒரு வெள்ளை துரையின் கதை. காரிக்கொம்பன் என்ன ஆகியது, வெள்ளைத்துரை என்னவானான், ஊமைச்செந்நாய் என்னவனான், அடிமையாய் இருந்த போதிலும் அடிமையாய் இருந்தானா அவன், இப்படி பல கோணங்களில் கதை நகரும்!
"இருட்டிக்கொண்டே வந்தது. நட்சத்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தன. மேற்கு வானில் சரிபாதி பிறை நிலவு எழுந்து வந்தது. ஒரு தும்மல் ஒலியை அருகில் கேட்டேன். பெரிய மிளா ஒன்று நின்று என்னை உற்றுப் பார்த்தது. அதன் கண்களின் மெல்லிய மினுமினுப்பைக் கண்டேன். அது மீண்டும் தும்மியது. துறை, "முட்டாள் மிருகம்" என்று சொன்னான். மிருகங்களில் முட்டாளே இல்லை! மீண்டும் எப்போதாவது படிப்பேன். அப்படிப்பட்ட கதை!
யட்சிகளின் அறிமுகம் குறித்த கதையாக யட்சி கதையினை உணர்ந்தேன். அதைக் குறித்த விரிவான கதையாக காமரூபிணி இருந்தது. பஞ்சவண்காட்டு நீலி, இடலைக்காட்டு நீலி, வள்ளியம்மை இசக்கி, இப்படி அந்த பூமியில் வாழ்ந்த பெண்களை தெய்வங்களாய் மதித்து போற்றி நிற்கும் குடும்பங்கள் நிலங்கள் பற்றிய விவரமான கதையாடல் இது. ஆயிரமாயிரம் யட்சிகள் இருக்கக்கூடும் இந்த நிலங்களில். கி.ராஜநாராயணன் அவர்களின் கோபல்ல கிராமம் புத்தகத்தில் கூட, கழுவனையும், மங்கம்மாளையும் தெய்வங்களாக கிராமமே கொண்டாடும். கழுவன் ஆசாரி மனைவி மங்கம்மாள் அணிந்திருந்த பாம்படங்கள் நகை மீது ஆசை. அதனால்தான் கொள்ளை அடிக்கப்போனவன் கொலை செய்யும்படியானது.
அதன் பின் இருவரையும் ஊர் தெய்வங்களாக்கி படையல் இடும் வழக்கம் வந்ததைப் பற்றி சொன்னதின் தொடர்ச்சியே யட்சிகளின் கதையில் நான் பார்க்கிறேன். "யட்சி: பூமியில் வாழும் தேவர்களில் ஒரு வகையினர் யட்சர்கள். யட்சி அதன் பெண்பால். மிக அழகிய பெண்ணாகத் தோன்றி எதிர்ப்படுபவர்களை கவர்ந்து மோகமூட்டி இறுதியில் கொன்று உண்ணும் என்பது புராண நம்பிக்கை. ஒரு வகை மோகினிப் பேய் எனலாம். குமரி மாவட்டத்தில் பல நூறு யட்சி ஆலயங்கள் உள்ளன.
காடன்விளி மீண்டும் படிக்க வேண்டுமாய் தோன்றுகிறது. இன்னும் ஆழ்ந்த வாசிப்பு வேண்டியதாய் தோன்றுகிறது! இரு கலைஞர்களில் ஜே.கே என்ற மாபெரும் கலைஞனையும்,இசை ஞானி இளையராஜா என்ற மாபெரும் கலைஞனையும் பற்றி அவருக்கே உரித்தான முறையில் எழுதினாரோ என்ற எண்ண��் எழுகிறது! திருமுகப்பில் கதையில் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் திருவாட்டார் ஆதிகேசவன் கோவிலினுள் நுழைந்து அந்த தெய்வத்தின் சிலையைக் கண்டு வியக்கும் கதை. இதில் நிறங்களின் பேதமும், உணர்வுகளின் பேதமும் வெகுவாக சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த தொகுப்பு முழுக்க வேறு வேறு சிந்தனைக் களங்கள். படித்துப் பாருங்கள்...
This is a short novel collection of JeMo where one of the titles is ஊமைச்செந்நாய். This story tells us what kind of lives our tribes lived during British Rule. Apart from that, the story also tells how British Officers themselves were treated by their High Command. It is a gripping read.
Couple of stories are difficult to grasp either due to the native slang or my inability to comprehend the crux. I liked the IruKalaigargal - though in my view, it cannot be considered as a story... but as an experience of two artists..
This entire review has been hidden because of spoilers.
1. oomai sennaai: When Oomaichennaai and Durai went into the forest to hunt, the description of the elephant’s presence offered a wonderful view of the beauty of nature. Oomaichennaai’s deep knowledge of the forest—such as how a cheetah can move without disturbing even a blade of grass—adds rich detail and insight into the behavior of animals and the environment.
The way Indians and Anglo-Indians were mistreated by certain British individuals made me truly reflect on the meaning of freedom. Oomaichennaai’s calm nature—his refusal to react, speak out, or even can't accept help from others—adds depth to his character and makes him stand out.
Its my 2nd book on Jeyamohan. can understand why he is considered a top writer. Some stories were difficult to understand due to more localized words/slang from Travancore tamil. Still recommended for serious book readers.
மத்தகம் மற்றும் ஊமைச்செந்நாய் எனக்கு இந்த கதை தொகுப்புகளில் மிகவும் கவர்ந்தவை. என்னை அந்த காலகட்டத்துக்கே இழுத்து சென்றது. ஜெயமோகனுக்கே உரிய பாணியில் எழுதப்பட்ட கதைகள். காமரூபிணியும் ஓரளவுக்கு புடித்திருந்தது.