A gentle story with a hilarious touch by Chavi would keep the readers (of course born with Tamil as mother tongue) laughing till the end. Though it was written in 1963, when J.F. Kennedy was the President of U.S.A., still it retains the charm. The concept was novel and the characterisation, especially Mrs. Rockefeller, Mr. Punch (Panchapakesan) and the Shashtrigal totally absorbs the readers.
நியுயார்க்கில் வாழும் சீமாட்டி மிஸஸ். ராக்ஃபெல்லர், அவரது கணவர் சீமான் ராக்ஃபெல்லர், ராக்ஃபெல்லரின் சகோதரி கேதரின், அவளது கணவர் ஹாரி ஹாப்ஸ், இவர்களது ஒரே மகள் லோரிட்டா, ஹாரி ஹாப்ஸுடன் நியுயார்க்கில் வேலை பார்க்கும் கும்பகோணம் T. K. மூர்த்தி, அவர் மனைவி லோசனா, இவர்களது ஒரே மகள் வசந்தா என மனதை விட்டு அகலாத பாத்திரங்களைப் படைத்து சாவி அவர்கள் 1964லில் உருவாக்கிய ஒரு அற்புத, கற்பனைக் காவியம்,
“வாஷிங்டனில் திருமணம்”.
ஆனந்த விகடனில் வாராவாரம் மலர்ந்து வாசகர்களைத் திணறடித்தது.
சாவியின் செழித்த கற்பனையில் ஆரோக்கியமான நகைச்சுவையோடு அமெரிக்க நகரம் வாஷிங்டனில் ஒரு தென்னிந்தியத் திருமணம் மலர்வதாக கதை அமைகிறது.
வசந்தாவும் லோரிட்டாவும் நியுயார்க் யுனெஸ்கோ அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள். வசந்தாவுக்கு தஞ்சாவூரில் வெகு விமரிசையாகக் கல்யாணம் நடைபெறுகிறது. அந்தக் கல்யாணத்திற்கு ஹாரி ஹாப்ஸ் தம்பதிகள் தங்களது மகள் லோரிட்டாவுடன் நான்கு நாட்கள் தங்கி திருமணத்தின் ஒவ்வொரு சடங்கினையும் அனுபவித்து, குறிப்புகள் எடுத்துக் கொண்டு, விரதத்திலிருந்து, கட்டுச்சாத கூடை வரை நடந்த சம்பவங்களை விதவிதமாக கேமிராவில் பிடித்துக் கொண்டு நியுயார்க் திரும்புகின்றனர். அவர்கள் மிஸஸ். ராக்ஃபெல்லரிடம் கல்யாணத்தைப் பற்றி விபரமாகக் கூற, சீமாட்டி ராக்ஃபெல்லர் தனது டெல்லி சிநேகிதியிடம் ஒரு தென்னிந்தியக் கல்யாணம் அமெரிக்காவில் வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என ஆதங்கப்பட, சிநேகிதி அதற்கு ஏற்பாடு பண்ணுவதாக வாக்களிக்கிறாள். அந்த அதிர்ஷ்டம் அறந்தாங்கி அய்யாசாமி அய்யர் என்பவருடைய மகள் ருக்குவுக்கு அடிக்கிறது. அறந்தாங்கி அய்யாசாமி, அவர் மனைவி விசாலம்மாள், அவர்களது மகள் ருக்கு, டெல்லி யு.எஸ். எம்பஸியில் வேலை பார்க்கும் அய்யாசாமியின் மருமான் பஞ்சு, ருக்குவின் பனாரஸ் பாட்டி, அபயாம்பாள் அத்தை, அய்யாசாமியின் மாமா ராமய்யர், சாம்பசிவ சாஸ்திரிகள், அம்மாஞ்சி வாத்யார், பையன் வீட்டு வாத்யார் அப்பு சாஸ்திரிகள், அப்பளாம் இட, ஜாங்கிரி புழிய, பருப்புத் தேங்காய்க் கூடு பண்ண, லட்டு பிடிக்க, பாலைச் சுண்டக் காய்ச்சி சக்கரை சேர்த்து திரட்டிப்பால் உருட்ட, மனோகரம், அதிர்ஸம், தேன்குழல் போன்ற பக்ஷண வகைகள் பண்ண திருநெல்வேலி, பாலக்காடு, தஞ்சாவூர் இந்த ஊர்களிலிருந்து பாட்டிகளைத் தனி விமானங்களில் நியுயார்க்கிற்கு வரவழைப்பது,
கும்பகோணத்திலிருந்து நகை செய்யும் ஆசாரிகளையும் நியுயார்க் வரவழைத்து அங்கேயே ஆசாரிகளை புல்லாக்கு, ஒட்டியானம், எட்டுக்கல் பேசரி, ஜிமிக்கி போன்று நகை ஆபரணங்களை செய்யச் சொல்வது, திருச்சியிலிருந்து விசேஷமாக புஷ்பம், வெற்றிலை பாக்கு, அம்மி, கல்லோரல் வரவழைப்பது, பஞ்சுவுக்கும் பாலக்காட்டைச் சேர்ந்த ஏர் ஹோஸ்டஸ் லல்லுவுக்கும் ஏற்படும் காதல், அம்மாஞ்சி வாத்யாரின் அரைகுறை ஆங்கிலம், சாம்பசிவ சாஸ்திரிகளின் வெகுளித்தனம், புரோகிதர்கள், நாதஸ்வர கோஷ்டிகள், பத்துப் பாத்திரம் தேய்ப்பவர்கள், பந்தக்கால் நடுபவர்கள், பந்தி முடிந்ததும் சாப்பிட்ட இலைகளை எடுத்து அடுத்த பந்திக்குத் தயார்பண்ணும் ஆயாக்கள், ஜானவாசத்தில் கேஸ் லைட்டைத் தூக்கிச் செல்வதற்காக நரிக்குறவாஸ் பட்டாளம், குரைக்கும் நாய்கள் என இவர்களனைவரையும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல சென்னையிலிருந்து தனி விமானங்கள், பையனின் அப்பா லால்குடி கோபால்சாமி அய்யர், அவரின் பையன் கல்யாண மாப்பிள்ளை ராஜா என்கின்ற ராஜாராமன் (டெல்லி செக்ரடேரியட்டில் வேலை), சம்பந்திச் சண்டை போடுவதற்கென்றே பையனின் மாமா சாமாவைய்யர், வாஷிங்டன் சம்மர் ஹவுஸ், டம்பர்ட்டன் ஓக்ஸ் மாளிகை,நேஷனல் ஆர்ட் கேலரி (அதன் மாடி மீது அப்பளாம் இடுவதற்காக), லிங்கன் மண்டபம், ஜெபர்ஸன் மெம்மோரியல், வாஷிங்டன் ஸ்தூபி, நிலவொளி படர செழிப்புடன் விளங்கும் செர்ரி மரங்கள் நிறைந்த டைடல் பேஸின் பூங்கா, கல்யாண வைபவங்களாகிய விரதம், மதியம் நிச்சயதார்த்தம், மறுநாள் காலை கண்ணுக்கு மையுடனும், கைத்தடியுடனும் சந்நியாசி கோலத்தில் மாப்பிள்ளையின் காசியாத்திரை,
இரு மாமாக்களும் பையனையும் பொண்ணையும் தோளில் சுமந்து உற்சாகமாக ஆடும் மாலை மாற்றல் நிகழ்ச்சி, ஊஞ்சல், பட்டுப் புடவையுடன் ஜொலிக்கும் மாமிகள் கலர் சாத உருண்டைகளை நாலா பக்கமும் தெறிக்க விடும் வைபவம், மணமகன், மகள் இருவருக்கும் வெள்ளிக் கிண்ணத்தில் பாலும் பழமும் கொடுக்கும் நிகழ்ச்சி, அப்பாவின் மடியில் மகள் உட்கார்ந்த நிலையில் மணமகன் மணமகள் கழுத்தில் ஏற்றும் மங்கல நாண், பருப்பு உசிலி, நன்கு பொறிந்த உளுந்து அப்பளாம், வடை பாயசத்துடன் பலமான முகூர்த்த விருந்து, மண்டபத்தில் உணவிற்குப்பின் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் ஜாலியான உரையாடல், மாலை நலுங்கு வைபவம், மறுநாள் பாலிகை கரைத்தல், கட்டுச்சாத கூடை, சம்பந்தி மாமிகளுக்கு மட்டும் ஸ்பெஷலாக ஹெட்குக் புளிக்காய்ச்சல் ஒரு பாட்டிலில் பண்ணித் தருவது, பிறகு கடைசியாக பிரிவு உபச்சாரமென மூன்று நாள் கல்யாணம் வெகு விமரிசையாக சாவி இந்த நாவலில் அழகுற விவரித்திருக்கிறார்.
வாஷிங்டனில் நடந்த அந்த பிரம்மாண்ட கல்யாணத்தில் இரண்டாவது முறையாகக் கலந்து கொண்டு அந்த ஆனந்தத்தை உங்களிடம் பகிர்கிறேன். நீங்களும் மீண்டும் ஒரு முறை வாஷிங்டனில் அமெரிக்கச் சீமாட்டி மிஸஸ். ராக்ஃபெல்லர் நடத்தி வைத்த அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு அனுபவிக்குமாறு வேண்டுகிறேன். ஐம்பது வருடங்கள் கழிந்தாலும் இன்றும் புது மெருகோடுதான் நாவல் பயணிக்கிறது.