தமிழில் எழுதப்பட்ட முதல் புதினமாகும். பிரதாப முதலியார் சரித்திரம் எனும் இந்நாவலை வாசிக்கத் தொடங்கியபோது, இது ஒரு எளிய கதையாகவே இருக்கும் என நினைத்தேன். ஆனால் வாசிப்பின் தொடக்கத்திலிருந்தே என் கணிப்பு தவறானது என்பதை உணர்த்தியது. இந்த நாவல் என் எதிர்பார்ப்புகளை முற்றிலும் மீறி, வியப்பூட்டும் தன்மையுடன் அமைகிறது.
இந்நாவல் நகைச்சுவை, காதல், நையாண்டி, அரசியல், சாதி, மதம், சமயம் ஆகிய அனைத்தையும் இணைத்துத் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஒரு வளமான இலக்கிய நூலாகும். இந்நூலில் உள்ள துணைக்கதைகள் அல்லது கிளைக் கதைகள் மையக் கதைக்கு தொய்வூட்டாமல், அதை மேலும் சிறப்பாக்குகின்றன.
இப்புதினத்தை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை, நீதித்துறை நடுவராகவும், தமிழ்-ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவராகவும், சட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவராகவும், சமூக சீர்திருத்த நோக்குடன் கற்பனையிலக்கியத்தை தமிழ் மொழியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியவராகும்.
இந்த புதினத்தில் செம்மொழி மட்டுமின்றிவடமொழிச் செறிவும் காணப்படுகிறது. இதனால் பல சொற்கள் வாசிப்பவர்களுக்கு எளிதாக புரியவில்லை.இதே நேரத்தில், இந்நூலின் மொழி நடையில் புதுமை, பிரதிபலிப்பு, விளக்கத் திறன் போன்றவை காணப்படுகின்றன. என்றாலும், எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்த தந்தை பெரியாருக்கு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இங்கு உருவாகிறது. தந்தை பெரியார் அவர்களாலே தமிழ் மொழி இன்றும் தனித்து செம்மையாக செம்மமோழியாக இயங்குகிறது.
இப்புதினத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் பிரதாப முதலியார் மற்றும் அவரது துணைவி ஞானாம்பாள். குறிப்பாக ஞானாம்பாள், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட ஒரு பாத்திரமாக திகழ்கிறார். அவருடன் சேர்ந்து பிரதாப முதலியாரின் தாயார் சுந்தரத்தண்ணியும் இந்தக் கதைக்கு வலு சேர்க்கின்றார்.
இப்புதினம் முதலில் 1857ஆம் ஆண்டு எழுதப்பட்டு, 1879இல் அச்சாகியதாக நம்பப்படுகிறது.அக்காலத்தில் இந்தியா, குறிப்பாகத் தமிழ்நாடு, ஆங்கிலேய ஆட்சியின் கீழ் சமூக மாற்றங்களை எதிர்கொண்ட காலம்.அக்காலத்தில் மத சாதி வெறி, பெண்களுக்கு எதிரான ஒருக்குமுறைகள் என சமூக தீமைகள் கொடிகட்டி பறந்த காலம். அக்காலத்திலும் பெண் கதாபாத்திரம் படித்தவராகவும் அறிவாளியாகவும், துணிவானவளாகவும் உருவாக்கப்பட்டுள்ளது — இது அக்கால தமிழ் இலக்கியத்தில் வியக்கத்தக்க முயற்சி.
பிரதாப முதலியார் சரித்திரம் என்பது தமிழ் புதின இலக்கியத்தில் ஒரு முன்னோடியான படைப்பு. இது எளிய கதை சொல்லலாக இல்லாமல், பல்வேறு இலக்கிய நுட்பங்களை பின்பற்றியும், புதிய வழிகளில் தமிழ் வாசகர்களை ஈர்க்கும் முயற்சியாகவும் இருக்கிறது.நகரம், கிராமம், அரசவை என காட்சிகள் மாறிக்கொண்டே செல்வது வாசிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது.
பிரதாப முதலியார் சரித்திரம் என்பது வெறும் ஒரு கதையல்ல. அது தமிழ் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தையும், இலக்கிய வளர்ச்சியின் தொடக்க கட்டத்தையும், மாற்றத்திற்கான நுட்ப முயற்சிகளையும் பிரதிபலிக்கும் முக்கியமான ஆவணமாகும். இது தமிழில் புதினம் என்ற இலக்கிய வடிவத்துக்கு அடித்தளமிட்டதும், நவீன தமிழிலக்கிய வளர்ச்சிக்கே மூலதனமாக அமைந்ததுமான ஒரு பெரும் பங்களிப்பு. தமிழராக பிறந்த அனைவரும் தனது வாழ்வில் ஒருமுறையேனும் வாசிக்கவேண்டிய புதினம்.