நூலாசிரியரின் தமிழர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரையே இந்நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியரின் கோட்பாடுகள் அனைத்தும் அவருடைய அனுமானத்தினாலும் சில அகச்சான்றுகளின் அடிப்படையிலும் குமரிக்கண்டம் என்பது தமிழ்நாட்டின் தெற்கே ஆழி பேரூழிக்குள் மறைந்த இடமன்று எனவும் மாறாக இராக் அருகில் அமைந்த மாபெரும் நாகரிகமான சுமேரியமே என்று பதிவிடுகிறார்.
தமிழர்கள் தொன்மையானவர்கள் என்றாலும் அவர்களின் தொன்மை ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்வுகளை கொண்டே சொல்லப்பட்டாலும், அதற்கு முன்னால் அவர்களின் நிலைமை என்னவாக இருந்தது என்பதையும், இத்தனை தொன்மையான நாகரீகம் அதற்கு முன் ஏன் கட்டிடங்களையோ, நூல்களையோ எழுதவில்லை என்ற ஒரு நியாயமான கேள்வியோடு ஆய்வை தொடங்கியுள்ளார். அதற்கு முன்னும் தமிழர்கள் நாகரீக வளர்ச்சியில் மேம்பட்டு இருந்தார்கள் என்றும், அவர்களின் அந்த வளர்ச்சிக்கு இப்போதும் நடந்து கொண்டிருக்கும் சுமேரிய அகழ்வாராய்ச்சிகளே அடையாளம் எனக்கூறுகிறார்.
சுமேரியர்களின் கடவுள் வழிபாடு, அடையாளங்கள், கடவுள்களின் வரலாற்று கதைகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் என அனைத்தையும் தமிழர்களோடு ஒப்பிட்டு அங்கே ஏற்படவிருந்த அழிவிற்கு முன்பாக மக்கள் அங்கிருந்து கிரீட் தீவு சென்று பிறகு சிந்து சமவெளியை அடைந்தார்கள் என அவர் கோட்பாடு வலியுறுத்துகிறது. அதே போல, சிந்து சமவெளியில் இருந்தும் அதே காரணத்திற்காக இன்றைய கேரளாவை வந்தடைந்தார்கள் என்றும் எடுத்துரைக்கிறார். அதற்காக அவர் உதாரணமாவும், சான்றாகவும் தமிழ் சங்கம், தென் மதுரை, பருளியாறு, கபாடபுரம், பண்டைய பாண்டியர்களின் மீன் இலட்சினை, மேலும் கேரளா உருவான வரலாறு என்று பல சான்றுகளை அனுமானித்து ஆராய்ந்தும் கூறுகிறார்.
இவையாவும் ஆசிரியரின் அனுமானமே என்றாலும், உண்மையாக இருந்தால் பெருமையாகவே இருக்கும்.