✨ கோபிநாத் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் புத்தகம் #பாஸ்வேர்ட்
புத்தகத்தில் இருந்து சில வரிகள் ~~
✨யார் பேச்சையும் கேட்க மாட்டேங்கிறான். இவன் எங்க உருப்படப்போறான்' என்று விமர்சிக்கப்பட்ட பலர், பின்னாளில் மதிக்கத்தக்க பிரபலமாக உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மனதின் குரலுக்குக் காது கொடுத்தவர்கள்தான். எல்லா நெருக்கடியான நேரங்களிலும், தவறு செய்யும் தருணங்களிலும், அவசரப்படும் பொழுதுகளிலும், துரோகம் செய்யும் சூழ்நிலைகளிலும், மகிழ்வான தருணங்களிலும் மனது சொல்லும் உண்மைக்குக் காது கொடுக்கத் தயாராக இருப்பவனை, காலம் எங்கோ அழைத்துச் சென்றுவிடுகிறது!
✨காலத்துக்கு நல்லவன், கெட்டவன், ஏழை, பணக்காரன், வெகுளி, அறிவாளி என்ற பேதமெல்லாம் இல்லை. மனதின் குரலைக் கேட்கும் குணம் உள்ளவருக்கு, அதுவே பல கதவுகளைத் திறந்துவைத்திருக்கிறது. 'நீ அந்த வேலையை எப்படிச் செஞ்சிருக்கணும் தெரியுமா?”, 'அடுத்து என்ன பண்ணப்போற....அதெல்லாம் சரி வராது. இப்படித்தான் என் மாமா பையன் பண்ணி சொதப்பிட்டான்!' என்று நாலாபுறமும் வந்து விழும் இரைச்சல்கள், பல நேரங்களில் மனம் சொல்வதைக் கேட்க விடாமல் தடுத்துவிடுகிறது.
நமது வாழ்க்கையை, அதன் எல்லை வரை சரியாகக் கட்டமைத்துத் தருவதற்கான இன்ஜினீயர்கள் இங்கு இல்லை. பைக்கில் வேகமாகச் செல்லும்போது, சட்டென்று குறுக்கே வரும் குழந்தையின் மீது மோதாமல் இருக்க. அனிச்சையாக பிரேக்கில் கால், கை வைக்கிற மாதிரிதான், மனதும் நம்மிடம் பேசும். வாழ்வின் எல்லை வரை காலத்தின் போக்கிலேயே சென்று சரியாகக் கட்டமைத்துத் தரும் சக்தி மனதின் குரலுக்குத்தான் உண்டு. வாழ்க்கையைப் பற்றி வாழ்க்கையைவிட யாராலும் அழகாகச் சொல்லித்தர முடியாது
✨ஒரு விஷயத்தை அனுபவித்து உணர்ந்து திருப்தியாகச் செய்வதே முக்கியம். அதீத வேகத்தை நிறுத்தி, மகிழ்வோடு உங்கள் பணிகளைச் செய்யுங்கள். இல்லையென்றால், காலம் முழுக்க ஓடினாலும் திருப்தி இல்லாத படபடப்பான அர்த்தமற்ற வாழ்க்கையையே வாழ முடியும்வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழையாக மனித வாழ்க்கையும் இருந்தால் யாருக்கு என்ன லாபம்?