இந்த நூலை வாசிக்கும் முன்பு வரை, முதல் உலக போருக்கு காரணம், ஆஸ்திரிய இளவரசரை, செரிபியா தீவிரவாதி கொன்றது தான் என்றே நினைத்திருந்தேன். ஆனால், அந்த நிகழ்வு ஒரு trigger மட்டுமே என்பதும், அதற்கு முன்பே பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் போருக்கு தயாராக இருந்ததும், இந்த நாடுகளுக்குள் இருந்த நட்பும், பகைமையும் இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது.
நூலை 4 பகுதிகளாக பிரித்துள்ளார் ஆசிரியர்.
முதல் பாகம் இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பியாவின் முக்கிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி, அஸ்திரியா-ஹங்கேரி ஆகிய நாடுகளை பற்றியது.
ஒவ்வொரு அத்தியாயமும், இந்த ஒவ்வொரு நாட்டின் அன்றைய பொருளாதாரம், அரசியல், ராணுவ பலம் ஆகியவற்றை நமக்கு சொல்கிறது. இந்த விரிவான அறிமுகமே மிக முக்கியம். அன்றைய ஐரோப்பியவை புரிந்து கொள்ளாமல் முதல் உலகப் போரை புரிந்துகொள்ள முடியாது.
இரண்டாம் பாகம் முழுக்க போருக்கான காரணங்கள், பல்வேறு ஒப்பந்தங்கள், ஒவ்வொரு நாட்டின் முன்தயாரிப்புகள் அனைத்தையும் விளக்குவதோடு, அஸ்திரிய இளவரசர் படுகொலையையும் சொல்கிறது.
மூன்றாம் பாகம் முழுக்க போர்க்களம் பற்றியது. 1914 தொடக்கம் முதல் 1918 போர் இறுதி வரை நடந்த பல்வேறு போர்களையும், அதன் விளைவுகளையும், இழப்புகளையும் அலசுகிறது. மேற்கு முனை போர்கள், கிழக்கு முனை போர்கள், கடல் போர்கள் இந்த போர்க்களின் வெற்றி தோல்வியும் இந்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
நான்காம் பாகத்தில், முதல் உலக போரில் இந்தியாவின் பங்கு, அமெரிக்காவின் பங்கு, போரின் முடிவு, அதனால் ஏற்பட்ட இழப்பு, ராணுவம��� & மக்களின் துயரம், உயிரிழப்பு கணக்குகள், பொருளாதார இழப்புகள் அனைத்தும் அடங்கி உள்ளது.
முதல் உலகப்போர் கிழக்கு ஐரோப்பாவில் ஒரு சிறு தீப்பொறியாக பிறந்தது. பிறகு ஐரோப்பா முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அந்த வகையில், முதல் உலகப் போர் என்பது பெருமளவில் ஐரோப்பிய போர். மைய நாடுகளும், நேச நாடுகளும் அணி பிரிந்து கிழக்கு முனையிலும், மேற்கு முனையிலும் தொடுத்துக்கொண்ட போர். தங்கள் பிரதேசங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றவும், புதிய பிரதேசங்களை கைப்பற்றுவும், அவர்கள் போரிட்டனர். ஐரோப்பிய நாடுகள் அதிகம் குவிந்து போரிட்டது மேற்கு முனையில் பிறகு கிழக்கு முனையில்.
ஒரு நாளைக்கு 5,600 சிப்பாய்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும். 1914-ல் தொடங்கி 1918 வரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 லட்சம். 86 லட்சம் மரணங்கள்.
உலகின் முதன்மை சக்தியாகத் தன்னை மாற்றிக் கொள்ள விரும்பியது ஜெர்மனி. ஏற்கெனவே அந்த இடத்தை வகித்து வந்த பிரிட்டன் இந்தச் சவாலை முறியடிக்க நினைத்தது. ஜெர்மனியைப் பழிவாங்க விரும்பியது பிரான்ஸ். பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் ஜெர்மனியின் பிரதேசங்கள் வேண்டும். செர்பியர்களுக்குத் தனி நாடு வேண்டும் ஆஸ்திரியாஹங்கேரிக்கு பால்கன் பிரதேசத்தை ஆள வேண்டும். ரஷ்யாவுக்கும். கூடுதலாக, ஜெர்மனியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். தனது இழந்து அதிகாரத்தைத் திரும்பப்பெற்றாகவேண்டிய அவசியத்தில் இருந்தது ஒட்டமான் சாம்ராஜ்ஜியம். ஆனால் போரின் முடிவில், எந்தவொரு நோக்கமும் நிறைவேறவில்லை.
முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போரை கொண்டு வந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால், 1914 தொடங்கி 1945 வரை ஒரே ஒரு உலகப் போர்தான் நிகழ்த்தப்பட்டது. மத்தியில் சில ஆண்டுகள் இடைவேளையுடன்.