தலைப்பையும் இந்த புத்தகத்தை ஓர் மலையாள எழுத்தாளர் நம் இலக்கிய வாழ்க்கையின் புனைவுகளுக்கு உட்படுத்தி ஓர் நாவல் எழுதியுள்ளார் என்பதையும் கேட்டதிலிருந்து வாசித்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டே இருந்தேன். அதற்கான வேளை இப்போதுதான் வாய்த்தது. மிகவும் ரசிக்கும் படியான மொழியாக்கம் இதை மொழி மாற்று செய்திருக்கும் எழுத்தாளர் அவர்களுடையது.
பாணர்கள், கூத்தர்கள், பரதவர், சாலியர், வேளாளர், மறவர், மன்னர்கள், பெரும்புலவர்கள் என்று நகர்கிறது கதை. மூன்று கதை மாந்தர்களின் வழியே இந்த கதையை நமக்கு கடத்துகிறார் மனோஜ் அவர்கள். கொலும்பன், சித்திரை, மயிலன் ஆகியோர் வழி நம்மை வந்தடைகிறது பாணர்கள் மற்றும் கூத்தர்களின் வாழ்க்கை. அரிது அரிதாக காணக் கிடைக்கும் ஒன்றையும் தன் கதை சொல்லலில் மறைத்து வைக்கவில்லை எழுத்தாளர். அதை மொழிமாற்றம் செய்தவரும் எந்த குறையும் வைக்கவில்லை.
ஒவ்வொருவரின் எண்ணங்கள் மூலம் பயணிக்க முடிந்தது இந்த புத்தகத்தில். பெரும்பாணர்களின் தலைமையில், மிகப்பெரும் வறுமையை போக்க, மாபெரும் அரசர்களை தேடி பயணிக்கின்றனர் பாணர்களும், அவர்களின் பண்களை உயிரோட்டமாக நிலைபெறச் செய்யும் கூத்தர்களும். அவர்களின் பயணம் என்னவோ ஓர் அரசனைத் தேடித்தான். ஆனால் வறும���யின் பிடி எப்போதும் துயரத்தையும், சொல்லொனாத துரதிஷ்டத்தின் சாயலையும் எப்போதும் அதன் பிடியின் இருப்பவர் மீது திணித்த படியே இருக்கும்.
அப்படிதான் இவர்களின் வாழ்க்கையும், இவர்களின் பயணமும் அமைகிறது. இப்படிப்பட்ட புத்தகங்களை வாசிக்கும் பொழுது எனக்கு தோன்றுவதெல்லாம், தமிழின் இலக்கியங்களை இன்னும் வாசிக்க வேண்டும் அல்லது வாசிக்கத்துவங்க வேண்டுமென்பது மட்டுமே நினைவில் ஓடிக்கொண்டே இருக்கிறது. மிகப்பெரிய களஞ்சியம் அது என்பது மட்டும் விளங்குகிறது. தமிழின் இலக்கியங்கள் சங்ககால இலக்கியம், நீதி இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம் என்று பிரிக்கப்பட்டு இருப்பதாக மேலோட்டமாக தேடினால் தெரிகிறது. அரசர்களை பாடும் இலக்கியங்களாகவும், பகுதிகளை விளக்கி பாடப்பட்ட இலக்கியங்களாகவும் பல இலக்கியங்கள் கொட்டி கிடப்பதை உணரமுடிகிறது. செவ்விலக்கியங்கள் என்றும் சில சொல்லாடல் இருப்பது தெரிகிறது. இவை என்ன என்பதை தேடி கண்டுபிடித்து வாசிக்க ஆவல் எழாமல் இப்புத்தகத்தை கடந்து செல்ல முடியவில்லை.
நன்னனை தேடிப் பயணப்பட்ட பாணர்களும் அவர்களுடன் சேர்ந்தே பயணித்த கூத்தர்களும், கூடவே தங்களை விட்டு நெடு நாட்கள் முன்பு பிரிந்து சென்ற மயிலனையும் கண்டுபிடிக்கவும் இந்த பயணம் உதவும் என்று மனதை சரி செய்து கொண்டு வெகு நாள் வாழ்ந்த இடத்தை விட்டு நகர்கின்றனர். இப்படியான ஏதோ ஒரு அங்கலாய்ப்பை எப்போதும் சுமந்து கொண்டு தானே இடம்பெயர்வுகள் நிகழ்கின்றன. அந்த மக்கள் கூட்டத்தை வழி நடத்தும் பெரும்பாணனின் வலது கையாக இருப்பவர் தான் கொலும்பன்.
கொலும்பனின் குழந்தைகள் தான் மயிலன், உலகன், சித்திரை மற்றும் சீரை. வறுமையை மட்டுமே தாங்கிய ஆனால் சிறிதளவும் அதை வெளிப்படுத்தாத விழிகள் கொண்ட கொலும்பனின் மனைவி நெல்லக்கிளி. இவர்களோடு இப்பயணத்தில் வந்து செல்லும் உழவர்கள், அரசர்கள் நன்னன், சேர அரசர்கள் நார்முடிச்சேரல் ஆயினன், அதியமான் நெடுமானஞ்சி, வேள்பாரி , பெரும்புலவர்களான பரணர், அவ்வை மற்றும் பாரி, பெண் தெய்வமாக இருக்கும் மலைக்கோவில் அம்மன், அந்த கோவிலின் முன்கதை, மகீரன் அனைவரும் மனதில் நின்று விடுகின்றனர்.
ஆதித்தமிழ் வாழ்வை முன் எடுத்து வைக்கும் வண்ணமான விளக்கங்கள் இப்புத்தகம் முழுதும் காண முடிந்தது.
"வடக்கே வேங்கடமலை, தெற்கே குமரிமுனை, கிழக்கும் மேற்கும் பெருங்கடல்கள். இவற்றிற்கிடையே மலைகளும், சமவெளிகளும், காடுகளும், குன்றுகளும், விளைநிலங்களும், வயல்களும், பாலைவனங்களும், நதிக்கரைகளும், கடற்கரைகளுமாகப் பலப்பல உயிர் வாழிடங்கள். எல்லைகளுக்குள் அடங்காத பெரிதும் சிறிதுமான நாடுகள். வேட்டையாடும் எயினரும், குறவரும், நிலம் உழும் உழவரும், ஆநிரை மேய்க்கும் ஆயரும், கொள்ளையர்கள் எனினும் போராளிகளான மறவரும், உப்பு விளைவிக்கும் உமணரும், மீன்பிடிக்கும்
பரதவரும் பிறரும் அந்தந்த இடங்களில் அவர்களின் தொழில்களில் ஈடுபட்டிருந்தனர்."
இப்படி சென்று கொண்டிருக்கும் பயணத்தில் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து சிறிது நாட்கள் கனிந்த உள்ளத்துடன் உதவிய உழவர்கள் உருவாக்கிய நறும்பிழியின் கதை இது.
"பலவகைகளில் தயாரிக்கப்படுகிறது. நாங்கள் தயாரிப்பதைச் சொல்கிறேன். ஊறவைத்த அரிசியை உருளைகளாக்கி வாயகன்ற பாத்திரங்களிலிட்டு காய வைப்போம். இரவும் பகலும் இரு வேளைகளிலும் நறுமணம் கமழும் பலவகை இலைகளை அதில் சேர்ப்போம். தீப்போல் ஒளிரும் தாதிரிப்பூவையும், வெல்லத்தையும் கூடவே சேர்ப்போம். இவற்றை இருவேளையும் கைகளால் நன்றாகக் கலக்க வேண்டும். பிறகு வாய் மூடிக் கட்டிய மண்குடங்களில் நீண்ட காலத்திற்கு ஊற வைப்போம். பக்குவமாகும்போது கொதிநீரில் வேகவைத்த பனைநாரினாலான வடிக்கட்டிகளில் வடித்தெடுப்போம். "
நறும்பிழி - கள்!!!
அரசனை எப்போதும் புகழ மட்டும் செய்வதா ஒரு புலவரின் தலையாய கடமை? என்ற கேள்விகள் வைக்கப்பட்டு அதற்கான விடைகளையும் அல்லது அதற்கான விவரிப்புகளையும் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். எப்போதும் வெற்றி பெற்றவரின் புகழையே பாடும் சரித்திரங்கள் என்ற ஒற்றை வரி நினைவில் வந்து செல்வதை தடுக்க முடியவில்லை. மிகவும் மகிழ்ந்து வாசித்தேன். படித்துப்பாருங்கள்...