மரபு சார்ந்த சமூக அமைப்புகள் அருகி வரும் காலத்தில், அந்த சமூகத்தின் வாழ்வும், அமைப்பும் ஆவணப்படுத்துதல் அவசியம். அப்படி பதிவு செய்த அந்த மரபுகளின் இருப்பை வெகுசன இலக்கியத்தின் வழியாக காட்சிப்படுத்துதல் அதனினும் மிக மிக அவசியம். மாறி வரும் இக்காலத்தில் இடையர் வாழ்வு என்பது வெறும் தொழில் சார்ந்த, விவசாயத்தின் துணை தொழிலாகவோ அல்லது நகரவாழ்வின் விளிம்பு நிலையாகவோ மட்டுமே இதுவரை காட்சிப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அதை மீறி, ஒரு கால்நடை வளர்ப்பு சார்ந்த, சாதிகளுடன், சாதிகளின் தாக்கம் இன்றி வாழ்ந்திருக்கும் ஒரு சமூகம் ஒரு ஆச்சரியம்; அதை இடையர் என்று கூறுவது அதை ஒரு வட்டத்துக்குள் மரபாக அடைத்துவிடக்கூடிய ஆபத்துள்ளது. மாடு வளர்ப்பில் வாழ்வியல் பிணைந்திருக்கும் ஒரு சமூகம், அதன் வாழ்வோட்டத்தை பின்னி படர்ந்திருக்கும் படைப்பு இது.
ஆரம்பத்தில், அந்த சமூகத்தின் ஒரு விடலை வாலிபனின் (உச்சிமாகாளி)வழியே நகரும் கதை, அந்த ஒட்டு மொத்த சமூகத்தின் மனிதர்களை, அவர்களின் வாழ்வை, அவர்களுக்குள் இருக்கும் உறவுகளை, அதன் சிக்கல்களை, தொடர் கண்ணியாக, உச்சிமாகாளியின் பார்வை மற்றும் அனுபவத்தின் வழியே விரியும் போது ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு கிடையில் இருக்கும் பசு, கன்று, சண்டிக்காளை போன்றே அவர்கள் சமூகமத்தின் கூறுகளும் விரிவது சுவாரசியம். உச்சமாக குள்ராட்டியில் விரியும் கதைக்களம், அந்த சமுகம் எப்படி அவர்களின் கிடையை சரி செய்வது போலவே சரி செய்துகொள்கிறது என்பதை ஒரு நுட்பமான இழையாய் அழுத்தமாக பதியச்செய்வது விரிந்து வியக்கவைக்கிறது.