புயலிலே ஒரு தோணி:
இப்போதெல்லாம் புதிய எழுத்தாளர்களை அதிகம் தேடி படிக்கிறேன். அந்த வரிசையில் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகம் ஆன பா.சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி நாவலை வாசித்தேன். இரு நாவல்கள் எழுதியுள்ளார். இன்னொன்று கடலுக்கு அப்பால். இவர் எழுதிய நாவல்கள் இரண்டுமே தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்து சென்று 1940களில் இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறை, அன்றைய சூழல், போர்கால அல்லல்கள் என்று பயணிக்கிறது.
சரி புயலிலே ஒரு தோணி நாவலின் கதாநாயகன் பாண்டியன் என்ற இளைஞன். சின்னமங்கலத்தில் பிறந்த பாண்டியன் வேலை நிமித்தம், இந்தோனேசியாவின் மெடான் நகரத்தில் வேலை பார்க்கின்ற தருணம், இரண்டாம் உலகப்போர் தலை தூக்கி உலகின் வெகுவான இடங்களை சின்னாபின்னம் ஆக்கி கொண்டிருந்த நேரம். பாண்டியன், மாணிக்கம், தங்கையா என்று மூன்று நண்பர்கள் சேர்ந்து இருக்கின்ற தருணங்கள் வெகுவாக கவர்கிறது.
இந்த புத்தகம் உண்மையை உரைப்பின், புயலில் ஆடுகின்ற தோணி போன்றே பயணிக்கிறது. ஒரு புறம் போரின் கொடுமைகளை உணர்த்தும் முதல் சில அத்தியாயங்கள், பின்பு பாண்டியன் தன நண்பர்கள் பலரோடு நிகழ்த்தும் தமிழ் மீதான விமர்சன உரைகள், ஆயிஷா என்ற வேசையின் மீதிருந்த அன்பு, இந்திய தேசிய ராணுவத்தின் அங்கமாக திகழ்ந்து நேதாஜிக்காக நடத்தும் வீர செயல், தனக்கான நேரத்தை, தனது வாழ்வின் அசைபோடுதலை எப்போதும் மற்றவர்களிடம் சொல்லாமல், கடலின் காற்றோசையோடும், ரிக்சாவில் பயணிக்கும் பொழுதும் எண்ணி திளைத்தல், இறுதியில் இந்தோனேசிய விடுதலை படையில் அங்கம் வகித்தல் என்று அதீத வேகத்திலும், ஆர்பாட்டத்திலுமே பயணிக்கிறது.
உண்மையில் பாண்டியனின் மனமே இந்த புத்தகத்தின் கதாநாயகன் என்று உணர்ந்தேன். பாண்டியனை ஒரு தீர்க்கதரிசியாக, சமூக பொறுப்பாளனாக, நண்பர்களை அரவணைக்கும் அன்புடையவனாக, தமிழை விமர்சித்து அதன் மூலம் உண்மை உரைக்கும் தமிழ் பற்றாளனாக, அடிமை முறைகளை உடைத்தெறிய துடிக்கும் வீரனாக, புரட்சியாளனாக, பல பெண்களின் உறவுக்காரனாக, சமூகத்தின் கட்டமைப்புகளை எளிதில் தூக்கி எறியும் சுய சிந்தனையாளனாக, கோபக்காரனாக, வாழ்வின் மீது அதீத பற்றாளனாக, சின்னமங்கலத்தின் வாழ்வை மிக வாஞ்சையுடன் நினைவு கொள்ளும் மனிதனாக சிங்காரம் சித்தரித்துள்ளார்.
என்னடா, 1000 முறை பாண்டியன், பாண்டியன் என்றே சொல்லி கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? நிறைய பேர் வருகிறார்கள் இந்த புயலில் தத்தளிக்கும் தொனியில், ஆனால் எல்லாமுமே, எல்லோருமே பாண்டியனை சுற்றித்தான் நடக்கிறது, நடக்கிறார்கள். ஆதலினால் தான் என்னுடைய வாசிப்பனுபவமும் அவ்வாறே இருக்கிறது. செட்டியார்களின் வட்டி கடையில் தொடங்கி, சாய்புகளின் கடைகள், சிற்றுண்டி விடுதிகள் என்று பல நுணுக்கமான விஷயங்கள் புத்தகம் முழுக்க பேசப்பட்டு இருக்கிறது. எவ்வாறு மெடான் நகர் வா���் தமிழ் மக்கள் வேலை செயகிறார்கள், மலேயா நாட்டின் பினாங்கு நகரம் எப்படி இருந்தது, ஜப்பானிய, ஆங்கிலேய, டச்சு படைகளின் ஆதிக்கங்கள் என்று நாவல் முழுக்க அந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை ஆசிரியர் விளக்கியுள்ளார்.
" புல்லாந்தரையில் பிறந்தமேனிக் கோலத்தில், மல்லாந்த உருவங்கள், சுற்றிலும் வேற்று மானிடர். சூரியனின் பட்டப் பகலில் ஊரறிய உலகறியக் காதறியக் கண்ணரியகே கட்டாய உடலாட்டு...
"ஆயயவோவ்! ஓ மரியா! ஆயயவோவ்"
பகலவன் பார்த்திருந்தான். நிலநங்கை சுமந்திருந்தாள்; ஊரார் உற்று நோக்கிக் களித்து நின்றனர்.
பாண்டியன் முகத்தை திருப்பினான். ஆ... "மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால் .."
"பாண்டி! தங்கையா இடக்கையால் முதுகைத் தொட்டான். இப்படிக் காட்சியை இங்கு பார்ப்போம் என்று கனவிலாவது நினைத்திருக்க முடியுமா?"
"எல்லாம் இடங்கால வாய்ப்புகளின் விளைவு. கிளம்பலாம்".
எப்போதும் போர்களின் கோரக் கைகள் பாய்ந்தோடி பிடிப்பது பெண்களின் கொத்து முடியைத்தான். எல்லாப் பேரிலக்கியங்களும், உண்மை நிகழ்வும் இப்படியே இதை தான் சொல்கிறது. பெண்களும் சிறார்களுமே போர்க்களத்தின் முத்திரைகளாய் எப்போதும் நிற்கின்றனர். Kite runner என்ற புத்தகத்தின் வரிகள்: ஆப்கானிஸ்தான் முழுதும் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் எங்கேயும் குழந்தைப்பருவங்கள் தான் இல்லை.
பாண்டியனின் இளவயது சின்னமங்கலத்து கதைகள், அப்படியே ஒரு கிராமத்து சந்தையின் அக்கால நிலையை கண் முன்னே நிறுத்தி செல்கிறது. மொச்சை கடை, வெள்ளை சீலை, விபூதி பட்டை, இட்லி, மல்லிக் காப்பி, பூக்கள், பொடி, வெற்றிலை, அயல் சிகிரெட்டு, குரங்கு மார்க் மண்ணெண்ணெய், தாராவரம் போயிலை என்று கலகலக்கிறது. இந்த பகுதியில் வரும் பாடல்கள் மனதை நெருடி செல்கிறது. இவை அனைத்தும் பாண்டியன் தொங்கானில் (சிறு படகு) பினாங்கு நகர் நோக்கி செல்லும் பொழுந்தினில் மனதில் அசைபோடுபவை.
டாமி ரக துப்பாக்கிகள், எறி குண்டுகள், கெம்பித்தாய் மேஜரின் கதை, சுந்தரத்தின் துரோகம், தமிழின் வரலாறு முக்கியம்தான், எனினும் உணர்வுகளை தாண்டி அவை இன்றும் நம்மை வழி நடத்துகிறதா? என்பதனை தர்க்கங்கள், ஆயிரம் கலகங்கள் செய்தாலும், பல எதிர் சமூக கருத்தில் நின்றாலும், பாண்டியன் நாவல் முழுதும் தன் கருத்தின் ஆழத்தை, அதன் நியாயத்தை சொல்லி கொண்டே கதை முடிகிறது. எனக்கு இது இரு புது வாசிப்பனுபவம். படித்துப் பாருங்கள்...