நாவல் நிகழும் நிலத்தின் பண்புகளை மாற்றவில்லை. பண்பாட்டு மரபைச் சிதைக்கவில்லை. நிறைய வரலாறு பேசினாலும் இது சமகால நாவல். சமகாலத்தில் எழுப்பப்பட்ட சில கேள்விகளின் முடிச்சுகளைத் தேடிய கலைப்பயணம்.நாடகக் காதல் என்று சொல்கிறார்கள் இல்லையா? நான் சில காதல் நாடகங்களை உருவாக்கியிருக்கிறேன்.
குற்ற சம்பவம் நிகழ்ந்தேறும் போது அது தனித்து ஒருவரை மட்டும் பாதிப்பதில்லை அதன் தொடர்ச்சியாகப் பலரின் வாழ்வையே புரட்டி போட்டு அவர்களின் திசைகளையே மாற்றியமைத்துவிடுகிறது.
இக்கதை நடைபெறும் காலகட்டத்தை நேரடியாகச் சொல்லாமல் எம்ஜிஆர் உடல்நிலை பாதிப்பில் இருப்பதைக் கேள்விப்பட்டுக் கதாபாத்திரங்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதிலே எந்த ஆண்டு என்று நாம் முடிவெடுக்கலாம்.
சிறுவயதில் நகைக்காகக் கடத்தப்பட்டுத் தனித்துப் போன குழந்தையைத் தன் பிள்ளையாகவே வளர்த்துத் தொழிலில் இறக்கி பெரியவனானதும் தன் குடும்பப் பாரத்தை அவனின் மீது சுமத்தியதை விரும்பி ஏற்கும் ஏகாம்பர முதலியார் தன் பல வருட உழைப்பின் பலனாகப் பஜாரில் ஒரு துணிக்கடையை ஆரம்பித்து மக்களின் செல்வாக்கையும் பெறுகிறார்.
ஏகாம்பர முதலியார் கடையில் இருக்கும் திண்ணையே பல விஷயங்களை அறிந்து கொள்ளும் இடமாகிறது.பலரும் அங்கே அமர்ந்து அரட்டையில் ஈடுபடுகின்றனர் அதன் மூலம் ஏகாம்பர முதலியாருக்கு நாட்டு நடப்பு தெரிய வருகிறது.
திண்ணை அரட்டையில் ஈடுபடும் ஒருவரில் கொடக்கோனாரும் ஒருவர்.
தீபாவளி நாளுக்கான வியபாரத்தில் தொடங்கும் கதை அதன் கதாபாத்திரங்களின் முன்பான காலகட்டத்தையும் விவரித்து அம்மண்ணின் நிலவரத்தையும் சொல்லிக் கொண்டே சென்று கொடக்கோனார் கொலையுடன் கதையின் முடிவு நெருங்குகிறது.
தன் கடையின் வாசலில் நிகழ்ந்த கொடக்கோனார் கொலையால் தன் வாழ்வாதாரத்தையே இழந்த ஏகாம்பர முதலியார் தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஓர் ஏற்பாடு செய்துவிட்டு தன் உயிரையும் மனம் விரும்பிய வழியில் முடித்துக் கொள்கிறார்.
பலப் பல கதாபாத்திரங்கள் அதன் வழியே அக்கரிசல் மண்ணின் இயல்பும் மனிதர்களின் குணங்களையும் அவர்களின் கோரமுகத்தையும் தனக்காக என்று அலங்காரமாக அவர்கள் செய்யும் செய்கையும் அதனால் உண்டாகும் பாதிப்புகள் என்று மனிதர்களைப் பற்றிய கதையாகச் சென்று முடிகிறது.
ஆணவக் கொலையின் வெறி ஆண்டுகள் கடந்தும் ஆற்றுப்படாமல் தன் வெம்மையைத் தாங்கிக் கொண்டே அலைகிறது அதன் காரணமாகவே கொடைக்கோனார் வாழ்வு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.
மாற்றத்தின் விளிம்பில் நிற்கும் கரிசல் நகரத்தை ஒரு ஜவுளிக்கடை குடும்பத்தின் வழி சொல்லும் நாவல். நகர மாற்றமும் அதன் வழி நிகழும் வணிக வீழ்ச்சியை மண்ணோடும் மனிதர்களோடும் வரலாற்றோடும் பிணைத்து புதிர்வழியில் எழுதப்பட்ட சுவாரசியமான நாவல்.