எனக்கே சற்று வெட்கமாக இருக்கிறது, ஏன் இந்த புத்தகத்தை இவ்வளவு நாள் வாசிக்காமல் தவிர்த்து வந்தோம் என்று நினைத்துப்பார்த்து . நகைப்பு கூட வருகிறது , எதனால் இந்த ஒவ்வாமை இத்தனை நாளாய் என்று .
சிறுவயதில் அம்புலிமாமா, காமிக்ஸுகள் என்று ஆரம்பித்து மெது மெதுவாக ராஜேஷ்குமார் , சுபா என்று சென்று, சுஜாதா பாலகுமாரன் என்றெல்லாம் வாசிக்க ஆரம்பித்த பொழுத்தில், தமிழில் தற்கால இலக்கியம் என்று கேள்விப்பட்டால் ஒரு வித நடுக்கம் வந்துவிடும். அதற்கு ஒரு காரணம் , விடுமுறையில் மட்டும் அன்னுரில் சென்று புத்தகங்களை தேடும் அரசு நூலகம் . அங்கே கிடைத்த இலக்கிய புத்தகங்களை , வீட்டில் உள்ள பெருசுகள் ( சுமார் 10 வருடங்கள் தான் மூத்த ) " அயே , எல்லாம் அழுமூஞ்சி கதைங்க " என்று முத்திரை குத்தி தமிழ்வாணனோ , கல்கியோ, இல்லை குறைந்தபட்சம் சாண்டில்யனோ தேடி பார்க்க அனுப்பிவைத்ததும் இருக்கலாம் . மேலும் அவ்வகை புத்தகங்கள் , கெட்டி அட்டையுடன் , தூசி படிந்த இடத்தில் வைத்துவிட்டு அந்தப்பக்கம் போனாலே , கண்ணை உருட்டும் கட்டுமுட்டான நூலகராகக் கூட இருக்கலாம் .
அதிலும் இந்த "ஒரு புளிய மரத்தின் கதை " தலைப்பைப் படித்தவுடன், ஒரு வித பயத்தை அளித்தது. அதற்கு நான் தொடர்ந்து கேட்டு வந்த புளியமரத்து பேய் பற்றிய கதைகள் சத்தியமாக இல்லை என நினைக்கிறேன் . புளியமரத்தை வைத்து , அதன் இலை , பூ, காய் , என்று கணகடுசாக எதையாவது இலக்கியம் என்று எழுதிவைத்திருப்பார்களோ என்று ஒரு பெருத்த சந்தேகம் தான் காரணம் . எப்படியிருந்தாலும், இருக்கும் ஒரு கார்டில் இரண்டு புத்தகம் தான் எடுக்க முடியும். அதில் எதாவது ஒன்றாவது நான் சுவாரசியமாக படிக்க வேண்டியதாக இருக்கவேண்டும் . இதில் நான் போய், ஏன் புளி , தழை என்று விழவேண்டும் என்று சுய பாதுகாப்பு எண்ணம் தான். பத்து வயசு பையனின் இடத்தில் இது தப்பா, நீங்களே சொல்லுங்கள் ?
வேடிக்கை என்னவென்றால், அந்த நினைவின் எச்சம் தான் இதுவரை இருந்து இதை நாம் வாசிக்காமல் இருந்து விட்டோமோ என்று ஆச்சரியமாக இருக்கிறது .
சிலவாரங்களுக்கு முன் கோவைக்கு ஒரு குடும்ப நிகழ்வுக்கு சென்றபோது , கிடைத்த நேரத்தில் காந்திபுரத்தில் உள்ள விஜயா பதிப்பக கடையில் உள்ள ராஜ்குமார் அண்ணன் தேர்ந்து எடுத்துக்கொடுத்த புத்தகங்களில் இதுவும் ஒன்று . அவருடைய தேர்வுகளில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை. சிறு வயதில் , வடகோவை சிந்தாமணி புத்தகக் கடைக்கு சிறுவாடு சேர்த்தது , ஓடிப்போய் வாங்கும் காலம் முதல் அவர் எனக்கு பரிச்சயம் . அப்போதிருந்து எனக்கான புத்தகத்தை எடுத்து தனியாக வைத்து வாங்கத்தருபவர் என்பதும் கூட இருக்கலாம் .
சிலநாட்களுக்கு முன் அதே தயக்கத்துடன் வாசிக்க ஆரம்பித்து , தொடர்ந்து பிரமித்து , நேரம் கிடைக்கு போதெல்லாம் பக்கங்களை புரட்டி புரட்டி வாசிக்க வைத்த புத்தகம் இது . இதன் ஆசிரியர் சுந்தர ராமசாமியைப் பற்றி நான் புதிதாக சொல்ல ஏதும் இல்லை . அவருடைய காலச்சுவடு இதழ் வாசகனாக இருந்தும் , அவருடைய பதிப்பக புத்தகங்களை தேடி வாங்கி வாசித்திருந்தாலும் , அவருடைய இந்த புத்தகத்தை நான் ஏன் தவிர்த்தேன் என்பது வேடிக்கை தான் .
ஆங்கிலத்தில் எட்வர்ட் ரூத்தர்போர்ட் என்ற எழுத்தாளர் , ஒரு இடத்தை அடையாளமாக வைத்து, அந்தப் பகுதியின் வரலாற்றை, வரலாற்றின் நிகழ்வுகளை, அந்த சமூகத்தை, கால வெளியில் குறுக்கு வெட்டாக சுவை பட எழுதுவதில் வல்லவர் . அவருக்கு முன்னோடியாக ஜேம்ஸ் மிச்செனர் என்ற எழுத்தாளர் மிக பிரம்மாண்டமான அளவில் படைப்பை உருவாக்குவதில் வல்லவர் . உதாரணமாக ரூத்தர்போர்ட்டின், சாரும் (SARUM ) என்ற புத்தகம், இங்கிலாந்தின் சாலிஸ்பரி பகுதியை பற்றியது. அதை வாசிப்பவர்களுக்கு அது தொட்டு வரும் காலங்களின், சமூக அரசியல் வரலாறு பற்றிய சுவாரசியமான ஒரு வாசிப்பு அனுபவம் கிட்டும் .
அதேபோல் ஒரு அனுபவத்தை 50-60களில் படைக்கப்பட்ட இந்த புத்தகம் எனக்கு அளித்தது . அவற்றை எல்லாம் விட இந்த புத்தகத்தில் மனிதர்கள் எனக்கு மிக நெருக்கமாக, ஈரத்துடன் உலாவியதாக தோன்றுகிறது. வாசித்து முடித்தவுடன், ஒரு பிரமிப்பும் நிறைவும் ஏற்படுவது உண்மை . ஒரு நல்ல இலக்கியத்துக்கு பக்கங்கள் முக்கியம் இல்லை. இருக்கும் பக்கங்கள் வாசிப்பவரின் மனதோடு எவ்வாறு உரையாடுகிறது என்பதும், என்ன உணர்வை ஏற்படுத்துகிறது என்பதும், தான் முக்கியம். அந்த வகையில் இது ஒரு முழுமையான புத்தகம்.
ஆசான் , தாமு , காதர் மற்றும் கடலைத்தாத்தா என்று அனைவரோடும் வாழ்த்து முடித்த அனுபவம், வாசித்தது முடித்தவுடன் ஒரு பெருமூச்சை வரவைத்துவிட்டது .