தமிழின் முதன்மையான கதைசொல்லிகளுள் ஒருவர் அ.முத்துலிங்கம். இத்தொகுப்பிலுள்ள 20 சிறுகதைகளில் அநேகமானவை உண்மைச் சம்பவங்களிலிருந்து கலையம்சத்துடன் புனையப்பட்டவை. இவற்றை படைக்கும் போது தனக்கென ஆகிவந்த ஒரு சொல் முறையை கையாண்டு வாசகரை வசியம் செய்துவிடுகிறார். இந்த உத்தியை இவரளவு கடைப்பிடிப்பவர்கள் வேறு எவருமில்லை. அதனாலேயே பெரும்பாலும் சிறுபத்திரிகைகளில் தீவிரத் தன்மையுடன் எழுதிவந்த போதிலும் வெகுசன எழுத்தாளருக்குரிய புகழையும், வாசக அங்கீகாரத்தையும் இவர் பெற்றிருக்கிறார். பல்வேறு நிலப்பரப்புகள், மாறுபட்ட மனிதர்கள், பரிச்சயமற்ற கலாச்சாரச் சூழல்களினூடாக நிகழும் இவருடைய கதைகளின் ஆதாரமான உணர்வு அங்கதம். எனினும், அதனடியில் விலக்க முடியாத நிழல் போல மானிட உணர்வுகளின் ஏக்கமும் நெகிழ்வும் துயரமும் கண்ணீரும் அழியாத சித்திரங்களாய் விரவிக் கிடக்கின்றன. உலகத்து மேடையில் மனிதத் தொகையின் விநோதமான வாழ்வியல் சித்திரங்களால் நெய்த அழகிய கம்பளமாக இத்தொகுப்பை உருவகித்துக்கொள்ளலாம்
Appadurai Muttulingam (Tamil அ. முத்துலிங்கம்) (born 19 January 1937) is a Sri Lankan Tamil author and essayist. His short stories in Tamil have received critical acclaim and won awards in both India and Sri Lanka.
அகதிகளின் வாழ்வையும் அவர்கள் எதிர்கொள்ளும் பேரிடர்களையும் விவரிக்கிறது இந்த சிறுகதை தொகுப்பு. மனதை தொட்ட, பாதித்த இடங்கள் மற்றும் கதைகள் பல. - ஒரு போராளியாகவே பயத்திலும் பலத்த எச்சரிக்கையுடனும் வாழ்ந்த ஒருவன் திடீர் என்று அச்சூழலே அறிந்திடாத ஒரு சூழலில் வாழும் போது,ஒரு அமைதியான வாழ்க்கையை, "ஓய்வு நாளில் என்ன செய்வீர்கள்" போன்ற இயல்பான கேள்வியை அதிர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள முடியாமல் பரிதவிப்பதையும், பின்னர் அந்த மாற்று உலகத்தில் வாழ முடியாமல் கடைசியில் தற்கொலை செய்வதையும் புரியும்படி சொல்கிறது "நிலம் என்னும் நல்லாள்" சிறுகதை. "கையிலே சுத்தியல் இருந்தால் எல்லாப் பிரச்சினையும் ஆணி போலவே தெரியும்" என்பது என்னை சிந்திக்க வைத்த வரிகள் - புத்தகத்தின் தலைப்பை கொண்ட "பிள்ளைக் கடத்தல்காரன்" கதைக்கு, நாம் செய்யும் உதவி தான் முக்கியமே தவிர, அதைச் செய்யும் நாம் முக்கியம் இல்லை என்ற கருத்தை மிக ஆழமாக உணர்த்தும் "ஆதி பண்பு"கதை சற்றும் சளைத்ததல்ல. புத்தகத்தில் எனக்குப் பிடித்த கதை. -"உலகம் முழுக்க மூடர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அகப்படுவது எத்தனை சிரமமான விஷயம்" என்பது எனக்குப் பிடித்த மற்றொரு வாசகம். - சின்ன சம்பவம், கடவுச்சொல், கடவுளை ஆசிரியப்படுத்து ஆகியவை எனக்குப் பிடித்த மற்ற கதைகள்.
சில கதைகள் புரியவில்லை, படிக்கும் ஆர்வத்தை தூண்டவில்லை. ஆதலால் பெரிய புதினங்களைப் படித்த காலத்தை விட அதிக காலம் தேவைப்பட்டது இப்புத்தகத்தை படுத்து முடிக்க. எனவே மூன்று நட்சத்திரங்கள்..
எழுத்தாளர் அவர்களின் பரந்துபட்ட நாடுகளில் வாழ்ந்த வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்படட சிறுகதை தொகுப்பு . சில கதைகள் மிக சிறப்பாக உள்ளது . நிலம் என்னும் நல்லாள் கதை அருமை .