இந்தியா: காந்திக்கு பின் (India After Gandhi) என்ற புத்தகத்தில், The Rise of Regional Politics என்ற தலைப்பின்கீழ் இந்தியாவின் முதல் மாநில கட்சியாக ஆட்சி அமைத்த திராவிட முன்னேற்ற கழகம் பற்றி ஒரு delhi-centric பார்வையில் எழுதியிருப்பார் ராமச்சந்திர குஹா. Delhi-centric யாதெனில், திராவிடர் கழகம் மேற்கொண்ட அரசியல் மற்றும் சமுதாய சீர்திருத்த முன்னேற்றங்களை முற்றிலும் புறந்தள்ளி, அன்றைய தமிழக மக்கள் ஏற்றுக்கொண்ட சுயமரியாதை, மொழிக்கு முக்கியத்துவம் மற்றும் அரசியல் தன்னாட்சி போன்ற கோட்பாடுகளை ஒரு குறுகிய மனப் பாங்காக கருதுவது தான். அத்துடன் இல்லாமல், இத்தகைய கோட்பாடுகள் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதாக சித்தரிப்பதும் தான் delhi-centric approach. அவித அணுகுமுறையை எதிர்த்து அன்றே சமரசம் இன்றி சண்டை செய்தவர் Mr. அண்ணாதுரை B.A (Hons) M.A. Economics & Political Science.
அண்ணா என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழர்களால் இன்றும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டுருக்கிறது. எதையும் தாங்கும் இதயமென வங்கக்கடலோரம் துயில் கொண்டிருக்கும் அந்த மாமனிதனின் வாழ்க்கையை 180 பக்கங்களில் சுறுக்கிவிடுவது அநீதி என்றாலும், அண்ணாவை பற்றி தெரிந்து கொள்ள ஒரு தொடக்கநிலை புத்தகமாக இப்புத்தகத்தை கட்டாயம் படிக்கவேண்டும்.
சென்ற ஆண்டு வீடடங்கு நாட்களில் நான் மாபெரும் தமிழ் கனவு புத்தகத்தை படித்தேன். பெரும்பாலும் delhi-centric ஆங்கில அரசியல் மற்றும் வரலாறு நூல்களையே படித்த எனக்கு அந்த புத்தகம் தான் தமிழில் மேலும் பல அரசியல் மற்றும் வரலாறு புத்தககங்கள் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. காரணம், அண்ணா எனும் சகாப்தம் தமிழ் நாட்டின் அரசியலை செதுக்கிய ஒன்று. இந்தியாவின் ஜனநாயக பண்புகளை பாதுகாத்தவர் என்று நேருவை குறிப்பிடுவதுண்டு. அதேபோல், தமிழ் மக்களை ஜனநாயகப்படுத்தியதில் அண்ணாவின் பங்கு பெரிது. அன்றுவரை மேல் தட்டு வர்க்கத்தினரிடம் இருந்த அதிகாரத்தை சாமானியனுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் பகிர்ந்தளித்தவர் அண்ணா.
பெரியாருடன் அண்ணாவிற்கு தனிநபர் வேறுபாடு மற்றும் அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கை முரண்கள் என்றும் இருந்ததில்லை. பெரியார் வகுத்த கொள்கைகளுக்கு சட்ட வடிவம் கொடுத்தவர் அண்ணா. சி.என். அண்ணாதுரை சி.எம். அண்ணாதுரை ஆகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்ய முடிந்தாலும், அண்ணா அந்த இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனைகளோ பல. சுயமரியாதை திருமணங்களை சட்டப்படி அங்கீகரிக்கச்செய்தது , மே தினத்தை பொது விடுமுறையாக அறிவித்தது, அரிசி தட்டுப்பாட்டை ஒழித்தது, தமிழ் நாடு பெயர் சூட்டியது என அண்ணாவின் ஆட்சி ஒரு நிறைவான ஆட்சியாகவே அமைந்தது.
'ஜனநாயகம் என்பது எண்ணிக்கையின் அடிப்படியில் அமைவது அல்ல. அது கருத்துக்களின் அடிப்படையில் அமைவது. என் எதிர்தரப்பு சொற்ப எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களின் கருத்துக்களின் நியாயத்தின் பொருட்டு முடிவு அமைவது தான் ஜனநாயகம்' என்று காந்தி கூறுவார். அவ்வாறாக அண்ணா சாதுர்யமான பேச்சால் தர்க்கபூர்வமாக எதிர்கொண்டு தன் கருத்து சிறுபான்மையில் உள்ளதை உணர்ந்தும் எதிர்க்கருத்துடையவரை தன் வயப்படுத்தும் உத்திக் கொண்டவர். இதனை அவரது பிரிவினை தடுப்பு சட்ட மசோதாவிற்கு எதிரான வாதத்தில் காணலாம். தனிநாடு கோரிக்கையை இந்திய இறையாண்மைக்குள் ‘மாநில சுயாட்சி’ என்று காலத்திற்கேற்ப மாற்றி பொருத்தியது, பெரியாரின் தீவிர திராவிட கருத்துகளை populist வழிநடைகள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தது என்று இவர் ஏன் பேரறிஞர் என்று அழைக்கப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள இந்த புத்தகத்தை அனைவரும் படிக்கவேண்டும்.