S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் சிறுகதை தொகுப்பு தேசாந்திரி பதிப்பகம் 167 பக்கங்கள்
ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு வகையில் ஒரு விஞ்ஞானி தான் . ஒரு விஞ்ஞானி எத்தனை முறை தோற்றாலும் , ஜெயித்தாலும் தன் கண்டுபிடிப்புக்கான முயற்சியை மட்டும் தன் உயிருள்ளவரை நிறுத்தமாட்டான் . அதே போல் எழுத்தாளன் தான் எழுதும் அனைத்து கதைகளும் சிறந்த கதைகளாகிவிடுவதில்லை என்பது தெரிந்தும் அந்த ஒரு நல்ல சிறந்த கதையை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்கிறான் . இந்த முயற்சியில் வெற்றிகளை விட தோல்விகளே அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்கிறது . சொல்லப்போனால் வெற்றி ஒருவருக்கு ஒரு சலிப்பை கொடுத்துவிடுகிறது , ஒரு நிறைவை கொடுத்துவிடுகிறது , அந்த பயணத்திற்கு ஒரு முடிவை கொடுத்துவிடுகிறது . ஆனால் , தோல்விகளோ தங்கள் முயற்சிகளை சரிபார்க்கும் ஒரு எந்திரமாக மாறிவிடுகிறது , தேடலை விரிவுபடுத்தி , புதிய பாதைகளை தெளிவுபடுத்துகிறது . இதனை தவறாமல் தமிழ் நவீன இலக்கிய உலகில் நிகழ்த்திக்காட்டுபவர் எஸ் ரா அவர்கள் . வெற்றியோ, தோல்வியோ , விமர்சனங்களோ தன்னை குடைசாய்த்து விடாமல் தொடர்ந்து நவீன இலக்கியத்தில் . அதிலும் சிறுகதை உலகில் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் ஒரு முன்னோடி . இத்தொகுப்பின் தலைப்பே நமக்கு அதனை சொல்லாமல் சொல்லிவிடுகிறது . சைக்கிள் கமலம் என்ற ஞானக்கூத்தன் - அவர்களுடைய கவிதையை ஒரு புள்ளியாக வைத்து எஸ் ரா- ஞானக்கூத்தனின் முதல் சந்திப்பை புனைவாக மாற்றியது ஒரு புதுமையென்றால் , சில நிகழ்வுகளை புனைவுலகத்திற்குள் புகுத்தி ஒரு குறுங்கதையாக மாற்றியதும் ஒரு வகை புதுமை ( சிரிக்கும் பெண் , கறுப்பு பொத்தான் , சர்க்கஸ் புலி ) . இந்த தொகுப்பில் வந்த சிசு குறுங்கதை தான் அவர் மனதில் தொடர்ந்து உருவெடுத்துக்கொண்டே இருந்து பின் சமீபத்திய தொகுப்பான கிதார் இசைக்கும் துறவியில் வந்த தலைகள் இரண்டு என்ற நெடுங்கதையாக உருமாறியது பெரும் ஆச்சர்யம் . ஒரு கதை எழுதி முடிக்கப்படுவதே இல்லை , அது எப்பொழுதும் அந்த எழுத்தாளனுக்குள் உலாவிக்கொண்டே இருக்கும் ஒரு சிசுவைபோல . உருமாறியோ , எடை கூடியோ , சற்று உயரமாகவோ அது மீண்டும் வேறு ஒரு தருணத்தில் பிரசவிக்கப்படும் . அதற்கு அந்த எழுத்தாளன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை , அந்த எழுத்தும் அதன் வாசகர்களும் மட்டுமே போதுமானது .
எஸ் ரா தன் மூத்த படைப்பாளியான ஜி நாகராஜனை போல , அசோகமித்ரனை போல , அவர்களின் உலகத்தை தழுவி ஒரு சில கதைகளை இதில் எழுதிப்பார்த்திருக்கிறார் .குறிப்பாக சினிமா உலகம் ஒட்டி அவர் எழுதியுள்ள "கண்ணனுக்கு தெரியாத நட்சத்திரம் , காலக்கணக்கு& நிஜமான நிழல் " போன்ற கதைகள் சினிமா ஒரு மாய உலகம் - எத்தனை உயிர்கள் அந்த மாய உலகத்திற்குள் தொலைந்துவிடினும் அந்த மாயஉலகின் மேல் உள்ள மோகம் மட்டும் என்றைக்கும் குறைவதில்லை . எஸ் ரா கதைகள் என்றாலே அங்கே வரலாறுக்கும் , புத்தத்துக்கும் நிச்சயம் ஒரு இடமுண்டு - "நோர்பாவின் கல் " -நோர்பாவால் வாழும் மனிதர்களிடம் இருந்து பெற்ற பொருளை எவ்ளவோ முயற்சித்து திருப்பி கொடுக்கமுடிந்தது , ஆனால் இயற்கையிடமிருந்து கொடையாக பெற்ற ஒரு சிறிய கல்லை அதன் இருப்பிடத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை . என்னை பொறுத்தவரை இந்த கதை முடியவில்லை - ஒரு வேலை அந்த கல் அவரை பின்தொடரக்கூடும் தன் நிராசையை சுமந்துகொண்டு , அல்லது நோர்பா பெரும் குற்றவுணர்வோடு அந்த கல்லை நினைத்து , தன் இயலாமையை நினைத்து , இயற்கையிடம் தான் கொண்ட தீராக் கடனை எண்ணி தன் இறுதி நொடிகளை கடக்க வேண்டியும் வரலாம் . எஸ் ராவின் முத்திரை கதைகளாக எனக்கு கிடைத்தது " பாதிக் கோபம் , வெண் நுரை , பேரருவி " எஸ் ரா உலகில் வரும் பெண்கள் நம் வீட்டு பெண்கள் . ஆனால் நாம் பார்க்க தவறிய பெண்கள் . வெண்நுரை கதையில் வரும் ரோகிணி நம் வீட்டு மகள்கள், அப்பாவின் ஸ்பரிசத்திற்காக ஏங்கும் மகள்கள் , ஒரு முறையேனும் அப்பாவை புரிந்துகொள்ள முடியாதா ? என்று தவிக்கும் மகள்கள் . எஸ் ரா எப்பொழுதும் கூறுவது போல் அப்பாக்கள் புரிந்துகொள்ள முடியாத ஒரு உறவுதான் . "பேரருவியில்" வரும் அம்மா - நம்முடைய அம்மாதான் , அவளுக்கு தெரிந்தது எல்லாம் நம் வீடும் , நம் குடும்பமும் , வெப்பமும் , புகையும் , ஓட்டமும் ,நிராகரிப்பும் , ஏமாற்றமும் மட்டுமே . அவர்கள் பறக்க மறந்த , இறக்கைகள் மரத்துப்போன பறவைகள் . அவர்களை எஸ் ரா தன் புனைவின் வழி குற்றால அருவியில் குளிக்கவைக்கிறார் , தன்னிலை மறந்து நீராட வைக்கிறார் , தான் உயிர் பிரிந்த உடலின் கடைசி அணு வரை அந்த அருவியிலே கலந்து என்றைக்கும் அடைபடாத , கட்டுக்கடங்காத ஒரு பேரருவியாக மாற்றிவிடுகிறார் .
எஸ் ராவின் 20 சிறுகதைகளின் தொகுப்பு, பாதி கோபத்துடன் தொடங்கி பேரருவில் முடியும் கதைகள். சில கதைகள் சினிமா உலகம் பற்றியது, இதை நம்பினால் நாம் வாசிக்கும் சினிமா செய்திகளை நாம் உண்மை என்றே என்ன முடியும். ஆனால் சில கதைகள் வாசிக்கும் போது மனதை காயப்படுத்தியது, உதாரணமாக பாதி கோபம், வெண்நுரை, பேரருவி. 2 பக்க சிறுகதைகளும் 20 பக்கம் கதையின் ஈர்ப்பு இருந்தது. வெண்நுரை - ரோகிணியின் அழுகை என்னுடைய பல நினைவுகளை துளைத்தது. பேரருவி - அருவியை இப்படி ஒரு வர்ணிப்பு புதிய அனுபவம். "மலை விடுகிற மூச்சுதான் அருவி. எவ்வளவு வெள்ளையா மூச்சுவிடுது பாரு" "ஒரு இயற்கை நிகழ்வு ஒரு மொழியில் புது அவதாரம் எடுக்கிறது. அதுக்கு பேருதான் கவிதை."
2016ல் வெளிவந்த கதைதொகுப்பு, 20 சிறுகதைகளை கொண்டது. திரு எஸ்.ராமகிருஷ்ணன் தனது முன்னுரையில் "ஒரே நாவுதான் பல மொழிகளையும் பேசுகிறது என்ற ஆப்பிரிக்க பழமொழி சிறுகதை எழுதுகிறவர்களுக்கு மிகவும் பொருந்தக்கூடியது. ஒரே எழுத்தாளன்தான் விதவிதமான கதைகளை எழுதுகிறான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாசனை. நிறம். ருசி. நானும் அப்படியே" என தெரிவித்துள்ளார்.
அது போலவே இப்புத்தகத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு சிறுகதைகளும் தனித்துவமானதாக உள்ளது. அவற்றுள் சில கதைகளை பற்றி...
'பாதிக்கோபம்' எனும் சிறுகதை, புத்திர சோகத்தை யதார்த்தமாக சொல்லும்படியாக படைக்கப்பட்டுள்ளது.
'வெண்நுரை', மனைவியை இழந்த தந்தை மற்றும் அவரது மகளுக்கும் இடையிலான உணர்பூர்வமான புரிதலை சொல்லும் கதை.
'சைக்கிள் கமலத்தின் தங்கை', திருவல்லிக்கேணியில் வாழும் எழுத்தாளர் ஒருவருடன், வாசகன் ஒருவன் நிகழ்த்தும் சந்திப்பை சொல்லும் கதை. அக்கால திருவல்லிக்கேணி நிலைய��யும், அந்த எழுத்தாளர் 'சைக்கிள் விடும் கமலம்' என முற்போக்கான கவிதை எழுதியதை பற்றியும் அவர்களுக்குள் பேசப்படுவதாக செல்லும் கதை .
'கண்ணுக்கு தெரியாத நட்சித்திரம்' மற்றும் 'காலக்கணக்கு', கிட்டத்தட்ட ஒரேவிதமான சினிமா மனிதர்களின் கதை. சினிமா உலகை எந்த அளவுக்கு ஒருவன் நேசித்து, தன் வாயால் பல வாய்ப்புகளை இழந்தாலும், அவமானப்பட்டாலும், மீண்டும் மீண்டும் அதனை நோக்கியே பயணப்படுபவனின் கதை.
'சிசு' - ஐந்து மாத சிசுவை உயிர்க்காட்சி சாலைக்கு கொடுத்த கணவன்-மனைவியின் கதை.
'கிளாடியின் மரணம்: சில காரணங்கள்' - கிளாடி என்பவன் ஆங்கிலேய வித்துக்கும் தமிழக கூலி பெண்ணொருத்திக்கும் பிறந்தவன். ஆணவம், குரூரம், வக்கிரம் என அனைத்து தீக்குணங்களின் உருவானவன். அவனும் அவனது மகன்களும் ஆடிய ஆட்டத்தையும் முடிவையும், அவனால் தோட்ட தொழிலாளர்கள் அடைந்த துயரையும் சொல்லும் கதை.
'நோர்பாவின் கல்' - பௌத்த துறவி தான் வாழ்நாளில் பெற்ற புத்தகம், குடை, கல் போன்ற பொருட்களை, திருப்பி உரியவரிடம் சேர்க்கும் படியான கதை. மிகைபுனைவான விவாதங்களாலான கதை.
'கறுப்பு பொத்தான்' - நான்கு பரத்தையர்கள் தாம் அடைந்த அவமானங்களை சொல்லும் கதை. கடைசியானவளின் வாடிக்கையாளன் கொண்ட கருப்பு மச்சத்தினால் அவள் அடைய இருந்த கொடுஅவமானம், வந்து விலகியதை சொல்லும் கதை.
'புகை படிந்த நாள்' - பட்டப்பகலில் கடைத்தெருவில் நிகழும் கொலையை பார்த்தவன் ஒருவனின் அன்றைய (புகை படிந்த)நாளுக்கான கதை. கொலை தொடர்பான, அதன் சாட்சியாக இருந்தவர்கள், செய்தியாளர்கள் என நிகழ்கால நிதர்சனங்களை பொருத்தி, அது தொடர்பாக தன்னுள் கேள்வி கொக்கிகளை அடுக்கி கொண்டே செல்கிறான்.
'நிஜமான நிழல்' - நடிகை ஒருவள் தான் பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுக்கும் கதை.
இப்புத்தகத்தின் அனைத்து கதைகளுக்கும் மகுட ரத்தினமாக, 'பேரருவி' கதையை சொல்லலாம். தாயானவள் தன் அனைத்து ஆசைகளையும் அடக்கி வைத்து, கணவனுக்கும் பிள்ளைக்குமாய் தினமும் மாய்ந்து ஓய்ந்து கிடப்பவள், வருடம் ஒருமுறை செல்லும் குற்றால அருவி பிரயாணித்திற்காய் காத்திருக்கிறாள். பின்பு, அப்பேரருவியில் ஒரு வாரத்திற்கு சென்று தாம் தங்கிய நிகழ்வுகளை, அவளது மகனின் பார்வையிலிருந்து படம்பிடிக்கிறது இக்கதை. அவளின் கடைசி ஆசையான 'சாம்பலும்' அப்பேரருவியில் கரைக்க படவேண்டுமென்பது உட்பட.
ஒவ்வொரு கதையின் முடிவிலும் நாம் விடுவிக்கும் பெருமூச்சு சொல்லும், இக்கதைகளின் கனத்தை. வலிகளையும் துக்கங்களையும் மிக அற்புதமான வர்ணிப்புகளின் மூலம், காட்சிப் படுத்தியிருக்கிறார், திரு எஸ்.ராமகிருஷ்ணன். இக்கதைகள், புனைவு மனிதர்களின் வலிகள் என்றாலும், இவ்விதமான வலிகளும் துக்கங்களும் வேறுவேறு வழியில் நாம் நிதமும் சந்திக்கின்றோம், சில சமயங்கள், இது போன்ற கதைகளை வாசிக்கையில் கரைந்தும் மூழ்கியும் போகின்றோம் !
எஸ்.ரா அவர்களின் புத்தகத்தை கையில் எடுப்பதற்கு முன்பாகவே ஒரு சிறு பரபரப்பு எப்போதும் ஒட்டிக் கொள்வதை தடுக்க முடிவதில்லை. அது போன்றதொரு நிலை தான் இந்த சைக்கிள் கமலத்தின் தங்கை என்ற சிறுகதை தொகுப்பிற்கும் இருந்தது. சில முறை யோசிப்பதுண்டு, வேகமாக நம்மை தன் உலகத்தில் இழுத்து சென்று, இருத்திக் கொள்ளவும் செய்யும் புத்தகங்கள் என்ன வகையாக இருக்கும் என்று! அந்த வரிசையில் இந்த தொகுப்பையும் மிக விரைவில் வாசித்து முடித்தாயிற்று.
கோயிந்துவும் திலிப்குமாரும், அருணகிரியும் மகேந்திரக்குமாரும், மகாஸ்ரீயும் ஷ்யாமும் பல்வேறு கோணங்களில் திரைத்துறையின் ஊடே நம்மை அழைத்து செல்கின்றனர். நாம் பார்க்கும் நட்சத்திரங்களை தாண்டியும் அதற்கு கீழேயும் ஓர் உலகம் மாபெரும் கனவுகளின் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதை எஸ்.ரா அவர்கள் எழுத்திற்குள் வரைந்து காண்பிக்கிறார். நொறுக்கப்பட்ட கனவுலகம் என்று சொல்வதே சரியானதாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
கவிஞர் ஞானக்கூத்தனை தேடி அலையும் நாதனின் எண்ணங்கள், அவனின் தவிப்புகள், ஒரு முறை பேச முடியாதா என்ற ஏக்கங்கள் என்று சைக்கிள் கமலத்தின் தங்கை கதை வெவ்வேறு சூழலில் திருவல்லிக்கேணியில் பிராயணப்படுகிறது. உயிர்ப்பான கதை சொல்லல் என்றே எளிதில் கடந்து போக முடியாத ஒரு கதை.
முகந்தெரியாத நபரின் கொலையில் கூட சந்துருவம் அவன் மனைவியும் தேடிக்கொள்ள நினைக்கும் நிர்கதி நிலைகளை நிச்சயம் படிக்கையில் அறிந்து கொள்ளுவீர்கள்.
மிகவும் நேர்த்தியாக சொல்லப்பட்ட நோரஃபாவின் கல் என்ற பௌத்த துறவியின் கதை. படித்த புத்தகம், படிக்காத புத்தகம் இரண்டுமே வேறு வேறு என்பதை டோஜியின் மகன் விளக்கும் போது, அட சரிதானே என்று தோன்றும் எண்ணங்கள், உலகின் முதல் பூட்டு கல் என்றும் , அதற்கான சாவியும் கல்லே என்று விளக்கும் லோமாங் என்ற விவசாயின் எண்ணங்களும் எஸ்.ரா அவர்களின் வாசிப்பின் ஆழத்தையும் சேர்த்தே காட்டி செல்கிறது. மறைந்து போன ஆற்றின் சாட்சியான கடைசி கல்லை நோர்பா என்ன செய்தார்???
கிணற்றின் தவளையை ஒப்பிட்டு பார்க்க செய்யும் சர்க்கஸ் புலி என்ற கதை, பெண்களுக்கும் நீருக்குமான உருக்குத்தை, நெருக்கத்தை குற்றால சாரலில் சொல்லும் கதை , இப்படி 20 கதைகள் அடங்கிய அழகிய தொகுப்பு.
இந்த தொகுப்பில் என்னை மிகவும் சலனத்திற்குள்ளாக்கிய கதைகளின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன். பாதிக்கோபம், வெண்நுரை, கிளாடியின் மரணம்: சில காரணங்கள், பேரருவி! படித்துப் பாருங்கள்.....