"அம்மா ஒரு கொலை செய்தாள் "
சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் : அம்பை
காலச்சுவடு பதிப்பகம்
279 பக்கங்கள்
"பேரோசையோடு ஒரு மெல்லிய ஒளிக்கீற்று "
இந்த புத்தகத்திற்கும் , அதன் எழுத்தாளருக்கும் வாசக உலகில் எந்த ஓர் அறிமுகமும் , முன்னுரையும் தேவையில்லை . இவரை பற்றியும் , இவருடைய எழுத்து மற்றும் கதைகளை பற்றி பல வருடங்களாக பல மனிதர்கள் பல சூழல்களில் பேசியும் எழுதியும் உள்ளனர் . இருந்தாலும் இந்த காலகட்டத்திலும் இவரை பற்றியும் இவருடைய எழுத்து பற்றியும் அறியாத பலருக்கும் இந்த மதிப்புரை உபயோகப்படும் என்று நம்புகிறேன் . பெண்ணை எழுதுவது என்பது தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு மொழிகளில் தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் ஒரு பெரும் செயல்பாடு . அது இன்றுவரை எந்த வித தொய்வும் இன்றி அந்த அந்த காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களுடன் நிகழ்ந்த வண்ணம் இருந்ததால் , பெண்ணை பற்றி யார் எழுதுகிறார்கள் என்பதில் தான் அந்த ஆழம் பொருந்தியுள்ளது . ஒரு பெண்ணை பற்றி ஆண் எவ்வளவு ஆழமாக எழுத முற்பட்டாலும் அவன் ஒரு கட்டடத்தில் தோற்று , தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கிவிடுகிறான் .ஏனெனில், பெண் வாழ்க்கையின் ஆழமோ , மனதின் ஆழமோ அது அவளுக்கு மட்டுமே புலப்படக்கூடிய ஒன்று . அதனால்தான் ஒரு பெண் பெண்ணை பற்றி எழுதுவது என்பது அந்த ஆழத்தின் அடி வேர் வரை சென்று அதன் வெக்கையை நமக்குள் கடத்த முயற்சிக்கும் ஒரு பெரும் செயல் . அதில் வெற்றி தோல்வி என்பதை தாண்டி புரிந்துகொள்ள முடியாத அல்லது இதுவரை புரிந்து கொள்ளவே முயற்சிக்காத ஒரு இருளின் மீதான ஒரு ஒளிக்கீற்று படர்வதுபோல . ஒளியின் அளவோ , அடர்த்தியோ , விஸ்தாரமோ அங்கு முக்கியமில்லை , அந்த ஒளியின் வழி பார்ப்பவர்கள் பார்த்ததையும் , இப்படித்தான் பார்க்க வேண்டும் என்பதையும் பழகிக்கொள்வார்கள் . அந்த வகையில் அம்பை ஒரு மெல்லிய ஒளிக்கீற்றை வீசிப்பார்க்கிறார் இந்த தொகுப்பு முழுக்க .
இந்த தொகுப்பு முழுக்க பெண்கள் , பெண்கள் , பெண்கள் .......பெண்களால் நிறைந்த , நிரப்பப்பட்ட ஒரு புத்தகம் . தி ஜாவை தொட்டு என் இலக்கிய வாசிப்பை தொடங்கியவன் என்ற முறையில் பெண்களின் உலகம் எனக்கு அறிமுகமான ஒன்றாக இருந்தாலும் , அம்பை காட்டும் இந்த பெண்களின் உலகம் முற்றிலும் மாறுபட்டது . என்ன மாறுதல் ? இதுவரை பெண்களை பற்றி படித்த நான் அந்த கதையை தாண்டி அதனை பற்றி நான் எந்த பெண்ணுடனும் உரையாடியது இல்லை . ஆனால் , முதல் முதலாக "அம்மா ஒரு கொலை செய்தாள்'' என்ற கதையை வாசித்து முடித்த உடன் என் மனைவியிடம் அவளுடைய பருவமெய்திய அந்த முதல் நாள் , அந்த நொடிப்பொழுதின் உணர்வுகளை பற்றி ஒரு உரையாடல் மேற்கொண்டேன் . அந்த உரையாடலை நான் ஏன் திருமணமாகி இத்தனை ஆண்டுகளாக நிகழ்த்தவில்லை ? அந்த ஒரு கதையில், அந்த ஒரு நொடியில் , அந்த ஒரு உரையாடலில் எனக்கும் என் மனைவிக்கும் அம்பை ஒரு எழுத்தாளர் என்ற கோட்டை தாண்டி எங்கள் அருகில் வந்துவிட்டார் . ஒரு தொகுப்பில் எத்தனை கதைகள் இருந்தாலும் ஒரு கதை போதும் வாசகனும் எழுத்தாளனும் அருகில் வர . இதுதான் இலக்கியத்தின் பலம் , வெற்றி , உயிர்ப்பு , வீரியம் எல்லாமே .
இந்த தொகுப்பு முழுக்க வாசித்த பின் அம்பை எனும் எழுத்தாளரை தாண்டி , அம்பை எனும் பெண்ணை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . தன் கதைகளுக்கு தான் சேகரித்த பெண்களின் வாழ்க்கையை சில நேரங்களில் அப்படியே படம் பிடித்து காட்டினாலும் , சில நேரங்களில் தான் விருப்பப்பட்ட முடிவை அவர்களின் வாழ்க்கைக்குள் புகுத்தி பார்க்கிறார் . தான் விருப்பப்பட்டு சிறகிருந்தும் சிறகடிக்காமல் தவிக்கும் பறவைகளை சிறகுகள் முறியும் என்று கூறுகிறார் , அதே வேலையில் சில பறவைகளுக்கு அதன் சிறைகை கட்டவிழ்த்து விடும் கருவியாகவும் இருக்கிறார் அம்பை . அவருடைய பயணம் எண்களில் வரும் கதைகள் அனைத்தும் அவருடைய சொந்த பயணங்கள் தான் என்று நமக்கு விளங்கினாலும் , அங்கு அம்பை இருந்ததால்தான் அது இலக்கியமிக்க ஒரு கதையாக மாறியிருக்கிறது .
இந்த தொகுப்பில் பல கதைகளில் ஒரே கருவை வைத்து கொண்டு வேறு வேறு விதமான முடிவுகளை எழுதிப்பார்த்திருக்கிறார் . பெண்கள் பருவமடைதலும் ஒரு குற்றம் , பருவமடையாவிட்டாலும் ஒரு குற்றம் என்று " அம்மா ஒரு கொலை செய்தாள் - காட்டில் ஒரு மான் " என்ற கதைகளின் வழி இரு வேறு துருவங்களை ஒரே நேர்கோட்டில் வைத்து காட்டுகிறார் . அதே போல தன் விருப்பமின்றி தன் கருவை இழக்கும் வலியை விதியின் வழியாகவும் , வாழ்வின் எதார்தத்தின் வழியாகவும் " மஞ்சள் மீன் - நிலவை தின்னும் பெண் கதைகள் மூலம் அறிகிறோம் .
இசைக்கும் - அம்பைக்குமனா உறவு பிரிக்க முடியாத ஒன்று என்பது இந்த தொகுப்பின் " மல்லுக்கட்டு , அசர மரணங்கள் , காவு நாள் ," போன்ற கதைகளின் வழி நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது . " வீணைகளுக்கென்று ஒரு சவக்கிடங்கு உண்டோ ?" என்று அவர் வினவுவதில் எத்தனை தவிப்பும் ,பற்றும் ,பரிவும் இசைமேல் அவருக்கு உள்ளது என்பது தெரிகிறது .
"மல்லுக்கட்டு" -இசை தான் தன் வாழ்வு என்றிருந்த செண்பகம் தன் குருவிற்காக தன் வாழ்க்கையும் , ஏன் தன் இசையையும் ஒப்புக்கொடுக்க துணிகிறாள் .
"காவு நாள் "- இசையை மட்டுமே அறிந்து , தன் கனவுகளை களைய வந்த திருமண வலையில் சிக்கி இசையும் இழந்து . தன்னையும் இழந்து தவித்தவள் தன் தலை நரைத்த நேரத்தில் தன் சிறகை விரித்து பறக்க தொடங்குகிறாள் பிரமரா .
" அசர மரணங்கள் "- இந்த கதையில் வரும் கறுப்பி எனும் வீணைக்கு வயது 100.நம்ப முடிகிறதா ? இதை விட பேரதிசயம் அந்த வீணையும் தன் துனையாளோடு அவள் கலந்து கறைந்து போன நர்மதை நதி கரையிலே இறந்த பின்னும் அவளோடு நீக்கமுடியா இசையாக கலந்து விடுகிறது .
இந்த புத்தகம் முழுக்க ஒருவரால் வாசிக்க முடியாமல் போனாலும் , தவறினாலும் பரவாயில்லை , ஒரே ஒரு பத்தி , சில வரிகள் " வீட்டின் மூலையில் ஒரு சமையலறை " என்ற கதையில் வரும் ஒரு அரைப்பக்கம் கொண்ட ஒரு பத்தியையாவது நீங்கள் நிச்சயம் வாசிக்க வேண்டும் . ஒரு பருவ பெண் தன் வீட்டின் முதிர்ந்து தள்ளாடும் ஒரு பெண்ணின் உடையை அகற்றி மாற்றும் ஒரு காட்சி . உலக இலக்கியத்தில் இப்படி ஒரு காட்சியை , நிகழ்வை இதற்கு முன் எங்கேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா ? என்பது சந்தேகம் தான் . " வாழ்ந்த உடம்பு . சிறுநீர் , மலம் , ரத்தம் , குழந்தைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தியிருந்த உடம்பு . எத்தனை தடங்கள் அதில் !" இப்படி முடிகிறது அந்த பத்தி .
பெண்களை புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன் என்று சொல்லி அவர்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தாமல் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் விருப்பப்படி வாழ வழி விடுவோம் , முடிந்தால் அந்த வழியில் நாமும் பயணிப்போம் .பயணத்தின் வழி பாதைகள் பிரியலாம் , இணையலாம் , குறுகலாம் , விரியலாம் , அத்தனையும் விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக்கொண்டு இலக்கினை கருத்தில்கொள்ளாமல் , பயணத்தை நேசிப்போம் சக பயணியோடு அவ்வளவுதான் வாழ்கை . பெண்களை உடலுக்கும் , உள்ளத்திற்கும் , உணர்விற்கும் காயம் ஏற்படுத்தியவர்கள், தனக்கே தெரியாமல் ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகமாக நான் இதனை பரிந்துரைக்கிறேன் .
--இர.மௌலிதரன்
13-12-23