ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு ரசிகன் இருப்பான். கண்ணம்மா ஒரு ஆண் ரசிகனின் ரசனைத் தொகுப்பு. ஒரு ஆணின் கண்களில் தென்படும் பெண்களை நினைத்து அவன் ரசிக்கும், சிலாகிக்கும், வர்ணனை செய்யும், கற்பனை செய்யும் வரிகளை அவன் மொழியிலேயே விவரிக்கும் முயற்சி. குறைந்த வரிகளில் வார்த்தை ஜாலத்தில் மாயம் செய்ய முயற்சி செய்திருக்கிறேன்.
யார் அந்த கண்ணம்மா ?
'கூட்டமான பேருந்தில் ஓட்டுநர் அருகில் நின்று பயணச்சீட்டு வாங்குவதற்கு சில்லறையை நடத்துநருக்கு அனுப்பிவிட்டு டிக்கெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும்போது கட்டுமரம் போல கை மாறி மாறி தவழ்ந்து வந்து கொண்டிருக்கும் டிக்கெட் ஒரு அழகான ‘பெண்ணின்’ -கையை கடக்கும்போது நாம் திடீரெனெ அந்த பெண்ணின் முகத்தை காண முயற்சிப்போம். ஒருவேளை அவள் பார்வை நம்மை தீண்டிவிட்டால் ஒரு நிமிடம் உடலெல்லாம் ஏதோ செய்யும். அப்படி செய்தால் ? ' - அவள்தான் கண்ணம்மா.
'இரவு 2 மணிக்கு தூக்கம் வராத இரவில் எழுந்து நடந்து வீட்டின் பால்கனி-க்கு வந்தால், எதிர்வீட்டு பால்கனியில் செல்போன் ஒளியால் முகத்தில் மேக்கப் அணிவித்த பெண்ணொருத்தி நின்றிருப்பாள்.' - அவள்தான் கண்ணம்மா.
'போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் 10 பேர் கூட்டமாக சேர்ந்து மிகப்பெரிய வாகனத்தைக் கூட சடாரென நிறுத்தி கடந்து செல்வர். அதில் 100 டிகிரி வெயிலில்கூட ஒரு பார்வையால் நம் மனதை ஜில்லென வருடிச் செல்வாள் ஒருத்தி' - அவள்தான் கண்ணம்மா.
'சிறுவயதில் பென்சிலுக்கும் ரப்பருக்கும் சண்டை போட்ட பெண்தோழி ஒருத்தி திடீரென ஒரு குறுஞ்செய்தி மூலம் மீண்டும் நம் வாழ்வில் இணைந்து ஒவ்வொரு நொடியையும் அழகாக்கிடுவாள்' - அவள்தான் கண்ணம்மா.
'அலுவலகத்திலோ, பக்கத்து வீட்டிலோ, கல்லூரியிலோ ஒரு பெண்ணை நாம் தினந்தோறும் கடந்து வரவேண்டியிருக்கும். ஏதோ ஒரு காரணத்தினால் அந்த உறவு திருமணத்தில் முடியாது என மனம் ஆணித்தனமாக நம்பும். ஆனாலும் அவள்மேல் இருக்கும் பாசமோ, அக்கறையோ, அன்போ கொஞ்சமும் குறையாமல் இருக்கும்' - அவள்தான் கண்ணம்மா
'கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது நம் முன்னால் ஒரு பெண்ணொருத்தி நடந்து செல்வாள். தலை குளித்த தன் கூந்தலின் வாசம் அவள் வைத்திருக்கும் மல்லிப்பூவின் மேல் படந்திருக்க, அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் காற்று திருடி வந்து நம்மிடம் சேர்க்கும். அவளை ரசித்தபடியே கோவிலை சுற்றி வர இறுதி வரை அவள் முகத்தை காணாமலேயே போய்விடும். ஆனால் அவள் பின்னழகு மட்டும் நம் மனதுடன் பிண்ணிக்கொள்ளும்' - அவள்தான் கண்ணம்மா.
'ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான பகுதி காதல். காதல் என்னும் புனித கடலின் கடல்கன்னியே, காதலி.’ - அவள்தான் கண்ணம்மா
'எங்கோ பிறந்து காதலில் இணைந்து திருமணம் என்னும் அற்புதமான நிகழ்வில் வாழ்க்கைத் துணையாகி ஒரு கடவுள் போல நம்மை வாழ்க்கை முழுதும் பாதுகாக்கும் மனைவி'- அவள்தான் கண்ணம்மா
இப்படியான கண்ணம்மாக்களின் தொகுப்பே கண்ணம்மா.இந்த தொகுப்பு ஆண்கள் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் இணைக்கும் என்று நம்புகிறேன்.
புத்தகத்தின் பெயர் : கண்ணம்மா எழுத்தாளரின் பெயர் : மனோபாரதி பதிப்பகத்தின் பெயர் : எழுத்துப்பிழை பக்கங்கள் : 85 ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் கடக்கும் / சந்திக்கும் பெண்களின் தொகுப்பே இந்த கண்ணம்மா. தாரமாய் , காதலியாய், பயணத்தில் சந்திக்கும் அந்த ஒரு சக பயணியாய் இன்னும் பல…….. ஆண்கள் மட்டும் இல்லாமல், படிக்கும் பெண்களும் ஏதாவது ஒரு பக்கத்திலாவது தன்னையே காண்பார்கள்… 70+ க்கும் அதிகமான கவிதைகள் கொண்ட புத்தகம், எனக்குப் பிடித்த சில வரிகள், பேரழகை ஊழல் செய்த ஜாதி அவள்….. என் பொஞ்சாதி… கண்ணம்மா காதோரம் அவிழ்ந்து விடும் உன் கூந்தலாக பிறக்க ஆசை ….. நிமிடத்திற்கு இரண்டு முறையாவது அதனைத் தொட்டுவிடுகிறாய்….. கண்ணம்மா மருதாணியே வெட்கப்பட்டுச் சிவந்தது உன் கைகளில் …. கண்ணம்மா நீ கைகோர்க்கும் போது நம் ரேகைகளும் சேர்ந்தே காதலிக்கும்… கண்ணம்மா நெகிழி போல் நம் காதல்….. நான் நினைத்தாலும் நீ நினைத்தாலும் அழிக்கமுடியாது… கண்ணம்மா Earphone இல்லா நெடும் பயணத்தில்…. தூரத்திலிருந்து தேன் தெளிக்கும் இளையராஜா நீ…. கண்ணம்மா மிகவும் அழகான வாசிப்பு, வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பாருங்கள் எழுத்தாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும். புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி . Happy reading ….. Subasreenee Muthupandi
தமிழ் கவிதை புத்தகம் என வந்து விட்டால் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு அதிலே மூழ்கி போகும் பழக்கம் எனக்கு! மனோபாரதியின் கவிதை தொகுப்பு வாங்கி ய அதே தினமே அதை படித்து முடித்தேன்.. இன்னும் ரசித்து தீர்க்கவில்லை.
அவள் தான் கண்ணம்மா, இவள் தான் கண்ணம்மா என்று கண்ணம்மாக்களை கவிதையாய் கோர்த்திருக்கிறார்.
கண்ணம்மா க்கு யாராவது definition கேட்டா இதை கொண்டு போய் நீட்டலாம்!
என்னை ரசிக்கவும் சிர்க்கவும் சிலிர்க்கவும் செய்தது இந்த அழகிய தொகுப்பு!
குறுந்துளிக் கவிதைகள்.... கண்ணம்மா வாசித்து முடித்த பின்னும் மீண்டும் பக்கங்களை புரட்ட வைக்கிறாள். வண்ண வண்ண ஓவியங்கள் கவிதைகளின் அழகை காற்று போல் வாசிப்பவர்களையும் பறக்க விடுகிறது.